தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்
நன்னெறி வகுப்புகளை மீண்டும் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.
சமூக வலைத்தளத்தில் ஆபாசமாகச் சித்திரித்து
படம் வெளியிட்டதால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டம், இளம்பிள்ளையைச்
சேர்ந்த வினுப்ரியாவின் வீட்டுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை
சௌந்தரராஜன் நேரில் சென்று அவரது பெற்றோரைச் சந்தித்து சனிக்கிழமை ஆறுதல்
கூறினார். மேலும், வினுப்ரியாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து,
மரியாதை செலுத்தினார். இச் சம்பவத்தில் காவல் துறையினரின் விசாரணை
குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
வினுப்ரியாவின் மரணம் தடுக்கப்பட்டிருக்க வேண்டிய சம்பவம் ஆகும். காவல்
துறையினர் சரியான நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்ததாலேயே உயிரிழப்பு
ஏற்பட்டுள்ளது. காவல் நிலையத்துக்குச் சென்றால் பாதுகாப்பு கிடைக்கும் என்ற
நம்பிக்கையை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். காவல் நிலையங்களில்
புகார் பெறுவதில் தற்போதுள்ள வழிமுறையை மாற்றி அமைக்க வேண்டும். ஈவ்
டீசிங்போல, இணையதள டீசிங்கும் மோசமான ஒன்றாகும். சைபர் கிரைம் பிரிவில்
புகார் பதிவு செய்யப்பட்டால், அதன்மீது உடனடியாக நடவடிக்கை தொடங்க
வேண்டும்.
நடமாடும் காவல் நிலையம்: குறிப்பாக, கிராமப்
பகுதிகளில் உள்ள பெண்களின் புகார்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க நடமாடும்
காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும். தொலைபேசி வாயிலாகவே புகார்களை பெறும்
வசதி ஏற்படுத்த வேண்டும்.
குற்றங்கள் மின்னல் வேகத்தில் பரவிவரும்
நிலையில், காவல் துறையினருக்கு மிதிவண்டிகள் வழங்குவது முன்னேற்றத்துக்கான
அடையாளம் அல்ல. ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சூழலால் தொடர் வேலைப் பளு
காரணமாக காவல் துறையினர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையைப்
போக்க காவல் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
கணினிப் பொறியாளர் சுவாதியைக் கொலை செய்த
குற்றவாளி ஆத்திரம் குறையாமல் தனது கழுத்தை அறுத்துக் கொண்டது இளைஞர்களின்
மனநிலையில் மாற்றம் தேவை என்பதை உணர்த்துகிறது. எனவே, அனைத்துப்
பள்ளிகளிலும் நன்னெறி வகுப்புகளை மீண்டும் நடத்த தமிழக அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்றார்.
பேட்டியின்போது, சேலம் மாநகர மாவட்டத்
தலைவர் ஆர்.பி.கோபிநாத், பொதுச் செயலர் முருகன், தங்கவேல், செந்தில்,
கோட்டப் பொறுப்பாளர் ஏ.சி.முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...