நாகாலாந்து மாநிலத்தை பதற்றமான பகுதியாக 6 மாத
காலத்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக மத்திய உள்துறை
அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில்
தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஒட்டுமொத்த நாகாலாந்து மாநிலமும் பதற்றமான மற்றும்
அபாயகரமான பகுதியாகவே உள்ளது. ஆகையால், நாகாலாந்தில் காவல்பணியில் மத்திய
பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே, நாகாலாந்து முழுவதும் 1958ஆம் ஆண்டு ஆயுதப்
படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் 3ஆவது பிரிவு மத்திய அரசால்
பிரகடனம் செய்யப்படுகிறது. இந்த பிரகடனமானது, 2016ஆம் ஆண்டு ஜூன் 30ஆம்
தேதி (வியாழக்கிழமை முதல்) முதல் அடுத்த 6 மாத காலத்துக்கு அமலில்
இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகாலாந்தில் 1958ஆம் ஆண்டு ஆயுதப் படைகள் (சிறப்பு
அதிகாரங்கள்) சட்டத்தின் 3ஆவது பிரிவு அமல்படுத்தப்பட்டு உள்ளதன் மூலம்,
மத்தியப் பாதுகாப்புப் படையினர் விரும்பும் இடங்களில் சோதனை மேற்கொள்ளவும்,
விரும்பியவர்களை வாரண்டு இல்லாமல் கைது செய்யவும் முடியும் என்பது
குறிப்பிடத்தக்கது.
நாகாலாந்து மாநிலத்தை மத்திய அரசு ஏன் பதற்றமான
பகுதியாக அறிவித்திருக்கிறது என்பது குறித்து அறிவிக்கையில்
குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், "பல
ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருக்கும் உத்தரவுதான்
தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது; என்எஸ்சிஎன்-ஐஎம் அமைப்பு மத்திய
அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், மற்றோர் தீவிரவாத
அமைப்பான எஸ்எஸ் காப்லாங் தொடர்ந்து மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில்
வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. அதை கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பை அரசு
வெளியிட்டுள்ளது' என்றனர்.
தில்லியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த
நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் (என்எஸ்சிஎன்-ஐஎம்) தலைவர் ஐசக் சிஷி
ஸ்வு அண்மையில் உயிரிழந்தார். அவரது மறைவையடுத்து 3 நாள்களுக்கு பிறகு,
நாகாலாந்து மாநிலத்தை பதற்றமான பகுதியாக மத்திய அரசு அறிவித்திருப்பது
முக்கியத்துவம் பெறுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...