அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ நுழைவுத் தேர்வை (நீட்-2) எழுத வேண்டும்.
தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும்எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ஓராண்டுக்கு நிறுத்திவைக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, கடந்த ஆண்டுகளைப்போல எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு பிளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் அட்மிஷன் நடைபெறும்.
எனினும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள், ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் அட்மிஷன் மேற்கொள்ள விரும்பும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர விரும்பும் மாணவர்கள், வரும் ஜூலை 24-ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நீட்-2 (NEET-2) நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். தனியார் கல்லூரிகளிலும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்ளிலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களும் இத்தேர்வை எழுத வேண்டும்.
காஷ்மீர், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் (15 சதவீத இடஒதுக்கீடு) உள்ள இடங்களில் சேருவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். எனினும், தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் புனேயில் உள்ள ராணுவ மருத்துவ கல்லூரியிலும் சேர விரும்பும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நீட்-2 நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...