-சி.சரவணன்
பத்தாம்
வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்ட மகிழ்ச்சியோடு அந்த அரசுப் பள்ளிக்குள்
நுழைந்த மாணவி மாறுதல் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார்.
“மாலையில் வந்து வாங்கிக்கொள்“,
என்று தலைமையாசிரியர் சொன்னதை ஏற்று மீண்டும் மாலையில் பள்ளிக்குச் சென்ற மாணவியிடம் எழுத்தர் கூறினார்.
“போய்ட்டு ஒரு 5ரூபாய்க்கு ரெனால்ட்ஸ் மை பென் வாங்கிட்டு வா. “
“எங்கிட்ட காசு இல்லை, “
“அப்படியா, சரி போய் காலையில வந்துடு, நான் டிசி ரெடி பண்ணி வைக்கிறேன். “
மறுநாள் காலையில் அந்த மாணவியிடம் மீண்டும் அந்த எழுத்தர் சொன்னார்,
“எங்கிட்ட காசில்லை. “
குனிந்த தலைமைய நிமிராமலேயே அந்த எழுத்தர் கூறினார்.
“அப்படியா? உன் அப்ளிகேஷனை எங்கேயோ வைச்சிட்டேன், தெரியலையே, “
“உங்க மேசை மேலேயே அதோ இருக்குப் பாருங்க“,
“இதா,
இல்லையே? “ அந்த எழுத்தர் தெரியாதது போல் தேடிக் கொண்டிருப்பதைப்
புரிந்துகொண்ட அந்த மாணவியே அந்த விண்ணப்பத்தை எடுத்து எழுத்தரிடம்
தந்தார்.
“சரி நீ போய்ட்டு சாயங்காலம் 4 மணிக்கு வந்துடு“.
அந்த மாணவி சாயங்காலம் 5 மணிக்குப் பள்ளிக்குச் சென்றார்.
அந்த எழுத்தர் மீண்டும் கேட்டார்.
“ ஏன்மா இப்பவாவது போய்ட்டு 5 ரூபாய்க்குப் பேனா வாங்கிட்டு வா“,
“எங்கிட்ட காசில்லைங்க, “
அந்த மாணவி மீண்டும் அதே பதிலையே சொன்னார்.
அந்த எழுத்தர் சொன்னார்,
“சரிமா அலுவலக நேரம் முடிந்துவிட்டது, நீ போய் காலையில வந்துடு“,
மறுநாள் காலை அந்த மாணவியும் அவரின் தாயாரும் பள்ளிக்குச் சென்றார்கள்.
“அந்த எழுத்தர் டிசி ரெடியாயிடுச்சி, 50ரூபாய் கொடுங்க“, என்றார்.
மாணவியின் தாயார் கூறினார், “ என்னிடம் பணம் இல்லை, “
“50ரூபாய் கொடுத்தால் தான் டிசி தரணும்னு எச்எம் சொல்லியிருக்காங்க“,
“நான் கொண்டு வரவில்லை.“ அந்த அம்மாவின் அடக்கமான பதில் அந்த எழுத்தருக்குள் எந்த இரக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
“அப்படியா ஒரு அரைமணிநேரம் வெயிட் பண்ணுங்க, எச்எம்கிட்ட போய் சொல்கிறேன். “
ஒரு மணிநேரம் கழித்து அந்த மாணவியும் தாயாரும் தலைமையாசிரியர் அறைக்குள் அழைக்கப்பட்டனர்.
“ஏன்மா ஒரு 50 ரூபாய் கொடுத்து டிசி வாங்கிட்டுப் போக முடியாதா?“,
“நான் பணமெல்லாம் கொண்டு வரலீங்க“,
தலைமையாசிரியர் உரத்த குரலில் கூறினார்.
“50ரூபாய் தந்தால் தான் டிசி தர முடியும். “
“நாங்கள்
இலஞ்சம் கொடுப்பதும் இல்லை வாங்குவதும் இல்லை, இது அரசுப் பள்ளி, இங்கே
நீங்கள் பணம் கேட்பது குற்றம், அப்படி நீங்கள் ஏதாவது பணம் எங்களிடம்
பெற்றால் அதற்கு ரசீது தர வேண்டும்“,
அந்த மாணவியின் தாயார் கணீர் குரலில் பேசினார்.
தலைமையாசிரியருக்குக் கோபம் வந்தது
“50ரூபாய்
எப்படி இலஞ்சமாகும். இந்த டிசி பதிவேட்டையெல்லாம் தயார் செய்வதற்கும்
விலைகொடுத்து வாங்குவதற்கும் எவ்வளவு செலவாகுது தெரியுமா? இந்தப்
பணத்திற்கெல்லாம் நான் எங்கே போவது? “
“பள்ளிக்கு
வேண்டிய பதிவேடுகளை வாங்குவதற்கு அரசாங்கம் உங்களுக்கு இதரச்
செலவினங்களுக்கான நிதி வழங்குவதில்லையா? “ தாயாரின் பதிலைக் கொண்டு கொள்ளாத
தலைமையாசிரியர் பின்வருமாறு கூறினார்.
“மாணவர்களுக்கு வேண்டிய பதிவேடுகளை வாங்குவதற்கு மாணவர்கள்கிட்ட தான் நாங்க பணம் கேட்க முடியும். “
“உங்களுக்கு
வேண்டிய சம்பளத்தையும் மாணவர்கள் கிட்ட தான் கேட்டு வாங்குவீங்களா? “
அமைதியாகவே பேசிக் கொண்டிருந்த தாயாரின் கேள்விகளில் தெளிவு இருப்பதை
உணராமலேயே அந்தத் தலைமையாசிரியர் வார்த்தைகளை வீசினார்.
“என்னம்மா நீ 50ரூபாய்க்கு இவ்வளவு சண்டை போட்றே, ப்ரைவேட் ஸ்கூல்ல ஒரு டிசிக்கு 500 ரூபாய் 600ரூபாய்னு வாங்குறாங்க தெரியுமா? “
“தனியார் பள்ளிக்கும் அரசுப்பள்ளிக்கும் வித்தியாசம் என்னனு தலைமையாசிரியருக்குத் தெரியாதா? “
என்ன ஒரே சத்தமா இருக்கு, 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தலைமையாசிரியர் அறைக்குள் நுழைந்தார்கள்.
“டிசிக்கு
50ரூபாய் கேட்டால் இவங்க ரூல்ஸெல்லாம் பேசறாங்க, ஒரு எச்எம்மை வந்து
கேள்வி கேட்டுனு இருக்காங்க, நீங்க சும்மா இருந்தா எப்படி? “ ஆசிரியர்களைத்
தன்பக்கம் இழுத்தார் தலைமையாசிரியர். அந்த ஆசிரியரில் ஒருத்தருக்கு ரோஷம்
பொத்துக் கொண்டு வந்தது.
“எல்லோரும் 50ரூபாய் கொடுத்துட்டுத்தான் டிசி வாங்கிட்டுப் போறாங்க, உங்களுக்கு மட்டும் என்னவாம்? “
“50ரூபாயா,
இந்தப் பொண்ணு 5ரூபாய்க்கு பேனா கேட்டால் கூட வாங்கித் தரல, அதனால தான் 3
நாளா டிசிக்காக சுத்திட்டு இருக்கு“ எழுத்தர் கூறியதைக் கேட்டதும் அந்த
மாணவியின் தாயார் முகத்தில் கொஞ்சம் கோபம் முளைத்தது.
“பார்த்தேன்.
உங்க மேசையில் பார்த்தேன். 100க்கும் மேலே பேனாக்கள் குவிந்து கிடந்தது.
எங்க பிள்ளைகள் கிட்ட பேனாக்களை வாங்கிட்டு அதை விற்றுட போறீங்களா, “
“அந்த
பேனா எல்லாம் ஆபிஸ்ல இருக்குறவங்க பயன்படுத்துவதற்கு. அதெல்லாம்
ஸ்டூடன்ஸ்க்காகத் தான், நாங்களா வீட்டிற்கு எடுத்துட்டுப் போகப் போறோம். “
“அப்படினா
அரசாங்கம் உங்களுக்குப் பேனா வாங்குவதற்குக் கூட நிதி ஒதுக்கீடு
தருவதில்லையா? 5ரூபாய் பேனாவும் 50ரூபாயும் கொடுத்தால்தான் டிசி
தருவீங்களா? “
“உன்
பொண்ணுக்கு 55ரூபாய் கூட செலவு பண்ண மாட்டீங்களா? “ இன்னொரு ஆசிரியரின்
கேள்விக்குப் பிறகு அந்தத் தாயாரின் சொற்களில் அனல் பறந்தது.
“என்
மகள் தேசியச் சதுரங்கப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம்
வாங்கிட்டு வந்து இருக்கிறாள். அவளுடைய பயிற்சிக்காகவும் பயணச்
செலவிற்காகவும் இலட்ச ரூபாய்க்கும் மேலே நாங்கள் செலவு செய்து இருக்கிறோம்.
55ரூபாய் எங்களுக்குப் பெரிசா? “
“உன் பொண்ணு தங்கப் பதக்கம் வாங்கிட்டு வந்துட்டா, உங்களோட வைச்சிக்குங்க. “ தலைமையாசிரியரிடமிருந்து எகத்தாளமாக பதில் வந்தது.
“அந்தப்
பொண்ணு தனிப்பட்ட முறையில் போய் விளையாடிட்டு வரல. பள்ளிக்கல்வித்துறை
சார்பாக மாநிலத்தில் முதல் தர 5 மாணவர்களைத் தேர்வு செய்து அனைத்து
மாநிலங்களுக்கு இடையிலான போட்டிக்கு அனுப்புகிறார்கள். மத்திய அரசு
உருவாக்கியுள்ள இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் நடத்துகிற
தேசியச் சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்று இந்த மாநிலத்திற்கும் இந்தப்
பள்ளிக்கும் பெருமை சேர்த்திருக்கிறாள். “ அந்தத் தாயின் நியாயக் குரலுக்கு
எதிராகத் தலைமையாசிரியர் பேசினார்.
“ஆமாம்,
அந்தப் பொண்ணு விளையாட்டு விளையாட்டுனு போய்டும், அதனால சரியா ஸ்கூலுக்கு
வருவதில்லை. ஸ்கூலுக்கு வரவில்லையானாலும் வருகைப் பதிவேட்டில் ஆப்சென்ட்
போடக் கூடாதுனு இவங்க அப்பா ஒரு முறை வந்து ஒரே சண்டை போட்டார், அது
எப்படிங்க, ஸ்கூலுக்கு வரவில்லை என்றாலும் ப்ரெசென்ட் போடுவது? இந்தப்
பொண்ணு ஸ்போர்ட்ஸ்க்குப் போனதும் போதும் எங்க உயிரை வாங்கினதும் போதும். “
தலைமையாசிரியரின் புலம்பலுக்குத் தாயார் பதில் அளித்தார்.
“இந்த
மாதிரி தேசிய அளவிலான போட்டிகளில் தங்கமும் வெள்ளியும் வாங்குகிறவங்க
பெரும்பாலும் தனியார் பள்ளிகளும் மெட்ரிக் பள்ளிகளும் தான் தெரியமா? அரசுப்
பள்ளி மாணவியாக இருந்து சாதனை பண்ணியிருக்கிற அந்தப் பெண்ணோட திறமையை
உங்களுக்கு உணர முடியவில்லையா? பயிற்சி எடுக்கவில்லை என்றால் ஒரு மாணவியால்
தேசிய அளவில் வெற்றி பெற முடியமா? பயிற்சி எடுப்பதற்கு அனுமதி கேட்டால்
நீங்கள் அனுமதி தரவில்லை. வருகைப்பதிவேட்டில் நீங்கள் ஆப்சென்ட் தான்
போட்டிருக்கீங்க. ஒரு அரசுப் பள்ளி மாணவியாக இருந்து இந்தச் சாதனை
செஞ்சதற்காக நீங்க என்ன செஞ்சீங்க,
பயிற்சி
எடுப்பதற்காக நாங்கள் வெளிநாடுகளிலிருந்து உலகத்தரமான புத்தகங்களை
வாங்குவோம், அதற்கு நீங்க ஏதாவது உதவி செய்தீர்களா? அல்லது போட்டிகளுக்குப்
போவதற்கு ஏதாவது பயணச் செலவு உதவி செய்தீர்களா? என் மகள் பயிற்சி
எடுப்பதற்கு ஏதாவது பயிற்சியாளரை நியமனம் செய்தீர்களா? “ தாயாரின்
கேள்விகளுக்குத் தலைமையாசிரியரிடம் இருந்து உடனே பதில் வந்தது.
“இது என்ன உங்க வீடுனு நினைச்சிங்களா? உங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்துனு இருப்பதற்கு. “
“பள்ளிக்கல்வித்துறையில்
விளையாட்டுக்குனு நிதி ஒதுக்கீடு இருப்பது தங்களுக்குத் தெரியாதா? அந்த
நிதியிலிருந்து என்னுடைய மகளுக்கு நீங்கள் செலவு செய்திருக்கலாமே?
முதன்மைக் கல்வி அலுவலரிடம் தகவல் சொல்லி ஒரு பாராட்டு விழா
செய்திருக்கலாமே? “
தாயாரின் கேள்விக்குத் தலைமையாசிரியர் எதிர்கேள்வியை எழுப்பினார்.
“10ஆம்
வகுப்பிலும் 12ஆம் வகுப்பிலும் நிறைய மார்க் எடுத்த பசங்களுக்கு நாங்களும்
பெற்றோர் ஆசிரியர் கழகம் சேர்ந்து எவ்வளவோ பேனர் வைத்திருக்கிறோம்
தெரியுமா? “
“அப்படினா
விளையாட்டுத் துறையில சாதிப்பவர்களுக்கு எந்தப் பாராட்டும் பண்ண
மாட்டீங்க? எந்த உதவியும் பண்ண மாட்டீங்க? 10, 12ஆம் வகுப்புகளில் அரசுப்
பள்ளியளவில் மாநிலத்தில் முதல் பரிசு, மாவட்டத்தில் முதல் பரிசு என்று
பாராட்டுகளும் பரிசுகளும் வழங்குவீங்க, ஆனால் விளையாட்டுல தேசிய அளவில்
சாதித்தாலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எந்தப் பாராட்டும் கிடையாது,
பரிசும் கிடையாது. இது எப்படிங்க நியாயம்? “
“இதையெல்லாம் நீங்கள் போய் அரசாங்கம் கிட்ட கேட்கணும் எங்ககிட்ட கேட்கக் கூடாது. “
“மந்திரி
வந்தார், எம்எல்ஏ வந்தார், எம்பி வந்தார், வேந்தர் வந்தார் அப்படினு
சொலிட்டுப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக ஆயிரக் கணக்கில் செலவு
செய்றீங்க? அதற்காக நிறையபேர் கிட்ட நன்கொடை வாங்கி பிரம்மாண்ட மேடை
அமைத்துச் செலவு செய்து எல்லா பத்திரிகையிலும் டிவியிலும் செய்தி
கொடுக்கிறீங்க, ஆனால் உங்கள் பள்ளி மாணவி தேசிய அளவில் சாதித்தாலும் 100
ரூபாய் செலவு செய்வதில்லை. இந்தப் பெற்றோர் ஆசிரியர் சங்கம் என்கிற பெயரைப்
பேசாமல் அரசியல்வாதிகளை வரவேற்று உபசரிப்போர்ச் சங்கம் என்று
மாற்றிவிடுங்கள். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர்களாக இந்தப்
பள்ளியில் படிக்கும் பெற்றோர்கள் யாரும் நியமனம் செய்யப்படுவதில்லை. அரசுப்
பள்ளியில் படிக்காமல் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க
வைப்பவர்கள் இந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகிறார்? இது
எப்படி சாத்தியமாகிறது?
இந்தப்
பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களைத் தான் இந்தப் பள்ளியில்
பெற்றோர் ஆசிரியர்கழகப் பொறுப்புகளில் நியமனம் செய்ய வேண்டும்.“
தாயாரின் அழுத்தமான வார்த்தைகளுக்கு அலட்சியமாகவே தலைமையாசிரியர் பதில் அளித்தார்.
“இந்த ஸ்கூலை விட்டுட்டு நீங்க போகப் போறீங்க இல்லை, அப்புறம் இந்தக் கேள்வி எல்லாம் உங்களுக்கு எதுக்கு? “
“இந்தப்
பள்ளியில் படித்துத் தேசிய அளவில் தங்கம் வென்று பள்ளிக்குப் பெருமை
சேர்த்த மாணவியை இந்தப் பள்ளியிலே தொடர்ந்து படி, இங்கேயே 11ஆம் வகுப்பில்
சேர்ந்திடு என்று சொல்வதற்கு யாருமே இல்லையே“ அம்மாவின் குரல்
தழுதழுத்ததைக் கண்டு மாணவி குறுக்கிட்டுப் பேசினார்.
“அம்மா
நான் ஒரு நாள் சதுரங்கப் பயிற்சி மேற்கொண்டிருக்கும் போது, ஒரு ஆசிரியர்
ஓடோடி வந்தார். நான் பயன்படுத்திக் கொண்டிருந்த மேசையை வெடுக்கென்று
பிடுங்கினார். போய் அப்படி படிகட்டுல உட்கார்ந்துனு விளையாடு,
சாப்பிடுவதற்குக் கூட மேசையில்லாமல் நாங்கள் தவிச்சினு இருக்கோம் என்று
சொன்னார்கள். எனக்குப் பயிற்சி எடுப்பதற்கு மேசையைக் கூட ஒதுக்காத
காரணத்தால் தான் வீட்டிலாவது பயிற்சி எடுக்கலாம் என்பதற்காகப் பள்ளியில்
அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதி வழங்கவில்லை.
இவர்கள்
எனக்கு ஆப்சென்ட் போட்டாலும் பரவாயில்லை என்று தான், நான் வீட்டிலிருந்தே
பயிற்சி மேற்கொண்டேன். நான் ஒரு நாளைக்கு 15 மணி நேரத்திற்கும் மேலாகப்
பயிற்சி மேற்கொண்டால் தான் தேசியப் போட்டிகளில் வெற்றி பெற முடியும்
என்பதையெல்லாம் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது. ஒவ்வொரு நாளும் பல
100 பக்கச் சதுரங்கத் தேற்றங்களைப் படித்துப் பயிற்சி எடுக்க வேண்டும்.
உலகத் தர வீரர்கள் பலரோடு விளையாடிப் பழக வேண்டும். நேரத்திற்குச் சாப்பிட
முடியாது. நேரத்திற்குத் தூங்க முடியாது. எங்களுக்குப் பொழுதுபோக்கே
சதுரங்கம் தான். டிவி.சினிமா எல்லாம் எங்களுக்குக் கனவுல தான்
வந்துபோகும்.”
“
அது வரை அமைதியாக நின்று கொண்டிருந்த மாணவியின் வார்த்தைகளில் தான் ஒரு தேசிய வாகையர் (National champion) என்ற உணர்ச்சி தெறித்தது.
“திவ்லோ பெரிசு இருந்துனு ஓவரா பேச்சைப் பாரு. “ தலைமை ஆசிரியரின் குரலுக்கு எதிர்குரல் கொடுத்தார் மாணவி.
“நான்
திவ்லோ பெரிசு தான். விளையாட்டுல சாதிக்கிற எங்களுக்குத் தான் மருத்துவம்,
பொறியியல், வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை தெரியுமா? நாங்கள் சாதிக்கும்
போது எந்த வித உதவியும் செய்ய நீங்கள் யாரும் தயாரா இல்லை. எந்த ஒரு
விளையாட்டு வீரரும் தாங்களாகத் தான் உருவாகனும். உங்களை
மாதிரியானவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காது. என்னை மாதிரியே தேசிய
போட்டிகளில் வெற்றி பெற்றுத் திரும்புகிற தனியார், மெட்ரிக் பள்ளி
மாணவர்களுக்கு அந்தக் கல்வி நிறுவனங்கள் பாராட்டும் பரிசும் வழங்குவார்கள்.
நன்கொடைகள் பெற்றுத் தருவார்கள்.. ஊர் முழுக்கப் பதாகைகள் வைத்துக்
கொண்டாடுவார்கள். அமைச்சர்களை வரவழைத்து விழா எடுப்பார்கள். இதையெல்லாம்
கேள்விபடும்போது எனக்கு வருத்தமாக இருக்காதா?
நான்
கடந்த முறை தங்கப்பதக்கம் வென்றதற்காக மாநில விளையாட்டு ஆணையம் சார்பாக
ரூபாய் 6000 வழங்கியிருக்க வேண்டும். ஆனால் தலைமையாசிரியர் முறையாக மாவட்ட
விளையாட்டு ஆய்வாளர் மூலமாகத் தகவல் தெரிவிக்கவில்லை. என்பதற்காக என் பெயர்
விடுபட்டுள்ளது, “ மாணவியின் பேச்சிலிருந்த நியாயத்தைப் புரிந்து கொள்ள
அங்கே யாரும் தயாராக இல்லை. ஒரு ஆசிரியர் பேசினார்,
“ஒரு 55ரூபாய் தர முடியாத குறைக்கு இவ்வளவு மல்லுகட்டு தேவையா? அந்தப் பணத்தை நான் தந்து விடுகிறேன். டிசியைக் கொடுத்தனுப்புங்கள். “
மாணவியின் தாயாருக்கு நிறையவே கோபம் வந்தது.
“என்
பொண்ணுக்கு 50ரூபாய் கொடுக்கிற மாதிரி மாணவர்களுக்கும் நீங்கள்
கொடுத்துடுவீங்களா? 50 ரூபாயையம் 5ரூபாய் பேனாவையும் கேட்பதற்கு இந்தப்
பள்ளி நிர்வாகம் கூனி குறுகி நிற்க வேண்டும். ஆனால் கொஞ்சம் கூட வெட்கமே
இல்லாமல், பணம் கேட்பதை நியாயப்படுத்துகிறீர்கள். “
அந்த மாணவியின் வகுப்பாசிரியர் திடீரென தலையிட்டுத் தலைமையாசிரியரிடம் பேசினார்.
“ பணம் வாங்குவது தப்புதான். அந்த டிசியை அவங்க கிட்ட கொடுத்தனுப்புங்க.”
அவருக்கு ஆதரவாகச் சில ஆசிரியர்கள் பேசத் தொடங்கவே தலைமையாசிரியர் மாறுதல் சான்றிதழை மாணவியிடம் எடுத்து நீட்டினார்.
மாறுதல் சான்றிதழை வாங்கிக் கொண்டு அம்மாவும் மகளும் வீடு திரும்பினார்கள்,
அப்போது அந்த மாணவி கேட்டார்.
“அம்மா,
நான் தங்கப் பதக்கம் வாங்கி என் வயது பிரிவில் இந்தியாவில்
முதலிடத்தில் இருக்கிறேன். என்னை இதே பள்ளியில் தொடர்ந்து படி என்று
சொல்வதற்குக் கூட யாரும் தயாராக இல்லையே ?
சனியன்
தொலைந்ததுனு எல்லோரும் சொல்லியிருந்தாலும் என்னோட விளையாட்டு
ஆசிரியர்களும் வகுப்பு ஆசிரியரும் எனக்காக வருத்தப்பட்டிருப்பார்கள். “
“அவங்க
வருத்தப்படுவதில் என்னம்மா நியாயம் இருக்கு? பள்ளியில் விளையாட்டுக்கு
நிதி ஒதுக்கப்படுது. அந்த நிதியிலிருந்து விளையாட்டுக் கருவிகளை வாங்கச்
சொல்லக் கூட விளையாட்டு ஆசிரியர்களுக்குத் துணிச்சல் இல்லை, சதுரங்க
வளர்ச்சிக்காக எல்லா அரசுப் பள்ளிகளுக்கும் 900ரூபாயை முதல்வர் ஆண்டுதோறும்
வழங்குகிறார். ஆனால் ஒரே ஒரு அரசுப் பள்ளியில கூட தரமான சதுரங்கப்
பயிற்சிக்கான கருவிகளோ புத்தகங்களோ இருக்காது, அந்த 900 ரூபாயை என்ன
பண்ணியிருப்பாங்க.? ஒவ்வொரு விளையாட்டுச் சாதனையாளரும் தானாகத் தான் உருவாக
முடியும். பெற்றோராகிய நாங்கள் உனக்கு வேண்டியதைச் செய்து தருகிறோம். நீ
சிறப்பாகப் பயிற்சி எடு. நல்லா விளையாடு. இந்த நாட்டிற்குப் பெருமை
சேர்க்கிற இன்னொரு விஸ்வநாதன் ஆனந்தா நீ வருவாய்னு நான் நம்புகிறேன்.”
“அம்மா
என்னை விட நிறைய பேர் நிறைய மதிப்பெண் எடுத்து இருக்காங்க, நான்
விளையாட்டுக்கு முக்கியத் துவம் கொடுத்ததால் என் படிப்புத் திறன்
குறைந்திருக்குமா?”
“படிப்பை
மட்டும் நம்புகிறவர்கள் ஒரு குதிரையில் சவாரி செய்கிற மாதிரி. ஆனால்
உங்களை மாதிரி விளையாட்டு வீரர்கள் இரண்டு குதிரையில ஒரே நேரத்தில சவாரி
செய்கிற திறமை படைத்தவர்கள். பொதுத் தேர்வில அதிக மதிப்பெண் பெற்று
மாநிலத்திலும் மாவட்டத்திலும் முதல் இடம் பெறுகிற மாணவர்களை விட உங்களைத்
தான் இந்த அரசாங்கம் நிறைய பாராட்ட வேண்டும். பரிசுகள் தந்து ஊக்கப்படுத்த
வேண்டும். உங்கள் பயிற்சிக்கு நிறைய உதவி செய்ய வேண்டும். பள்ளி நேரத்தில்
பயிற்சி பெறுவதற்கு வசதிகள் செய்து தர வேண்டும். அரசுப் பள்ளியில்
அடையாளப்படுத்தப்படாமல் இருக்கிற உங்களை மாதிரி வீரர்களுக்குக் கூடுதல்
பரிசுகளையும் கூடுதல் வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும்,
ஒவ்வொரு முறையும் தேசிய அளவிலான போட்டிகளுக்குப் போகும்போது
தொடர்வண்டியில் இடம் கிடைப்பதில்லை, போட்டியிடத்தில் தங்கும் வசதி
இருப்பதில்லை, பெண்களாக இருப்பதால் பாதுகாப்புல கவனமாக இருக்க வேண்டிய
கவலையும் இருக்கு, இத்தனையையும் மீறி ஜெயிட்டு வந்தால் உரிய மரியாதையும்
தகுந்த பாராட்டும் உரிய பரிசும் வழங்கப்படுவதில்லை”
அரசுப் பள்ளிகளில் வெறும் கல்வி சார்ந்த பிரச்சினைகள் மட்டும் எழவில்லை.மாணவர்களின் திறன் சார்ந்த பிரசசினைகளுக்கும் தீர்வு ஏற்பட வேண்டியுள்ளது. மாணவர்களைஊக்கப்படுத்த வேண்டிய அரசுப் பள்ளிகள் அவர்களை ஒடுக்க நினைப்பதையே குறிக்கோளாகக்கொண்டுள்ளன. இந்தியாவின் ஒலிம்பிக் கனவுகளை நிறைவேற்றும் ஆற்றல் கொண்டவர்கள்அரசுப் பள்ளிகளிலேயே முடங்கியுள்ளனர். அவர்களைத் தூண்டிவிட்டுத் துணையாக இருக்கவேண்டியது அரசின் கடமையாகும்.
இந்தப்
பேசும் கதையில் தமிழக அரசு ஏற்றிருக்கும் கதாபாத்திரம் என்ன? அல்லது
ஏற்கப் போகும் கதாபாத்திரம் என்ன? பொறுத்திருந்து பார்ப்போம்.
எதற்கு இந்த கதை?
ReplyDeleteVoorai yematrum Arasu palli alatchiyamana asiriyargaluku. Eni yavathu thiruntuvargala?
ReplyDelete