காரைக்கால் மின் துறை, பள்ளிகளில் புதுச்சேரி அமைச்சர்
ஆர்.கமலக்கண்ணன் புதன்கிழமை ஆய்வு நடத்தினார். மின் துறை அலுவலகத்தில் உரிய
நேரத்தில் பணிக்கு வராதவர்களிடம் விளக்கம் கோருமாறு அதிகாரிக்கு
உத்தரவிட்டார்.
புதுச்சேரி மின் துறை, கல்வித் துறை அமைச்சர்
ஆர்.கமலக்கண்ணன், காரைக்காலில் மின் துறை தலைமை அலுவலகத்திற்கு புதன்கிழமை
காலை 9 மணிக்குச் சென்றார். அலுவலகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கும்
சென்றபோது, ஊழியர்கள் பலர் பணிக்கு வராதது தெரிய வந்தது. இதுகுறித்து
செயற்பொறியாளர் ராஜேஷ்சன்யாலிடம் கேட்டார்.
புதுச்சேரியில் முதல்வர் வி.நாராயணசாமி அலுவலகங்களில் ஆய்வு
நடத்தி,நேரத்திற்கு வராதோர் மீது நடவடிக்கை எடுக்கக் கூறியது குறித்து,
காரைக்காலில் உள்ள ஊழியர்களுக்கு உரிய அறிவுறுத்தல் செய்யாதது ஏன் என
அவரிடம் விளக்கம் கேட்டார்.
நபணிக்கு நேரத்திற்கு வராதோரிடம் விளக்கம் கேட்டு துறை
ரீதியிலான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மணி
9.15ஆனபோதும் ஊழியர்கள் வராததால், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை
நிறைவேற்ற மனுக்களுடன் காத்திருந்தனர். அந்த மனுக்களை வாங்கிப் பார்த்து,
தீர்வுக்கு ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, பல மாதங்களாக மக்களை
இழுத்தடிப்பது ஏன் என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். மின் துறை
சம்பந்தமான எந்தப் புகார்களையும் உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதிகள் குறித்து மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து பூவம் பகுதியில் உள்ள காமராஜர் அரசு உயர்நிலைப்
பள்ளிக்குச் சென்ற அமைச்சர், வகுப்பறைகளுக்குச் சென்று மாணவர்களிடம் கல்வி
நிலை, ஆசிரியர்களின் போதனை, நிர்வாகத்தினர் தரும் வசதிகள் குறித்து
கேட்டறிந்தார். பள்ளி வளாகம் முழுவதும் சுற்றிப் பார்த்தார்.
ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
புதுச்சேரியில் நிர்வாகத்தை சரிசெய்யும் நோக்கில் துணை நிலை
ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் பல்வேறு அலுவலகங்களுக்குச் சென்று ஆய்வு
செய்கின்றனர். காரைக்கால் மின் துறை அலுவலகத்தில் ஆய்வு செய்தபோது,
ஊழியர்கள் பலர் குறித்த நேரத்திற்கு பணிக்கு வரவில்லை என்பதை அறிய
முடிந்தது. ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு எதிர்பார்க்கும் வகையில் பூவம் காமராஜர் அரசு உயர்நிலைப்
பள்ளியின் செயல்பாடுகள் அமைந்திருக்கிறது. இதேபோல, மாநிலத்தில் அனைத்துப்
பள்ளிகளும் இருக்க வேண்டும் என அரசு விரும்புகிறது. புதுச்சேரியில் கடந்த
10 ஆண்டுகளாக, கல்வித் துறை சார்ந்த கட்டட மேம்பாட்டுக்கு குறைந்த நிதி
ஒதுக்கப்பட்டது. இதனால், பல பள்ளிகளில் கட்டுமானக் குறைபாடுகள் நிலவுகிறது.
இந்த அரசு, இத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, பிரச்னைகளைச்
சரிசெய்யும்.
மின் துறை என்பது சேவைத் துறையாக லாப நோக்கின்றி இருக்கிறது.
மின்தடை பிரச்னையைத் தீர்த்தல், மின்தடங்கள் புதுப்பித்தல் போன்றவை
விரைவில் சீர்செய்யப்பட்டு, தடையில்லா மின்சாரம் புதுச்சேரி மாநிலம்
முழுவதும் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
முந்தைய அரசு, இலவசங்களுக்கு மட்டும் ரூ.320 கோடி
செலவிட்டுள்ளது. வளர்ச்சித் திட்டங்களுக்கு இதைப் பயன்படுத்தியிருந்தால்,
பல பிரச்னைகளுக்குத் தீர்வுக்கு வந்திருக்கும். எனவே, மக்களும் இலவசத்தை
எதிர்பார்க்காமல், அரசுக்கு ஒத்துழைப்பு தரும்பட்சத்தில், பல்வேறு
பிரச்னைகளை நிரந்தரமாகத் தீர்க்கவும், தொலைநோக்குத் திட்டங்களை
அமல்படுத்தவும் அரசு நடவடிக்கையை முன்னெடுக்கும். இதனால், மக்களுக்கு
முழுப் பயன் என்றார் அமைச்சர்.
ஆய்வின்போது பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எல்.குமார்
உடனிருந்தார். முன்னதாக, தேனூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் அமைச்சர்
ஆய்வு நடத்தினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...