பி.எட். சேர்க்கைக்கு ஜூலை 4-ஆம் வாரத்தில் விண்ணப்பங்கள்
விநியோகிக்கப்பட்டு, செப்டம்பர் 2-ஆவது வாரத்துக்குள் கலந்தாய்வை நடத்தி
முடிக்கப்படலாம் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் கல்வியியல் இளநிலைப் படிப்பான பி.எட். கலந்தாய்வு வழக்கமாக செப்டம்பர் கடைசி வாரத்தில் தொடங்கப்பட்டு, அக்டோபரில் முடிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு விரைவாக நடைபெற உள்ளது.ஆசிரியர் படிப்பின் தரத்தை உயர்த்துவதற்காக பி.எட். படிப்பை ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் கலந்தாய்வு தாமதமாக நடத்தப்பட்டு, வகுப்புகளும் தாமதமாகவே தொடங்குவதால் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்க முடியாமல் போவதோடு, 3-ஆம் பருவத்தில் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய 4 மாத ஆசிரியர் பயிற்சியும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இதுமட்டுமின்றி, இந்த 4 மாத ஆசிரியர் பயிற்சிக்கு பெரும்பாலான பள்ளிகள் அனுமதியை மறுத்து வருகின்றன. அதிகபட்சம் 2 மாதங்கள் மட்டுமே அனுமதிக்கின்றனர்.இதுபோன்ற பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், கலந்தாய்வை முன்கூட்டியே நடத்துவதோடு, 4 மாத பயிற்சிக்கு பள்ளிகள் அனுமதிக்க வேண்டும் என உறுதியான உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று பி.எட். கல்லூரி பேராசிரியர்கள் வலியுறுத்திவந்தனர்.
முன்கூட்டி தொடங்கத் திட்டம்?
இந்த நிலையில், 2016-17 கல்வியாண்டுக்கான பி.எட். கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் திட்டிமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.ஜூலை இறுதி வாரத்தில் விண்ணப்பங்களை விநியோகிக்கவும்,செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் கலந்தாய்வை நடத்தி முடித்து, உடனடியாக முதலாமாண்டு வகுப்பகளைத் தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...