மற்ற எந்த பொருள் மீதும் வராத சந்தேகம், தேன்
என்றவுடன் ’அசல்’ தானா ? என்ற சந்தேகம் நம்மில் ஏறத்தாழ 99 சதவீதம்
பேருக்கு வருவது சகஜம் ! காரணம் தேன் மட்டுமல்ல விலை அதிகமுள்ள அனைத்து
பொருள்களிலும் கலப்படம் செய்வது என்பது நம் நாட்டில் சகஜம்.
இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில்
மற்ற பொருள்களில் உள்ள கலப்படத்தை பற்றி அதிகம் கண்டு கொள்ளாத மக்கள் தேன்
என்றவுடன் ’ஒரிஜினல்’ தானா ? என்று ஆராய்வது பிரபல்யமாகி விட்டதால் இது
கொஞ்சம் வித்தியாசமாக தென்படுகிறது.
உதாரணமாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலை
எடுத்துக் கொண்டோமானால் அதில் பல்வேறு விதமான கலப்படங்கள் செய்வதாக
செய்திகள் வெளியாகினறன. சமீபத்தில் ஒரு பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில்
நேரடியாக பதிவு செய்த காட்சிகள் காண்பிக்கப்பட்டன. தண்ணீரை அதிகம்
கலந்தாலும் தெரியாமல் இருப்பதற்காக மரம் ஒட்ட பயன்படுத்தும் பசையை கலப்பது
கண்பிக்கப்பட்டது. அதே போல் நுரை வருவதற்கு சோப்புத்தூள் போன்ற பொருட்களை
பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. தேனைவிட பால் அன்றாடம் பயன்படுத்தும்
அத்தியாவசிய பொருளாகவும் பச்சிளம் குழந்தைகளுக்கு உணவாக
பயன்படக்கூடியதாகவும் இருக்கிறது.
எனவே தேனில் காட்டக்கூடிய அதே விழிப்புணர்வை மற்ற பொருட்களிலும் காட்ட வேண்டும் என்பதுதான் நமது ஆசையாகும்.
அசல் தேனை கண்டுபிடிக்க நம்மவர்கள் சொல்லும் வழிமுறைகள் என்னென்ன என்று பார்ப்போம் !
– அசல் தேனை நாய் நக்காது !
– சுத்தமான தேனில் எறும்பு ஏறாது !
– கிளாஸ் தண்ணீரில் தேனை விட்டால் கரையாமல் அடிக்கு சென்று விடும் !
– பேப்பரில் ஊத்தினால் பேப்பர் நனையாது /ஊறாது
– நெருப்பில் எரியாது
போன்றவை பிரபலமானவையாகும்..
ஆனால் அறிவியல் பூர்வமாகவும் சரி, சாதரணமாக
பரிசோதித்து பார்த்த வகையிலும் சரி மேற் சொன்ன எதுவுமே சுத்தமான தேனை
கண்டுபிடிப்பதற்கு சரியான முறை இல்லை என்பது நிரூபனமாகி இருக்கிறது.
பல நேரங்களில் கலப்படத்தேனும் இந்த பரிசோதனைகளில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறது.
எனவே, நீங்கள் செய்த சோதனையில் வெற்றி பெற்றது அசல் தேனா அல்லது போலி தேனா என்பதை எப்படி முடிவு செய்வீர்கள் ?
எனவே, சுத்தமான அசல் தேனை நாமே கண்டுபிடிக்க
இதுவரை எந்த நிரூபிக்கப்பட்ட வழிமுறையும் கண்டுபிடிக்கப்படவில்லை
என்பதுதான் உண்மை. இருக்கும் ஒரே வழிமுறை அதற்குரிய பரிசோதனை
சாலையில் பரிசோதித்து பார்ப்பதுதான்.இது எல்லா நேரங்களிலும், எல்லோருக்கும்
சாத்தியபடாது என்பதால் தேன் வாங்கும் போது ஒரு சில வழுமுறைகளை கையாண்டால்
ஓரளவு ஏமாற்றப்படாமல் இருக்கலாம்.
– நமக்கு தெரிந்த நம்பிக்கையான விவசாயிகள் அல்லது தேன் வளர்ப்பவர்களிடமிருந்து வாங்கலாம்.
– இந்தியாவை பொறுத்தவரை “அக்மார்க்” சின்னம்
பொதித்த உணவுப்பொருட்களின் தரம் பரிசோதித்து பார்த்த பின்னரே
அனுமதிக்கப்படுகிறது. எனவே அக்மார்க் முத்திரையிடன் கூடிய தேன் மற்றவற்றை
விட அதிக தரத்துடன் இருக்கும் என்பதை நம்பலாம். மேலும் அக்மார்க்
முத்திரையுடன் கூடிய தேன் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை
நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடும் பெறலாம் என்பது
கூடுதல் அனுகூலமாகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...