திருவாரூர் அருகேயுள்ள மதகரம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர், கணினி செயலி (ஆப்ஸ்) மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கிறார்.
கிராமப்புறத்தில் உள்ள இந்தப் பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது, 1 முதல் 5-ம் வகுப்பு வரை 36 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளிக்கு கடந்த 2012-ல், அனைவருக்கும்
கல்வி திட்டம் மூலம் 2 கணினிகள் வழங்கப்பட்டன. இதைக் கொண்டு, கணினி குறித்த
பாடங்கள் மற்றும் செயல்வழிக் கற்றல் தொடர்பான பாடங்களை ஆசிரியர்கள்
கற்பித்துள்ளனர்.
இந்நிலையில், வளரும் தொழில்நுட்பத்தைக் கொண்டு மாணவர்களுக்குப் பாடங்களைக்
கற்பிக்க வேண்டுமெனக் கருதிய இடைநிலை ஆசிரியர் க.தருமராஜ், புரஜெக்டர்
மூலம் பாடங்களை நடத்தியுள்ளார். தற்போது, செயலி (ஆப்ஸ்) மூலம் பாடங்களைக்
கற்பிக்கிறார்.

இதுகுறித்து ஆசிரியர் தருமராஜ் கூறியது: முதலில் பவர்பாயின்ட் மூலம்
பாடங்களை கற்பித்தோம். பின்னர், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள, கல்வி சார்ந்த,
இலவச அப்ளிகேஷன்களை ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன் மூலம்
டவுன்லோடு செய்து, அதன் மூலம் மாணவர்களுக்கு கற்பித்தோம். மாணவர்கள்
ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர். இதையடுத்து, ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை மென்பொருள்
மூலம் கணினியில் நிறுவி, அவற்றை கணினியில் பயன்படுத்தத் தொடங்கினோம்.
தற்போது, அறிவியல், சமூக அறிவியல், கணிதம், தமிழ், ஆங்கிலப் பாடங்களை
இம்முறையில் கற்பிக்கிறோம்.
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் குறித்து புத்தகத்தில் விளக்குவதைக்
காட்டிலும், கணினி செயலி மூலம் விளக்கும்போது மாணவர்களுக்கு எளிதில்
புரிகிறது. எனவே, அனைத்துப் பாடங்களையும் இந்த முறையில் கற்பிக்கிறோம்.
மத்திய மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனங்கள்,
டிஜிட்டல் வழி கல்வி தொடர்பான செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளதாலும், தமிழக
அரசு பள்ளிகளுக்கு கணினி மற்றும் இதர உபகரணங்களை வழங்குவதாலும், இந்த
முறையில் கல்வி கற்பிப்பது எளிதாக உள்ளது என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...