ஈரோடு மாவட்ட மலைக் கிராமங்களில் செயல்படும் 7
தொடக்கப்பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல் சத்துணவு வழங்க மாவட்ட ஆட்சியர்
சிறப்பு ஆணை பிறப்பித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஒன்றியத்தில் திக்கரை, தாளவாடி
ஒன்றியத்திற்குட்பட்ட செலுமிதொட்டி, அல்லபுர தொட்டி, வைத்தியநாதபுரம்,
தர்மபுரம், சோளக தொட்டி, ஜெ.ஆர்.எஸ்.புரம் ஆகிய 7 இடங்களில் கடந்த 2014-ம்
ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. மலைக் கிராம
மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறாமல், கல்வி பெறுவதற்கு உதவியாக
இப்பள்ளிகள் அமைந்தன.
ஆனால், பள்ளியில் சத்துணவு வழங்கப்படாததால் மாணவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை
செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு திட்டம் வடிவமைத்து வரும் நிலையில்,
மதிய உணவு கிடைக்காமல் தவிக்கும் பள்ளி மாணவர்கள் குறித்து கடந்த மாதம்
18-ம் தேதியன்று ‘தி இந்து’வில் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்த ஈரோடு மாவட்ட
ஆட்சியர் எஸ்.பிரபாகர், குறிப்பிட்ட பள்ளிகளை ஆய்வு செய்யுமாறு உத்தர
விட்டார். இதன்படி அதிகாரிகள் குழுவினர் இப்பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை
சமர்பித்தனர். இதையடுத்து ஏழு தொடக்கப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு
மதியம் சத்துணவு வழங்கும் வகையில் சிறப்பு ஆணையினை ஆட்சியர்
பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘மாவட்ட ஆட்சியரின்
உத்தரவுப்படி 7 தொடக்கப் பள்ளிகளிலும் ஜூலை 29-ம் தேதி முதல் சத்துணவு
வழங்கப்படும்.
இப்பள்ளிகளில் சத்துணவு சமையலர் பணியிடம் ஏற்படுத்தப் படாத
நிலையில், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக சமையலர் ஏற்பாடு செய்து
கொள்ளுமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் உணவு சமைப்பதற்கு தற்காலிகக் கூடாரம் அமைப்பது
தொடர்பாக மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, ஆட்சியரின் அனுமதிக்கு
அனுப்பப்பட்டுள்ளது. 29-ம் தேதிக்கு முன்பாக இந்த அனுமதியைப் பெற்று
கூடாரம் அமைத்து தரப்படும். தற்போது ஆட்சியரின் சிறப்பு உத்தரவின்படி
இப்பள்ளிகளில் சத்துணவு வழங்க உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. அடுத்த
ஆண்டுக்கான சத்துணவு திட்ட மதிப்பீட்டில், இந்தப் பள்ளி மாணவர்களின்
எண்ணிக்கையும் சேர்க்கப்படும். நிரந்தர சமையலர் பணியிடம் உருவாக்குவது
தொடர்பாக அரசின் பார்வைக்கு கருத்துரு அனுப்பப்படவுள்ளது’ என்றார். கடந்த
இரு ஆண்டுகளாக அரசின் சத்துணவு திட்டம் மலைக்கிராம மாணவர்களை சென்றடையாத
நிலையில், தற்போது அதற்கான நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு பள்ளி
மாணவர்களும், பெற்றோரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், ‘பள்ளி கல்விக்குழு என்பது இங்கு பெயரளவில்
செயல்படும் நிலையில், சமையலரை தாங்களாக ஏற்பாடு செய்ய இயலாத நிலையில்
உள்ளதாக’ கூறும் இப்பகுதி மக்கள், ‘சமையல் செய்பவருக்கு குறைந்த பட்ச
சம்பளத்தொகையை வழங்க தொண்டு நிறுவனங்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு
செய்து தர வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...