கற்பித்தலை மேம்படுத்த புதிய முயற்சிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன என்று மக்களவையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின் போது விழுப்புரம் தொகுதி
அதிமுக உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன், "வெளிநாடு பல்கலைக்கழங்களில் இந்திய
மாணவர்கள் சேர்க்கையின் போது திறன்சார் விஷயங்களில் நெருக்கடியைச்
சந்திக்கின்றனர். ஆகவே, கற்பித்தல் முறையை மேம்படுத்த ஏதேனும் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதா?' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்,
"தரமான உயர் கல்வியும், கற்பித்தலும் மிகவும் முக்கியமானவை. ஆகவே,
கற்பித்தலை மேம்படுத்த புதிய முயற்சிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்காவும், தொடர் கல்வி, தரமேம்பாட்டுக்காவும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அனைத்துப் பணியிடங்களையும்
நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் கல்லூரிகளிலும் கூட
கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது' என்றார்.
கல்வி உரிமைச் சட்ட நிதி: மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்
டி.ரத்தினவேல் திங்கள்கிழமை சிறப்பு கவனக் குறிப்பை தாக்கல் செய்து
பேசுகையில், "தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டம் சிறப்பாக அமல்படுத்தப்பட்டு
வருகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில்
2013-14-ஆம் கல்வியாண்டில் 49,864 மாணவர்களும், 2014-15-ஆம் ஆண்டில் 86,729
மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கான செலவு ஈட்டுத் தொகையாக முறையே
ரூ.25.14 கோடி மற்றும் ரூ.71.91 கோடி ரூபாய் என தமிழக அரசு கணக்கிட்டு
வழங்கியுள்ளது. அந்த வகையில் ரூ.97.05 கோடியை மத்திய அரசு தமிழகத்திற்கு
வழங்க வேண்டியுள்ளது. இத்தொகையை விரைந்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...