ஆசிரியை அடித்ததில் பார்வை இழந்த பள்ளி மாணவிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு
வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலியைச் சேர்ந்த கே.வெங்கடேஸ்வரியின் மகள் கே.பிரியதர்ஷினி
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.
படித்து வந்தார். இந்நிலையில் 1.3.2012 அன்று
பிரியதர்ஷினிக்கு கண்ணில் அடிபட்டதாகவும்
சிகிச்சைக்காக கண் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் வெங்கடேஸ்வரிக்கு
பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது,
சிறுமியின் வலது கண்ணில் குச்சியால் அடித்ததால் காயம் ஏற்பட்டதாகவும்,
இதனால் அவருக்கு பார்வை பறிபோகும் வாய்ப்பு உள்ளது என்றும் மருத்துவர்கள்
தெரிவித்தனர். இதையடுத்து ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்ற
மதுரைக் கிளையில் வெங்கடேஸ்வரி மனு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்
சி.பத்மாவதியை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அவர் தாக்கல்
செய்த பதில் மனு பள்ளி நிர்வாகத்துக்குச் சாதகமாக இருந்ததால், இந்த வழக்கை
அப்போதைய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி
விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர் தாக்கல் செய்த
அறிக்கையில், சிறுமியை பள்ளி ஆசிரியை குச்சியால் கண்ணில் அடித்தது
நிரூபிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி கே.கே.சசிதரன் திங்கள்கிழமை
பிறப்பித்த உத்தரவு, சிறுமிக்கு இழப்பீடு வழங்குவதைத் தடுப்பதற்காக மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலர் தாக்கல் செய்த அறிக்கை பள்ளி நிர்வாகத்துக்குச்
சாதகமாக இருந்துள்ளது. ஆனால், இந்த வழக்கை முழுமையாக விசாரித்த காவல்
கண்காணிப்பாளர் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளார். இதற்காக அவருக்கு
நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது. இதேபோன்று ஒரு வழக்கில்,
சுற்றுலா சென்ற பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 14 பேர்
குளத்தில் மூழ்கி இறந்ததையடுத்து, அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு
வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் வலது கண்
பார்வையை இழந்த மாணவிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரூ.7 லட்சத்தை மனுத்
தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 12 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு
இழப்பீடாக வழங்க வேண்டும். வழக்கு நடத்தும் செலவாக ரூ.1 லட்சத்தை தமிழக
அரசின் தலைமைச் செயலர், மனுதாரருக்கு வழங்க வேண்டும். அந்தத் தொகையை
வழக்கைத் திசை திருப்ப முயன்ற மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் ஊதியத்தில்
இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். அவர் ஓய்வு பெற்றிருந்தால் அவரது
ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...