தமிழ்நாடு மின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு முடிவை எதிர்பார்த்து, ஐந்து மாதங்களாக, 75 ஆயிரம் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், பொறியாளர் உட்பட, 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், மின் பழுதை சரி செய்தல்; மின் பயன்பாடு கணக்கு எடுத்தல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 300 எலக்ட்ரிகல்; 50 சிவில்; 25 மெக்கானிக்கல் உதவி பொறியாளர் என, 375 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, மின் வாரியம் முடிவு செய்தது. இதற்கான, எழுத்து தேர்வு அறிவிப்பு, 2015 டிச., 28ல் வெளியானது. இந்த தேர்வை எதிர்த்து, சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'தேர்வை நடத்தலாம்; ஆனால், தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது' என கூறியது. கடந்த ஜன., 31ல், அண்ணா பல்கலை மூலம், தமிழ்நாடு மின் வாரியம் எழுத்துத் தேர்வை நடத்தியது; 75 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிந்து, ஐந்து மாதங்கள் ஆகியும், இதுவரை முடிவை வெளியிடாததால் பட்டதாரிகள், மின் வாரிய அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, பட்டதாரிகள் கூறியதாவது: மின் வாரியம், முதல் முறையாக எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம், ஊழியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது; இது, வரவேற்கத்தக்கது. ஆனால், சிலர், 'தேர்வை நடத்தக் கூடாது' என, வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
இதனால், தேர்வு முடிவை வெளியிடுவது தாமதம் ஆகி வருகிறது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், முறையாக பதில் அளிப்பதில்லை. மின் வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மற்ற அரசு தேர்வுகளில் பங்கேற்காமல் உள்ளோம்.
நடவடிக்கை தேவை : எனவே, மின் வாரியம் வழக்கு விசாரணையை விரைவாக முடித்து, எழுத்துத் தேர்வு முடிவை வெளியிட்டு, நேர்முகத் தேர்வையும் நடத்தி, விரைவாக ஆட்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...