சென்னையில், வழிப்பறி கொள்ளையனை, இரு சக்கர
வாகனத்தில் துரத்திய தனியார் பள்ளி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்; இரு
சக்கர வாகனத்தில் மோதிய கொள்ளையன், முதியவர் ஒருவரின் உயிரையும் பறித்த
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, பட்டினப்பாக்கம் காவல் நிலையம்
அருகே உள்ள, சீனிவாசபுரம் குடிசை பகுதியைச் சேர்ந்தவர், வடிவேல். அவரது
மகள் நந்தினி, 24. சென்னை, நீலாங்கரையில் உள்ள, பிரபல தனியார் பள்ளியில்
ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
ஏ.டி.எம்., மையத்தில்...: நேற்று முன்தினம்
இரவு, 10:30 மணியளவில், இரு சக்கர வாகனத்தில், அத்தை மகளும், பி.காம்.,
மூன்றாம் ஆண்டு படித்து வருபவருமான, நஜ்ஜூ, 19, என்பவருடன் நந்தினி
சென்றார். இருவரும் மந்தவெளியில் உள்ள, ஏ.டி.எம்., மையத்தில், 20 ஆயிரம்
ரூபாய் எடுத்துக்கொண்டு, பட்டினப்பாக்கம், 'லுாப்' சாலை வழியாக, வீடு
திரும்பிக் கொண்டிருந்தனர்.
பட்டினப்பாக்கம் காவல் நிலையம் அருகே
வந்தபோது, 'ஹெல்மெட்' அணிந்த படி, இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து
வந்த மர்ம ஆசாமி, நஜ்ஜூவிடம், பணப்பையை பறித்து தப்பினான். இதனால், பெண்கள்
இருவரும் நிலை தடுமாறி விழுந்தனர். மர்ம ஆசாமி, மெரினா கடற்கரை ஒட்டியுள்ள
கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து, பட்டினப்பாக்கம் வரை செல்லும்,
'லுாப்' சாலையில், மின்னல் வேகத்தில் சென்றான். அவனை, நந்தினியும்,
நஜ்ஜூவும், இரு சக்கர வாகனத்தில் துரத்திப் பிடிக்க முயன்றனர். அவன் காலால்
எட்டி உதைத்ததால், சாலையோரத்தில் இருந்த கல்லில் மோதி, இருவரும் துாக்கி
வீசப்பட்டனர். இதனால், நந்தினியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ
இடத்திலேயே பலியானார். நஜ்ஜூக்கு, கால் எலும்பு முறிந்தது.
கடற்கரைக்கு காற்று வாங்கச் சென்ற,
சீனிவாசபுரத்தைச் சேர்ந்த, சாகர், 65, என்பவர் மீதும் மோதினான். இதனால்,
அந்த முதியவர் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இந்த சம்பவம்,
அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியதால், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம்
பகுதி
வாசிகள் ஏராளமானோர் குவிந்தனர்.
நையப்புடைத்து...: மிகவும் கவலைக்கிடமான
நிலையில் இருந்த, சாகரை, ராயப்பேட்டை, அரசு மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனர். ஆனால், அவர், வழியிலேயே இறந்தார்.
பகுதிவாசிகள் கொள்ளையனை பிடித்து
நையப்புடைத்தனர். அவனது, இரு சக்கர வாகனத்தையும் தீ வைத்து கொளுத்தினர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து, கொள்ளையனை மீட்டனர். நிலைமை
கட்டுக்கடங்காமல் சென்றதால், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர்
பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், பகுதி வாசிகளிடம் பேச்சு நடத்தி,
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நேற்று காலை, 8:00 மணிஅளவில்,
போலீஸ் கமிஷனர், டி.கே.ராஜேந்திரன், சம்பவ இடத்திற்கு வந்து,
பகுதிவாசிகளுடன் பேச்சு நடத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்
உத்தரவாதம் அளித்ததால், அங்கு அமைதி திரும்பியது. விசாரணையில், வழிப்பறி
கொள்ளையன், சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்த, கருணாகரன், 32, என்பது
தெரிந்தது. அவன் மீது, பட்டினப்பாக்கம் போலீசார், கொலையாகாத மரணம்
விளைவித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது
செய்துள்ளனர். சென்னையில் மென்பொறியாளர் சுவாதி கொல்லப்பட்ட சுவடு
மறைவதற்குள், வழிப்பறி கொள்ளையனால், இரண்டு உயிர்கள் பலியான சம்பவம்,
நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த நஜ்ஜூ, ராயப்பேட்டை அரசு
மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
எங்கள் குடும்பத்தை காப்பாற்றியவள் :
வறுமையில் உள்ள எங்கள் குடும்பத்தை நந்தினி தான் வேலைக்கு சென்று
காப்பாற்றினாள். 20 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக எங்களது குல விளக்கை அணைத்து
விட்டான். 'லுாப்' சாலையில் உள்ள, 'டாஸ்மாக்' கடையால் அதிகமான குற்றங்கள்
நடைபெறுகின்றன. அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். என் பேத்திக்கு
நடந்ததுபோல் வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது.
நாராயணன், நந்தினியின் தாத்தா
புகாரை வாங்க போலீசார் மறுப்பு
நந்தினி இறந்த பின், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றோம்.
அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர், புகாரை வாங்க மறுத்து, எங்களை அநாகரிகமான
வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார்.
மேலும், 'புகாரை வாங்க முடியாது; காவல் நிலையத்தை விட்டு வெளியேறுங்கள்'
என, துப்பாக்கியை காட்டி மிரட்டினார். கூட்டமாக சென்றபோது தான், போலீசார்
புகாரை வாங்கினர்.
பெயர் வெளியிட விரும்பாத பகுதிவாசி
டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்
'லுாப்' சாலையில் உள்ள, டாஸ்மாக் கடையால்,
பல விபத்துகள் நடந்துள்ளன. இரவில் அப்பகுதியை கடக்கும் பெண்களிடம் தவறாக
நடந்து கொள்வது; அநாகரிகமான வார்த்தை பயன்
படுத்துவது போன்றவற்றில், 'குடி'மகன்கள்
ஈடுபடுகின்றனர். சில தினங்களுக்கு முன், ஒரு பெண்ணிடம் குடிகாரன் ஒருவன்,
தவறாக நடந்து கொண்டான். இந்த கொடுமையை பல பெண்கள் அனுபவிக்கின்றனர். ஆனால்,
சில பெண்கள் தான், இதுபோன்ற கொடுமையை வீட்டில் சொல்கின்றனர். நந்தினி
சம்பவமும் குடிபோதையில் நடந்த ஒன்றாகவே உள்ளது. அதனால், டாஸ்மாக் கடையை
அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாபு, பட்டினப்பாக்கம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...