திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை முடிந்த நிலையில்
தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட
விகிதத்தில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்து உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கல்வி உரிமை பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை கடந்த 2011-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு
வந்தது.
இச்சட்டமானது, 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அனைவரும் அவர்களின்
குடியிருப்புக்கு அருகிலிருக்கும் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை
இலவச, கட்டாயக் கல்வி பெறும் உரிமையை உறுதி செய்துள்ளது.
அதற்கேற்ப, இச்சட்டத்தின்படி தனியார், மெட்ரிக். பள்ளிகளில் வாய்ப்பு
மறுக்கப்பட்ட, நலிவடைந்த குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்ய
அரசு உத்தரவிட்டுள்ளது.
இவர்களுக்கான கல்விக் கட்டணத்தை, கல்வியாண்டின் தொடக்கத்தில் ஒரு
பகுதியும், ஆண்டு இறுதியில் மாணவர் வருகைப் பதிவேடு, மதிப்பீட்டு
அறிக்கையும் பள்ளிகளிடம் பெற்ற பின் பள்ளியின் வங்கிக் கணக்கில்
பள்ளிக்கல்வித் துறை செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு கல்வி ஆண்டும் தனியார், மெட்ரிக். பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில்
(எல்.கே.ஜி.,) மொத்த மாணவர் எண்ணிக்கையில் 25 சதவீத இடங்களை கட்டாயக் கல்வி
உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு
வழங்கிட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், இம்மாவட்டத்தில் இயங்கி வரும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த முன் வருவதில்லை. இதை,
அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1,661
தனியார் நர்சரி, தொடக்கப் பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்பில், 25 சதவீத
இடங்கள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஏழை
மாணவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், 600-க்கும் மேற்பட்ட நர்சரி பள்ளிகளில், கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டத்தின் கீழ் ஒரு மாணவரைக் கூட சேர்க்கவில்லை. அதேபோன்று, மாவட்டத்தில்
உள்ள 344 மெட்ரிக். பள்ளிகளில், 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள்,
இச்சட்டத்தின் கீழ் ஒரு மாணவரைக் கூட சேர்க்கவில்லை என புகார்
எழுந்துள்ளது. சில பள்ளிகளில் சொற்ப எண்ணிக்கையிலான மாணவர்களை
இத்திட்டத்தில் சேர்த்து, அவர்களிடம் பராமரிப்புக் கட்டணம் என ஒரு
குறிப்பிட்ட தொகையை வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளன.
தற்போது மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர், கல்வித்
துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்து 25 சதவீத சேர்க்கை இல்லாத
பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அதை பிரபலப்படுத்தினால் மட்டுமே
அடுத்து வரும் கல்வியாண்டுகளில் பள்ளிகளில் முறையாக மாணவர் சேர்க்கை
நடைபெறும். மாணவர்களும் பயன்பெறுவார்கள் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...