மருத்துவப் படிப்புகளில் சேருவதை வெறும்
கனவாக மட்டுமே காண முடியும் என்பதை நன்கு அறிந்திருந்தும், என்றாவது ஒரு
நாள் நிலைமை மாறாதா என்ற ஆதங்கம் ஒவ்வோர் ஆண்டும் தங்களுக்குள் எழுவதாகக்
கூறுகின்றனர் விநோதினியும், அவருடைய தாய் செல்வராணியும்.
இவர்களும் தமிழர்கள்தான் என்ற அடிப்படையில்,
கடந்த 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, தமிழகத்தில் மருத்துவப் படிப்பு
சேர்க்கைக்கான கலந்தாய்வில் இலங்கை அகதி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டு
வந்தனர்.
இலங்கையிலிருந்து அகதிகளாக வந்து
தமிழகத்தில் குடியேறும் இவர்களுக்கு, இங்குள்ள தமிழர்களுக்கு இணையான
சலுகைகளை மாநில அரசு வழங்கி வருகிறது. பள்ளிகள், கலை- அறிவியல் கல்லூரிகள்,
பொறியியல் கல்லூரிகளில் 20 இடங்கள், மருத்துவக் கல்லூரிகளில் 20 இடங்கள்,
வேளாண்மைப் படிப்புகளில் 10 இடங்களில் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு
வந்தனர். 2003-ஆம் ஆண்டு வரை இதே நிலை நீடித்தது.
இந்த நிலையில், ஆர்த்தி என்ற மாணவி உச்ச
நீதிமன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கைத் தொடர்ந்து, தமிழகத்தில்
பொறியியல், மருத்துவம், வேளாண்மைப் படிப்புகளில் இலங்கை அகதிகள் சேர்த்துக்
கொள்ளப்படுவது 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது. கலை- அறிவியல்
கல்லூரிகளில் மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
பின்னர், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை
ஏற்று, 2009-ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் மட்டும் சேர்ந்துகொள்ள
இலங்கை அகதி மாணவர்களுக்கு தமிழக அரசு மீண்டும் வாய்ப்பளித்தது. மேலும்,
25 இடங்கள் மட்டும் என்ற நிர்ணயமும் தளர்வு செய்யப்பட்டு,
விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் சேர்ந்துகொள்ளும் வகையிலும் சலுகை
அளிக்கப்பட்டது. ஆனால், மருத்துவம், வேளாண்மைப் படிப்புகளில் இவர்கள்
சேருவதற்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது.
தடை நீக்கப்படுமா?: இந்தத் தடையை தமிழக அரசு
நீக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிக மதிப்பெண்கள் பெறும் அகதி மாணவர்களிடையே
நீடித்து வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும் இந்த அகதி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
நிகழாண்டிலும் இவர்களில் 34 மாணவ, மாணவிகள்
1,200-க்கு 1,000-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களில்
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அகதிகள் முகாமைச் சேர்ந்த விநோதினி என்ற
மாணவி 1,136 மதிப்பெண்கள் பெற்று, அகதி மாணவர்களிலேயே முதல் மாணவி என்ற
சாதனையைப் படைத்திருக்கிறார். இவர் எம்பிபிஎஸ் படிப்புக்குரிய பாடங்களில்
கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 191, பி.இ. படிப்புக்குரிய பாடங்களில்
கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 194 பெற்றுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக 2016-17 பொறியியல்
கலந்தாய்வில் புதன்கிழமை பங்கேற்ற இவருக்கு கோவை அரசு தொழில்நுட்பக்
கல்லூரியில் (ஜிசிடி) பி.இ. உயிரித் தொழில்நுட்பப் படிப்பில் சேர்க்கை
கிடைத்துள்ளது. ஆனால், பல் மருத்துவம்தான் இவருடைய குறிக்கோள்.
இதுகுறித்து விநோதினி கூறியதாவது:
பல் மருத்துவராவதுதான் எனது கனவு. அரசு
ஒதுக்கீட்டில் நாங்கள் சேர முடியாது என்ற போதிலும், சில தனியார் மருத்துவக்
கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு பி.டி.எஸ். படிப்பில் எனக்கு இடம் தர
முன்வந்துள்ளன. ஆனால், ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4.5 லட்சம் வரை
கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என்கின்றனர்.
பெயின்ட்டராக பணியாற்றும் எனது தந்தை
இவ்வளவு பெரிய தொகையை ஒவ்வோர் ஆண்டும் செலுத்த முடியாது என்பதால், அண்ணா
பல்கலைக்கழகக் கலந்தாய்வில் பங்கேற்று, கோவை ஜி.சி.டி. கல்லூரியில்
பொறியியல் படிப்பைத் தேர்வு செய்திருக்கிறேன்.
யாராவது தனக்கு உதவிக் கரம் நீட்டினால் பல்
மருத்துவப் படிப்பில் சேர்ந்து, எதிர்காலத்தில் பிற அகதி மாணவர்களின்
உயர்வுக்கு தானும் உதவ முடியும் என்றார் அவர்.
ஈழ விடுதலைக்காக தமிழகத்தில் குரல் கொடுத்து
வரும் அரசியல் கட்சிகள், இதுபோன்று அதிக மதிப்பெண்கள் பெற்றபோதிலும்
மருத்துவப் படிப்புகளில் சேர முடியாமல் தவிக்கும் இலங்கை அகதி
மாணவர்களுக்காகக் குரல் கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு இந்த
மாணவர்களிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து விநோதினியின் தாய் செல்வராணி
கூறியதாவது: இலங்கையில் போர் தொடங்கிய காலகட்டமான 1990-இல் தமிழகத்தில்
அகதிகளாகத் தஞ்சம் புகுந்தோம். அப்போது எனக்கு 16 வயது. பின்னர், 1994-இல்
இலங்கைக்கு மீண்டும் சென்றபோது எனக்கு திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு,
2000-ஆம் ஆண்டில் எங்களது குழந்தை விநோதினியுடன் தமிழகம் திரும்பிவிட்டோம்.
கணவர் பெயின்ட்டராக பணியாற்றி வருகிறார்.
குடும்பச் சூழ்நிலை காரணமாக நானும் தையல் பணிகளைச் செய்து வருகிறேன்.
எங்களைப் போன்று மகள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக பிளஸ்-1, பிளஸ்-2
தாராபுரத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்க வைத்தோம். பத்தாம்
வகுப்பில் 480 மதிப்பெண்கள் பெற்றதால், தனியார் பள்ளியில் கட்டணச் சலுகை
கிடைத்தது. பிளஸ் 2 தேர்வில் 1,136 மதிப்பெண்கள் பெற்றார். மகளை பல்
மருத்துவராக்குவதுதான் எங்களின் ஆசை.
விநோதினியைப் போல ஒவ்வோர் ஆண்டும் பிளஸ் 2
தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் இலங்கை அகதி மாணவர்களிடையே
மருத்துவராகும் கனவு எழுகிறது. ஆனால், அந்தக் கனவு 2003-க்குப் பிறகு
நிறைவேறவில்லை.
விநோதினிக்கு பி.டி.எஸ். படிப்பில் இடமளிக்க
சில தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் முன்வருகின்றன. ஆனால்,
லட்சங்களில் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. எனவே, ஆர்வம் உள்ள
இலங்கை அகதி மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்ட ஈழத் தமிழர்களுக்காகக் குரல்
கொடுக்கும் அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். தமிழகத்தில் மருத்துவக்
கலந்தாய்வில் இலங்கை அகதி மாணவர்கள் பங்கேற்பதில் உள்ள தடையை நீக்கவும்
இவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
இலங்கை அகதி மாணவர்களின் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டவிட நிகழாண்டில் அதிகரித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் இலங்கை அகதி
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த 2014-15-இல் 88.01 சதவீதமாக இருந்தது.
இது 2015-16-இல் 91.53 சதவீதமாக உயர்ந்தது.
இதுகுறித்து இலங்கை இலங்கை அகதிகள் மறுவாழ்வுக்கான அமைப்பு நிர்வாகி பத்மநாதன் கூறியதாவது:
இலங்கை அகதி மாணவர்கள் தேர்ச்சி விகிதம்
உயர்ந்ததற்கு தமிழக அரசின் பல்வேறு திட்டங்களே முக்கியக் காரணம். முதல்
தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை, அதிக மதிப்பெண்கள்
பெறும் மாணவர்களுக்கு உயர் கல்வியில் சேரும்போது ரூ. 50 ஆயிரம் வரை கல்வி
உதவித் தொகை எனப் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி
வருகிறது. அதுபோல, 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இருந்ததுபோல மருத்துவம்,
வேளாண் பட்டப் படிப்புகளிலும் இலங்கை அகதி மாணவர்களுக்கு வாய்ப்பு
அளிப்பதற்கான நடவடிக்கையே தமிழக அரசு எடுக்க வேண்டும்.
இலங்கையில் விவசாயத்துக்கு முக்கியத்துவம்
அளிக்கப்பட்டு வருவதால், வேளாண்மைப் படிப்புகளில் அகதி மாணவர்களுக்கு
வாய்ப்பு அளிப்பது அவர்களின் வாழ்வாதாரம் உயர் வழிவகுக்கும் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...