பெண் இன்ஜினியர் சுவாதியை கொலை செய்த வழக்கில் நெல்லையை சேர்ந்த இன்ஜினியர்
8 நாளுக்குப் பின் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
அதில், வாலிபர் ஒருவர் காலை 6.30 மணிக்கு ரயில் நிலையம் உள்ளே செல்வதும் 6.40க்கு வெளியே செல்வதும் தெரிந்தது. மேலும், அவர் வேக வேகமாக நடப்பதும், சுவர் ஏறி ஓடுவது போன்ற காட்சியும் பதிவாகியிருந்தது. எனவே, இவர்தான் கொலையாளியாக இருப்பார் என்ற கோணத்தில் விசாரணை வளையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கொலையாளி என சந்தேகப்படும் நபரின் தெளிவான புகைப்படம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதை அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி சேனல்களுக்கும் போலீசார் வழங்கினர். போட்டோவில் இருப்பவர் பற்றி தகவல் தெரிவிக்க வசதியாக போலீஸ் அதிகாரிகள் செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டு இருந்தது.
தகவல் கொடுப்பவர்களின் பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்து இருந்தனர். இதைத் தொடர்ந்து 10 நிமிடத்திற்கு ஒரு அழைப்பு வீதம் உள்ளூரில் இருந்தும் வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் போன் அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. தமிழகத்தில் உள்ள ஒரு லட்சம் போலீசாருக்கும் சவால் விடும் வகையில் குற்றவாளி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், சுவாதியை கொலை செய்ததாக நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் (22) என்ற வாலிபரை சென்னை தனிப்படை போலீசார் 8 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை 1 மணியளவில் அவரது வீட்டில் வைத்து ைகது செய்தனர். போலீசாரை கண்ட அதிர்ச்சியில் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு அவர் முயன்றார். அவரை மீட்டு போலீசார் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, விசாரணைக்காக ராம்குமாரை போலீசார் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நெல்லை மாவட்டம், செங்கோட்டை, மீனாட்சிபுரம், டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த பரமசிவன் என்பவரது மகன் ராம்குமார் (22), மெக்கானிக்கல் என்ஜினியரான இவர் சென்னை சூளைமேட்டில் சுவாதியின் வீட்டின் அருகே விடுதியில் தங்கியிருந்து வேலை தேடி வந்தார். இந்நிலையில், சூளைமேடு வழியாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வரும் சுவாதியை ராம்குமார் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சுவாதி தனியாக செல்லும் போது அவரிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சுவாதி மறுத்ததாக தெரிகிறது. எனினும் ஒருதலை காதலால் ராம்குமார், சுவாதி பின்னால் சுற்றியுள்ளார்.
சம்பவத்தன்றும், நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் வைத்து சுவாதியிடம் அவர் காதல் குறித்து பேசியுள்ளார். சுவாதி மறுக்கவே, ஆத்திரமடைந்த ராம்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுவாதியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். கொலைக்கு அவர் பயன்படுத்திய அரிவாள் தென்மாவட்டத்தை சேர்ந்தது என்பது இந்த கொலை வழக்கில் கொலையாளியை கண்டுபிடிப்பதில் முக்கிய ஆதாரமாக விளங்கியது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
துப்பு கொடுத்த காவலாளி: சூளைமேட்டில் ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷன் காவலாளி பத்திரிகையில் அவரின் புகைப்படத்தை பார்த்துவிட்டு போலீ சாருக்கு ராம்குமார் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிவித்துள்ளார். ராம்குமாரை பிடிக்க சென்னையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் நேற்று காலை முதலே அவரது வீடு இருந்த பகுதியில் நோட்டம் விட்டு வந்துள்ளனர். நள்ளிரவு அனைவரும் தூங்கிய பிறகு அவரை பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, நள்ளிரவு 1 மணியளவில் அவரது வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். இதனை பார்த்த ராம்குமாரின் தாத்தா வீட்டின் கதவை அடைத்து குரல் எழுப்பியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ராம்குமார் கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து வீட்டிற்குள் தடாலடியாக புகுந்த போலீசார் ராம்குமாரை சுற்றி வளைத்து பிடித்தனர். அங்கிருந்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் ராம்குமாருக்கு கழுத்து பகுதியில் 16 தையல் போடப்பட்டுள்ளது. பின்னர், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு பொதுமருத்துவமனைக்கு போலீசார் அவரை கொண்டு வந்துள்ளனர். மருத்துவமனையில் வைத்தே ராம்குமாரிடம் போலீசார் ஒப்புதல் வாக்குமூலம் பெற முயற்சித்துள்ளனர். இதில், அவர் தான் கொலை செய்ததை ஒப்பு கொண்டதாக தெரிகிறது. அதேபோல, ராம்குமாரின் தந்தை பரமசிவன், அவரது தாய், தம்பி மற்றும் தங்கையிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...