தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 500-க்கும் அதிகமான உடற்கல்வி ஆசிரியர்
பணியிடங்கள் காலியாக உள்ளன. புதிதாகத் தொடங்கப்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட
பள்ளிகள் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்காததால் மாநில, தேசிய விளையாட்டுப்
போட்டிகளில் மாணவர்கள் பிரகாசிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
மாநிலம் முழுவதும் அரசு சார்பில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளிகள் 36,956 மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 8,407, சுயநிதிப்
பள்ளிகள் 11,462 உள்பட மொத்தம் 56,828 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1.33 கோடி
மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 5.09 லட்சம் ஆசிரியர்கள்
பணியாற்றி வருகின்றனர். இவர்களில், உடற்கல்வி ஆசிரியர்களாகப்
பணியாற்றுபவர்கள் சுமார் 3500 பேர் மட்டுமே. இது, மற்ற ஆசிரியர்களை
ஒப்பிடுகையில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவே.
திறமையுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் உடற்கல்வி மூலம் பயன்பெறும் வகையில்,
ஆண்டுதோறும் தமிழக அரசு ரூ. 10 கோடி நிதி ஒதுக்குகிறது. இதன்மூலம், மாநில,
தேசிய அளவில் பல்வேறு விளையாட்டுக்களில் மாணவர்கள் பிரகாசிக்க வழி
கிடைத்தும், பயிற்சி அளிக்க போதிய உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால்,
அரசின் எதிர்பார்ப்பு முழுமை அடையாத நிலையே உள்ளது.
இந்த நிலை மாற வேண்டுமெனில், நடுநிலைப் பள்ளிகள் தொடங்கி, உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகள் வரை தகுதிக்கு ஏற்ப உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை
அதிகரிக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அதோடு, மற்ற பாடங்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கப்படுவதைப் போல,
உடற்கல்வி பாடத்துக்கும் அனைத்து வகுப்புகளுக்கும் விலையில்லாப்
புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்.
மேலும், தற்போது இடைநிலைக் கல்வித் தகுதியுடன் பெரும்பான்மையாகப் பணியாற்றி
வரும் உடற்கல்வி ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைக்கும் வகையில் அனைத்து
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் உடற்கல்வி பட்டதாரி ஆசிரியர்
பணியிடத்தையும், அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் முதுநிலை உடற்கல்வி
ஆசிரியர் பணியிடத்தையும் உருவாக்க வேண்டியது அவசியம் எனவும் விளையாட்டு
ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில
துணைத் தலைவரும், புதுகை மாவட்டத் தலைவருமான காசி ராஜேந்திரன் கூறியது:
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 3,983 விளையாட்டு ஆசிரியர்
பணியிடங்கள் உள்ளன. இவற்றில், 435 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக
உள்ளன. இதேபோல, உடற்கல்வி இயக்குநர் நிலை 2-ல் 43 பணியிடங்களும், நிலை 1-ல்
39 பணியிடங்களும் காலியாக உள்ளன. இவற்றை உடனடியாக நிரப்புவதன் மூலம்
விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் மாநில, தேசிய அளவில் பிரகாசிக்க
வாய்ப்பாக அமையும்.
அதோடு, மாநிலம் முழுவதும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி,
முதுநிலைப் பட்டதாரி உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்
என்ற கடந்த 35 ஆண்டுகால கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
மேலும், அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் புதிய உடற்கல்வி ஆசிரியர்
பணியிடங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாமக்கல், அரியலூர் மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும்
கடந்த 5 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள உடற்கல்வி ஆய்வாளர் பணியிடத்துக்கு
நிரந்தர அலுவலர்களை நியமிக்க வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில்
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை
அதிகரிப்பதன் மூலம் தமிழகம் முழுவதும் பணிக்காகக் காத்திருக்கும் சுமார் 80
ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வு கிடைக்கும் என்றார் அவர்.
new govt.must consider the article as soon as possible.
ReplyDelete