மாற்றுத்திறனை காரணம் காட்டி பள்ளியில் சேர்க்க மறுத்ததாக மாணவி புகார்: கட்டணச் சலுகையுடன் கல்வி வழங்க பள்ளி ஒப்புதல்
கோவையில் மாற்றுத்திறனைக் காரணம் காட்டி மாணவியை 9-ம் வகுப்பில் சேர்த்துக்கொள்ள தனியார் பள்ளி நிர்வாகம் மறுத்ததாகக் கூறி மாணவியின் பெற்றோர் ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியே மாணவியைசேர்த்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
கோவை காந்திபுரம் 2-வது வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், கூலித் தொழிலாளி. இவரது மகள்கள் பிரபாவதி(15) மற்றும் பிரியா(15). இருவரும் இரட்டைக் குழந்தைகள். இதில், பிரியா, பிறக் கும்போதே பெருமூளை வாதம் (செரிபெரல் பால்ஸி) என்ற நோயால் பாதிக்கப்பட்டவர். இதனால், உடலில் நரம்பு சுருக்கம் ஏற்பட்டு கை, கால்கள் இயல்பாக இயங்க முடியாத குறைபாடு உள்ளது. தொடர் பிசியோதெரபி சிகிச்சைக் குப் பின்னர் உடல் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அருகில் உள்ள புனித மரியன்னை உயர் நிலைப் பள்ளி யில் சேர்த்துள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 8-ம் வகுப்பு முடித்து 9-ம் வகுப்புக்கு பிரியா தேர்ச்சி பெற்றார். அவரை அடுத்த வகுப்புக்கு பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை எனவும், வேறு பள்ளியில் அவரை சேர்த்துக் கொள்ளுமாறு நிர்பந் தித்து மாற்றுச் சான்றிதழ் வழங்கிய தாகவும், மீண்டும் பள்ளியில் சேர்ந்து பயில வழி ஏற்படுத்திக் கொடுக்கு மாறு பிரியாவுடன் வந்து அவரது பெற்றோர், பாட்டி ஆகியோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து பிரியாவின் பாட்டி ஜெயலட்சுமி கூறும்போது, “பிரியாவின் சகோதரி பிரபாவதி, அதே பள்ளியில் பயின்று தற்போது 436 மதிப்பெண்களுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிளஸ் 1 வகுப்பில் சேர உள்ளார். இதனால், பிரியாவும் கல்வி பயில வேண்டும் என ஆசைப்படுகிறார்” என்றார்.மாணவி பிரியா கூறும்போது, “எனக்கு தொடர்ந்து படிக்க வேண்டும். குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு வரையிலாவது படிக்க விரும்புகிறேன்” என்றார்.
இலவச கணினிப் பயிற்சி
இது குறித்து புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பீட்டர் மரியதாஸ் கூறும்போது, “இந்த பள்ளி, முதல் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அரசு உதவிபெறும் பள்ளி. 9 மற்றும் 10-ம் வகுப்புகள் சுயநிதிப் பள்ளியாக செயல்படுகிறது. அரசு உதவிபெறும் வகுப்புகள் வரை (8-ம் வகுப்பு) மட்டுமே சர்வ சிக்ஷ அபியான் (எஸ்.எஸ்.ஏ) திட்டத்தில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி புரிவதற்காக பயிற்றுநர்களை அனுப்புவார்கள். உயர்நிலை வகுப்புகள் சுயநிதிக் கட்டணத்தின் கீழ் வருவதால் அதற்கான கட்டணம் குறித்தும்,பயிற்றுநர் வசதி இல்லாதது குறித்தும் மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்தோம். இதையடுத்து, அவர்கள்தான் மாற்றுச் சான்றிதழை வாங்கிச் சென்றார்கள். சில நாட்கள் கழித்து வேறு எந்த பள்ளியிலும் அவரை சேர்க்கவில்லை என வந்ததால், ஓராண்டு முழுவதும் கட்டணம் இல்லாமல் கணினி வகுப்புகள் பயில வசதி செய்து கொடுத்தோம்.இதனிடையே, பள்ளியை விட்டு நீக்கிவிட்டதாக ஆட்சியரிடம் புகார் அளித்துவிட்டனர். சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் அவரை பள்ளியில் சேர்த்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளோம். அவர்களும் நாளை (இன்று) அந்த மாணவியை சேர்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.அவர்கள் கோரினால் கட்டணச் சலுகையுடன் கல்வி வழங்கத் தயாராக இருக்கிறோம்.
அந்த மாணவியால் தானாக தேர்வு எழுத முடியாது. மாற்றுத்திறன் காரணமாக எழுதிய எழுத்தின் மீதுஅடுத்தடுத்து எழுதுகிறார். எனவே, 10-ம் வகுப்புத் தேர்வில் உதவியாளர் (ஸ்க்ரைப்) வைத்து தேர்வு எழுத வைக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...