மத்திய அரசின், ஏழாவது ஊதிய கமிஷன்
பரிந்துரைகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அறிவித்திருந்த வேலை
நிறுத்தத்தை, ஊழியர்கள், தற்காலிகமாக, நான்கு மாதங்களுக்கு ஒத்தி
வைத்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது ஊதிய
கமிஷனில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும்; அடிப்படை ஊதியத்தை, 26 ஆயிரம்
ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய
வேண்டும் என்பது உட்பட, 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள்
மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் தேசிய கூட்டு போராட்ட குழு, ஜூலை, 11
முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது.
இதனால், அலுவல்கள் தடைபட்டு, மக்களின்
இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலை உருவாகியது. இந்த நிலையில், மத்திய அரசின்
புதிய அறிவிப்பை ஏற்று, நான்கு மாதங்களுக்கு போராட்டத்தை ஒத்தி வைப்பதாக
போராட்டக் குழுவினர், நேற்று அறிவித்தனர்.
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தை
சேர்ந்தவர்கள் கூறியதாவது: ரயில்வே, பாதுகாப்பு, தபால் மற்றும் வருமான வரி
உள்ளிட்ட பல மத்திய அரசு துறைகளைச் சேர்ந்த, 33 லட்சம் பேர், தேசிய அளவிலான
வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக இருந்தது. எங்களின் தற்போதைய அடிப்படை
ஊதியம், 15 ஆயிரத்து, 750 ரூபாய்; அதை, 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்த, ஊதிய
குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால், 2,250 ரூபாய் மட்டுமே கூடுதலாக
கிடைக்கும்.
மத்திய அமைச்சரவை செயலரை சந்தித்து, போராட்ட
அறிவிப்பு கடிதத்தை ஜூன், 9ல் கொடுத்தோம். ஜூன், 30ம் தேதி, மத்திய நிதித்
துறை, ரயில்வே மற்றும் உள்துறை அமைச்சரை, போராட்டக் குழுவைச்
சேர்ந்தவர்கள் சந்தித்து பேசினர்.
அப்போது, 'போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும்
என்றால், ஒரு கமிட்டியை அமைத்து, அடிப்படை ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை
எடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டது. ஜூலை, 6ம் தேதி, மத்திய
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மீண்டும் சந்தித்து பேசினர். அப்போது,
எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக அவர் உத்தரவாதம் அளித்தார்.
அதை எழுத்து பூர்வமாக தர கேட்டோம். அதை ஏற்ற
அவர், 'ஊதிய உயர்வு பற்றி முடிவெடுக்க கமிட்டி அமைக்கப்படும்; நான்கு
மாதங்களுக்குள், புதிய ஊதியம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்' என, உறுதி
அளித்தார். அதை உறுதி செய்யும் வகையில், நிதி அமைச்சகம் அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. அதை ஏற்று, போராட்டத்தை, நான்கு மாதங்களுக்கு ஒத்தி
வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...