அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான நெட்
தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் வருகிற 10ம் தேதி நடக்கிறது. அரசு, அரசு
உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி, பி.எச்டி படிக்க இளநிலை
ஆராய்ச்சியாளர் உதவித் தொகை பெற ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும்.
இந்தத் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பர் மாதங்களில்
சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான முதல் தேர்வு வருகிற 10ம் தேதி
நாடு முழுவதும் 88 முக்கிய நகரங்களில் நடக்கிறது. பொருளாதாரம், அரசியல்
அறிவியல், உளவியல், சமூகவியல், வரலாறு, மானுடவியல், வணிகவியல், கல்வியியல்,
சமூகப்பணி மற்றும் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், ஒடியா, பெங்காலி,
மைதிலி, தெலுங்கு, உருது போன்ற மொழிகள் உட்பட 83 பாடங்களுக்கு நெட் தகுதித்
தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நான்கு
நகரங்களில் நெட் தகுதித் தேர்வு நடக்கிறது. இத்தேர்வு மூன்று தாள்களை
உள்ளடக்கியது. முதல் தாள் பொது அறிவு தொடர்பானது. இதில் 60 கேள்விகள் இடம்
பெறும். 50 கேள்விகளுக்கு கட்டாயம் பதில் அளிக்க வேண்டும். இதற்கு 75
நிமிடங்கள் வழங்கப்படும். இதைத் தொடர்ந்து இரண்டாம் தாளில் 50
வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும். இந்தத் தேர்வு பாடம் தொடர்பானது.
இதற்கு 75 நிமிடங்கள் வழங்கப்படும். இதே போல பிற்பகலில் நடக்கும் மூன்றாம்
தாள் தேர்வு இரண்டரை மணி நேரம் நடத்தப்படும். இதில் 75 வினாக்களுக்கு விடை
அளிக்க வேண்டும். மூன்று தாள்களிலும் கொள்குறி வினாக்களே இடம் பெறும்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் சிபிஎஸ்இ
இணையதளத்தில் www.cbsenet.nic.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தேர்வு எழுதலாம் என சிபிஎஸ்இ
அறிவித்துள்ளது. ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் உதவி
பேராசிரியர் பணியில் சேர தகுதி பெறுவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...