Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கோவையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 91 சதவீத இடங்கள் நிரம்பின

          கோவை மாவட்டத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையினர் அல்லாத தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 91 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மெட்ரிக் பள்ளிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
           2009ஆம் ஆண்டின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, நாடு முழுவதிலும் உள்ள சிறுபான்மையினர் அல்லாதவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்புகளில் 25 சதவீத இடங்கள் வழங்கப்பட வேண்டும்.

2016-17 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கியது. 18-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது மே 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், எதிர்பார்த்த அளவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறாத நிலையில், ஜூன் 30-ஆம் தேதி வரை அதற்கான அவகாசத்தை நீட்டித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.
கோவை மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட மழலையர், தொடக்கப் பள்ளிகள் உள்ளிட்ட 233 பள்ளிகளில் மொத்தம் 3,936 இடங்கள் இந்தக் கல்வியாண்டுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இறுதி நாளான ஜூன் 30 வரையிலும் அதில் 3,587 இடங்கள் நிரம்பியுள்ளன. இது 91 சதவீதமாகும்.
கடந்த ஆண்டில் 223 பள்ளிகளில் 3,106 இடங்கள் நிரப்பப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டில் கூடுதல் இடங்கள் நிரம்பியிருப்பதாக மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 47 பள்ளிகளில் ஒதுக்கப்பட்டுள்ள 534 இடங்களில் 497 இடங்கள், அதாவது 93 சதவீத இடங்கள் பூர்த்தியாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கோவை மாவட்டத்தில் 349 இடங்கள் பூர்த்தியாகாமல் இருப்பது குறித்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் வனஜா கூறும்போது, எந்தெந்த பள்ளிகளில் இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளன என்பது குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து அந்தப் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதேபோல் நேரடி ஆய்வும் நடத்தப்படும். ஆய்வின்போது, அந்தப் பள்ளி நிர்வாகம் முறையாக விண்ணப்ப விநியோகம் செய்ததா, பொதுமக்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை, மாணவர் சேர்க்கை முறையாக நடைபெற்றுள்ளதா என்பன உள்ளிட்ட தகவல்கள் பெறப்படும்.
அது அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டு இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பூர்த்தி செய்யப்படாத இடங்களை நிரப்புவதற்காக இயக்குநரகம் மேலும் கால அவகாசம் அளிக்கும் வாய்ப்பும் உள்ளது என்றார்.
முறையாக நடைபெற்றதா மாணவர் சேர்க்கை?:  இதற்கிடையே, பள்ளி உள்ள இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் தகுதியான மாணவர்கள் இல்லை, முந்தைய ஆண்டு மாணவர் சேர்க்கைக்கே அரசு இன்னும் பணம் வழங்கவில்லை என்பது போன்ற காரணங்களை கூறி, கடந்த ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாத தனியார் பள்ளிகள் இந்த ஆண்டில் மேலும் சில புதிய வழிகளைக் கையாண்டிருப்பதாக பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு நிர்வாகிகள் குறை கூறுகின்றனர்.
வழக்கமாக நடைபெறும் மாணவர் சேர்க்கையையே 25 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடத்திக் கொண்டு, சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் பணத்தை வசூலித்துக் கொள்ளும் பள்ளிகள், அரசிடம் இருந்து தங்களுக்குப் பணம் வந்தவுடன் அதை திருப்பிக் கொடுத்துவிடுவதாக பெற்றோரிடம் கூறியுள்ளன. ஆனால், கடந்த ஆண்டுகளில் அதுபோல் யாருக்கும் பணம் திருப்பிக் கொடுக்கப்படவில்லை.
அதேபோல், பொள்ளாச்சி பகுதியில் செயல்படும் சில பள்ளிகள் பெற்றோரிடம் பணம் வசூலித்துக் கொண்டு, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் படிப்பதாக சில குழந்தைகளை கணக்குக் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, இதுபோன்ற முறைகேடுகளைத் தடுப்பதற்காக மாவட்டம் முழுவதிலும் உள்ள மொத்த இடங்களையும் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு, அரசே ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடத்தி, மாணவர்களை சேர்க்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றனர் அவர்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive