அரசு பொதுத்தேர்வில் இரண்டாம் முறையாக மறு மதிப்பீடு கோர முடியாது
எனக்கூறி மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. திண்டுக்கல் மாவட்டம்
பழநியைச் சேர்ந்த பொன்ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
என் மகன் செல்வேந்திரன் நாமக்கல் தனியார் பள்ளியில் படித்தான். 2015-16
பிளஸ் 2 தேர்வில் 1140 மதிப்பெண் பெற்றான். உயிரியல் பாடத்தில் 195
மதிப்பெண் பெற்றான்.
இந்த பாடத்தில் மறுமதிப்பீடு கோரினோம். இதனால், அந்த
பாடத்தில் ஒரு மதிப்பெண் கூடுதலாக கிடைத்தது. சில கேள்விகளுக்கு முறையான
மதிப்பெண் வழங்கவில்லை. இதனால் என் மகனால் எம்பிபிஎஸ் படிப்பில் சேர
முடியவில்லை. எனவே, மீண்டும் இரண்டாவது முறையாக மறுமதிப்பீடு செய்ய
உத்தரவிடவேண்டும், என கூறியிருந்தார்.
மனுவை நீதிபதி எம்.வேணுகோபால் விசாரித்தார். கூடுதல் அட்வகேட் ஜெனரல்
செல்லப்பாண்டியன், அரசு வக்கீல் சண்முகநாதன் ஆகியோர் ஆஜராகி, ‘மாணவன்
துல்லியமாக விடையளிக்கவில்லை. கூடுதல் விளக்கம் தேவைப்படுகிறது. ஏற்கனவே
மறுமதிப்பீடு செய்து ஒரு மதிப்பெண் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது
முறையாக மறு மதிப்பீடு கோர முடியாது’ என்றார். இதையடுத்து நீதிபதி, பள்ளி
கல்வி விதிப்படி மறுமதிப்பீடு செய்த பின் ஏற்படும் முடிவு இறுதியானது.
இரண்டாம் முறையாக மறுமதிப்பீடு கோர முடியாது. கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்
என்பதற்கான காரணமும் போதுமானதாக இல்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி
செய்யப்படுகிறது, என உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...