தமிழ் வழி கல்வியில் இன்ஜினியரிங் படிப்பதை மாணவர்கள் புறக்கணித்து
வருகின்றனர். இதற்கான ஒதுக்கீட்டை பயன்படுத்தி, தமிழ் வழி கல்வி படிப்பில்
சேர மறுப்பதால், இந்த ஆண்டில் மட்டும், பி.இ., படிப்பிற்கான, 1,002 இடங்கள்
வீணாகி உள்ளன.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 523 கல்லுாரிகளில், பொது கவுன்சிலிங்
முறையில், 84 ஆயிரத்து, 352 இடங்கள் நிரம்பின; ஒரு லட்சத்து 1,318 இடங்கள்
காலியாக உள்ளன.
பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள, 12 உறுப்பு கல்லுாரிகள் மற்றும்
சென்னை கிண்டி இன்ஜி., கல்லுாரியில், மெக்கானிக்கல் மற்றும் சிவில்
பாடப்பிரிவுகள் உள்ளன. மெக்கானிக்கலில், 718 இடங்கள்; சிவில்
பாடப்பிரிவில், 660 இடங்கள் என, 1,378 இடங்கள், தமிழ் வழி கல்விக்கு என,
கவுன்சிலிங்கில் ஒதுக்கப்படுகின்றன.இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், தமிழ்
வழியில், 1,002 இடங்களில் மாணவர்கள் சேர விரும்பாமல் காலியாக உள்ளன. இந்த
இடங்களை இனி நிரப்ப முடியாது என்பதால், தமிழ் வழி ஒதுக்கீடு வீணாய்
போயுள்ளது.பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்களில், 40 சதவீதம் பேர் ஆங்கில
வழியிலும், 60 சதவீதம் பேர் தமிழ் வழியிலும் படித்து, இன்ஜினியரிங் படிக்க
வருகின்றனர். இவர்களில் தமிழ் வழி மாணவர்களும், ஆங்கில வழியிலேயே பி.இ.,
படிக்க விரும்புவதால், தமிழ் வழி பாடப்பிரிவுகளுக்கு முக்கியத்துவம்
இல்லை.இதுகுறித்து, அண்ணா பல்கலை அதிகாரிகள் கூறியதாவது:
பல்கலை வளாகத்திலுள்ள, கிண்டி இன்ஜி., கல்லுாரியில், வேறு பாடப்பிரிவுகளில்
இடம் இல்லாவிட்டால் மட்டுமே, மாணவர்கள் தமிழ் வழியை தேர்வு செய்யும் நிலை
உள்ளது. அதேநேரம், மாவட்டங்களில் இயங்கும் அண்ணா பல்கலையின் உறுப்பு
கல்லுாரிகளில், தமிழ் வழி படிப்பில் சேர தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு
பதில், தனியார் கல்லுாரி இடங்களை தேர்வு செய்கின்றனர்.
அண்ணா பல்கலை கல்லுாரிகளில் படிக்கும் போது, பல்கலையின் பெயரில் மதிப்பெண்
சான்றிதழ் கிடைக்கும்; கல்வி கட்டணம் பெருமளவு குறையும்; அரசின்
விடுதிகளில் தங்கலாம். பல்கலை மூலம் நேரடி வேலைவாய்ப்பு முகாமும்
நடத்தப்படும். ஆனால், பல பெற்றோருக்குஇது தெரிவதில்லை.இவ்வாறு அவர்கள்
தெரிவித்தனர்.
சான்றிதழில் தமிழ் இருக்காது!
தமிழ் வழி மாணவர்களுக்கு, 'தமிழ் வழி' என்று குறிப்பிட்டு, அண்ணா பல்கலை
சான்றிதழ் தருவதில்லை. அனைத்து மாணவர்களுக்கும் பொதுவாக எந்த, 'மீடியமும்'
குறிப்பிடாமல், சான்றிதழ் வழங்கப்படுகிறது. பாடம் நடத்தும் போதும்,
முழுவதுமாக தமிழில் நடத்தாமல், ஆங்கிலம் கலந்தே நடத்துகின்றனர்.
தேர்வையும், ஆங்கிலத்தில் எழுத மாணவர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது.இந்த
விபரங்களை மாணவர்கள் அறியாமல், தமிழ் வழி என்றால், முழுவதுமாக தமிழ்
மொழிபெயர்ப்பாக இருக்கும் என நினைத்து புறக்கணிக்கின்றனர் என, பல்கலை
அதிகாரிகள் கூறினர்.
ஆங்கிலம் ஆக்கலாம்
தமிழ் வழி படிப்பில், ஒவ்வொரு ஆண்டும் அதிக இடங்கள் காலியாவதால், அந்த
இடங்கள் மாணவர்கள் சேராமல் வீணடிக்கப்படுகின்றன. இதை மாற்ற, இந்த
இடங்களில், 50 சதவீதம் அல்லது, 70 சதவீதத்தை ஆங்கில வழியாக மாற்றினால்,
பல்கலை கல்லுாரிகளில் கூடுதலாக மாணவர் சேர வாய்ப்பு கிடைக்கும் என,
பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...