உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மதிப்பெண் பெறுவதை மட்டுமே இலக்காகக்
கொள்ளாமல், தங்களுக்குப் பிடித்த துறையில் சாதனை படைப்பதை குறிக்கோளாக
வைத்துக் கொள்ள வேண்டும் என்று பெரியார் பல்கலைக்கழகத் தேர்வாணையர்
எஸ்.லீலா தெரிவித்தார்.
பெரியார் மேலாண்மைக் கல்வி நிறுவனம் சார்பில், நிகழாண்டில் முதுநிலை
மேலாண்மைக் கல்வியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவ-மாணவியருக்கு
புத்தாக்கப் பயிற்சி முகாம் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. இதில்
தொடர்பியல் திறன்,நேர மேலாண்மை, குழுவாகப் பணியாற்றுதல், சமூக வலைதளங்களை
சரியாகப் பயன்படுத்துதல், மன அழுத்தத்தை கையாளுதல், வேலைவாய்ப்புகள்,
தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
பயிலரங்கின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உதவிப் பேராசிரியர்
பி.திருமூர்த்தி வரவேற்றார். பெரியார் மேலாண்மைக் கல்வி நிறுவன இயக்குநர்
பேராசிரியர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். பயிற்சி முகாமில் கலந்து
கொண்ட மாணவ-மாணவியருக்கு, பெரியார் பல்கலைக்கழக தேர்வாணையர் எஸ்.லீலா
சான்றிதழ்களை வழங்கிப் பேசியது:
பள்ளிக் கல்வி பயிலும் அனைவருக்கும் உயர்கல்வி பயிலும் வாய்ப்பு
கிடைப்பதில்லை. கிடைத்துள்ள வாய்ப்பை தங்களுடைய முன்னேற்றத்துக்காகவும்,
பெற்றோர் மகிழ்ச்சியடையும் வகையில் மாணவ-மாணவியர் செயலாற்ற வேண்டும்.
மதிப்பெண்ணை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மனப்பாடக் கல்வி முறையில்
பயிலாமல், தாங்கள் கற்கும் கல்வியின் நோக்கம், அதற்கான தேவையை அறிந்து பயில
வேண்டும். இதன்மூலம் தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து, அதில்
வேலைவாய்ப்பை பெறுவதற்கும், தொழில்முனைவோராக மாறுவதற்குமான குறிக்கோளை
வகுத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் இணைப் பேராசிரியர்கள் வி.ஆர்.பழனிவேலு, ஜி.யோகானந்தன்,
உதவிப் பேராசிரியர்கள் ஜெ.செந்தில்வேல் முருகன், ஆர்.சுப்ரமணிய பாரதி,
எஸ்.பாலமுருகன், எம்.சூர்யகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...