அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கடமைக்கு அல்லாமல் ஈடுபாட்டுடன் கற்பித்தல் பணியை மேற்கொண்டால் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முடியும் என கல்வித்துறை இணை இயக்குனர் பேசினார்.
கல்வியில் பின்தங்கியுள்ள கடலுார் மாவட்டம் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் 30ம் இடமும், 10ம் வகுப்பில் 29ம் இடம் பெற்றது. மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திட பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, மாவட்டத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இணை இயக்குனர் (தொழில் கல்வி) பாஸ்கர சேதுபதி, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கை குறித்து, தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.
கடலுார், கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலந்தாய்வுக்கு, தலைமை தாங்கிய இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி, தேர்ச்சி குறைவிற்கான காரணம், தேர்ச்சி சதவீதத்தை மேற்கொண்டுள்ள நடவடிக்கை, கடந்த 1ம் தேதி முதல் 17ம் தேதி வரை பள்ளிகளில் நடைபெற்ற கற்றல், கற்பித்தல் பணி விபரம், நடத்திய தேர்வுகள், மாணவர்கள் பெற்ற மதிப்பெண், தலைமை ஆசிரியர் மேற்கொண்ட வகுப்பறை கூர்ந்தாய்வு, மாணவர்கள் 100 சதவீத வருகையை உறுதி செய்திட மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்களிடம் தனித்தனியே கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசுகையில், மாணவர்களின் பெற்றோர்களை நேரில் அழைத்து பேசுங்கள். மாணவர் பள்ளி நேரத்தில் வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது. தலைமையாசிரியர்கள் அடிக்கடி ஆசிரியர்களுடன் கலந்தாய்வு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும். ஆசிரியர்கள் கடமைக்காக அல்லாமல் ஈடுபாட்டுடன் கற்பிக்க வேண்டும்.
ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையையும், மாணவர்களிடம் அவரின் அணுகு முறையை தலைமையாசிரியர் கண்காணிக்க வேண்டும். மாணவரின் வார, மாத தேர்வு விடைத்தாள்களை, ஆசிரியர் சரியாக மதிப்பீடு செய்துள்ளாரா என்பதை தலைமை ஆசிரியர் ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர்கள் கடலுார் குமாரசாமி, விருத்தாசலம் கோமதி, சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர்கள் முருகன், தேவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...