பொறியியல் கலந்தாய்வு தொடங்கி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழ்வழி
சிவில், மெக்கானிக்கல் படிப்பில் இதுவரை 121 மாணவர்கள் மட்டுமே
சேர்ந்துள்ளனர். 1,257 இடங்கள் காலியாக உள்ளன. தனியார் துறையில்
வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதால் தமிழ்வழி பிரிவில் சேர மாணவர்கள் தயக்கம்
காட்டுகின்றனர்.
தமிழ்வழி பொறியியல் கல்வி திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. முதல்கட்டமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகள் தமிழ்வழியில் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 60 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தமிழ்வழி மாணவர்களுக்கு வகுப்புகள் தமிழில் நடைபெறும். செமஸ்டர் தேர்வுகளை அவர்கள் தமிழிலேயே எழுதலாம்.அண்ணா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து, அதன் உறுப்பு கல் லூரிகளிலும் தமிழ்வழி பொறியியல் படிப்புகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ்வழியில் சிவில் இன்ஜினீயரிங் படிப்பில் 660 இடங்கள், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் 718 இடங்கள் என மொத்தம் 1,378 இடங்கள் உள்ளன. தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளின் முதல் அணி (பேட்ச்) கடந்த 2014-ல் படிப்பை முடித்து வெளியே வந்தனர்.
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனால் ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, நெடுஞ்சாலை துறைகள், குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம், வீட்டுவசதி வாரியம் ஆகியவற்றில் உதவி பொறியாளர் வேலைவாய்ப்புகள் உள்ளன. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிலும் தமிழ்வழி பட்டதாரிகளுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.ஆனால், ஆங்கிலவழியில் படித்தவர்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்வழி மாணவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. வளாக நேர்முகத்தேர்வு (கேம்பஸ் இன்டர்வியூ) வேலைவாய்ப்பும் குறைவுதான். இதனால், தமிழ்வழி படிப்பில் சேர மாணவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.தரவரிசை பட்டியலில் அதிக கட்ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தமிழ்வழி படிப்பு குறித்து யோசிப்பதே இல்லை.பிளஸ் 2 வரை தமிழ்வழியில் படித்தவர்கள்கூட தமிழ்வழி படிப்பை தேர்வு செய்வதில்லை. கிராமப்புற மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள்கூட தயங்கியபடிதான் தமிழ்வழி படிப்பை தேர்வு செய்கின்றனர். தமிழ்வழியில் பொறியியல் பாடப்பிரிவுகள் இருப்பது குறித்த விவரம்கூடபல மாணவர்களுக்கு தெரியவில்லை. ஆண்டுதோறும் பொறியியல் கலந்தாய்வின்போது இந்த நிலையே காணப்படுகிறது.பொறியியல் பொது கலந்தாய்வு தொடங்கி கடந்த புதன்கிழமையுடன் 10 நாட்கள் ஆகிவிட்டன. (ரம்ஜான் விடுமுறை காரணமாக நேற்று கலந்தாய்வு நடக்கவில்லை) கலந்தாய்வு தொடங்கி முதல் 2 நாட்கள் எந்த மாணவரும் தமிழ்வழி படிப்பில் சேரவில்லை. 3-வது நாள்தான் மாணவ, மாணவிகளின் கவனம் தமிழ்வழி படிப்பு மீது திரும்பியது.
அன்றைய தினம் 6 பேர் தமிழ்வழி சிவில் இன்ஜினீயரிங் படிப்பிலும், 5 பேர் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பிலும் சேர்ந்தனர்.கடந்த 10 நாட்களில் தமிழ்வழி சிவில் இன்ஜினீயரிங் பிரிவில் 62 பேர், மெக்கானிக்கல் பிரிவில் 59 பேர் என 121 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர் இதில் 58 பேர் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள். இரண்டிலும் சேர்த்து இன்னும் 1,257 இடங்கள் காலியாக உள்ளன.தமிழ்வழி படிப்பில் சேர ஆர்வம் காட்டாதது குறித்து மாண வர்கள் கூறும்போது, ‘‘தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு கேம்பஸ் இன்டர்வியூ வேலை வாய்ப்புகள் குறைவு. வேலைக்கு தேர்வுசெய்யப்பட்டாலும், குறைந்த சம்பளமே கிடைக்கிறது. படித்து முடிக்கும் அனைவருக்கும் எப்படி அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும்? அரசு வேலைவாய்ப்பை மட்டுமே நம்பி தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேர முடியுமா?’’ என்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...