Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அடிமைகளாக்கப்படும் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள்…

தமிழகத்தில் தற்போது சுமார் 650 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி மேற்பார்வையில் நான்கு கல்லூரிகளும்,அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகஉறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவை அடங்கும்.
இது தவிர்த்து பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகள் அனைத்திலிருந்தும் பலஇலட்சம் பொறியியல் பட்டதாரிகள் ஆண்டு தோறும் தேர்ச்சிபெற்று வேலைவாய்ப்பு சந்தையில் நுழைகின்றனர்.தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிப்பதில் கடந்த 30 ஆண்டுகளாக தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னிலையில் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, 2000ம் ஆண்டிற்கு பின்னர், தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆந்திரா மற்றும் கேரளாவில் பெருமளவில் தனியார் கல்லூரிகள் இல்லாமலிருந்த காலத்தில், அம்மாநிலத்திலிருந்து மாணவர்களை கவரும் விதமாக அதன் எல்லைப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் கல்லூரிகள் முளைத்தன. இக்காலகட்டத்தில், ஐ.டி. உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் காலூன்றத் துவங்கின. அந்நிறுவனங்களுக்கு அப்போது பொறியியல் பட்டதாரிகளும் அதிக அளவில் தேவைப்பட்டனர். இந்தியா போன்றமூன்றாமுலக நாட்டில் தொழிலாளர் சட்டங்களையும் மதிக்கவேண்டாம், தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியமும்வழங்கவேண்டாம் என்பவைதானே காரணங்கள்.
மறுபுறம், பல்வேறு விதித் தளர்வுகளின் பலனாக தனியார் பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கையை உயர்த்திக்கொண்டன. உதாரணமாக, ஒரு பிரிவுக்கு 60 மாணவர்கள் வீதம் நான்கு பிரிவுகளுடன் செயல்பட்டு வந்த ஒரு கல்லூரி நிர்வாகத்தால் ஒரு கல்வி ஆண்டில் 240 மாணவர்களை பயிற்றுவிக்க முடியும் என்கிற நிலை இருந்தது. அது மெல்ல மாறி, ஒரு பிரிவில் மட்டும் 120, 180 என மாணவர் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. இதன் மூலம் ஒரு கல்லூரியில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை 240லிருந்து 600 வரை உயர்ந்தது. ஆனால், இத்தனை மாணவர்களை பயிற்றுவிக்க தேவையான ஆசிரியர்களோ, உள்கட்டமைப்பு வசதிகளோ இருப்பதனை பல்கலைக்கழகமோ, அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சிலோ உறுதிபடுத்தவுமில்லை கண்டுகொள்ளவுமில்லை. இதன் மூலம் மாணவர்களின் கல்வித் தரம் மேலும் குறைந்தது.
உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாக 2008ம் ஆண்டிற்கு பின்னர் பல்வேறு பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் துவங்கின. அரசு மற்றும் தனியார்துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை. இதனால் ஒரு புறம் இலட்சக்கணக்கில் படித்து வெளியேறிக்கொண்டிருந்த வேலையில்லாப்பொறியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்துக்கொண்டே போனது.ஒருபுறம் கல்வியின் தரம் குறைந்துகொண்டேபோவதும், மறுபுறம் வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரித்துக்கொண்டேபோவதும் தொடர்ந்தது. இதன் காரணமாக, 2011-12 கல்வி ஆண்டிற்குப்பின் பொறியியல் படிப்பு மீதான மோகம் சிறிது சிறிதாக குறையத் துவங்கியது. இதற்கிடையில் தமிழகத்தின் அருகாமை மாநிலங்களில் நிறைய புதிய தனியார் கல்லூரிகளும் உருவாகியிருந்தன. அதனால் அங்கிருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்தது. தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளில் பல லட்சம் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக ஆரம்பித்துவிட்டது. அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில், பல கல்லூரிகளில் ஒரு இடம்கூட நிரம்பாத நிலையும் உருவானது. 
பல சுயநிதிக் கல்லூரிகள், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைக்கவும், கல்லூரியை நிரந்தரமாக மூடவும், அகில இந்திய தொழிற்நுட்ப கவுன்சிலிடம் விண்ணப்பித்தன. சில பொறியியல் கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகளாகவும், மெட்ரிக், சி.பி,எஸ்,இ பள்ளிகளாகவும் உருமாற்றம்பெற்றன. எப்படியாவது காசு பார்த்தால்போதுமே என்ற நோக்கத்தில்!!!கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததால், அங்கு பணிபுரிந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
*.எந்த முன்னறிவிப்பும் இன்றி நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்
*.பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டே, மீதமுள்ள ஆசிரியர்களும் மிகவும் தரக்குறைவாக நடத்தப்படுகின்றனர்
*.பல மாதங்களாக ஊதியம் வழங்காமலும், ஊதியக்குறைப்பு செய்தும் ஆசிரியர்களை நிர்வாகங்கள் துன்புறுத்துகின்றன
*.ஆண்டு தோறும் வழங்கப்படும் விடுமுறையும் பல கல்லூரிகள் இப்போது வழங்குவதில்லை.
*.பல கல்லூரிகளில் வேலைக்கு சேரும்போதே ஆசிரியர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொள்வதை அக்கல்லூரிகளின் நிர்வாகங்கள் ஒரு வழக்கமாகவே மாற்றிவிட்டன
*.இவை எல்லாவற்றையும் தாண்டி, தற்போது ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்த பட்சம் 2 அல்லது 3 மாணவர்களை புதிதாகச் சேர்த்தால் மட்டுமே, பணியில் தொடர இயலும் என்ற அவல நிலையும் உருவாக்கப்பட்டுவிட்டது
*.மாணவர்களை சேர்க்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே, ஏப்ரல்மற்றும் மே மாதங்களில் ஊதியம் வழங்கப்படும் என்கிற எழுதப்படாத விதி பல கல்லூரிகளில் உருவாக்கப்பட்டுவிட்டனஆசிரியர்களுக்கு இருக்கும் பணிப்பாதுகாப்பற்ற சூழலைப்பயன்படுத்திக்கொண்டு அவர்களைகொத்தடிமைகளாகப் போலவே நடத்துகின்றனகல்லூரிகள்.
தீர்வினை நோக்கி….
தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அதிகக்கல்வி கட்டணம், தொட்டதுக்கெல்லாம் அபராதம், தரமற்ற கல்வி, மோசமான உள்கட்டமைப்பு வசதி உள்ளிட்டவற்றை எதிர்த்து எப்படி மாணவர்களால் ஒருங்கிணைந்து போராடமுடியாத சூழல் இருக்கிறதோ, அப்படியான நிலைதான் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. 
ஒரேயிடத்தில் இருவேறுவிதமாகச் சுரண்டப்படும் மாணவர்களும் ஆசிரியர்களும் கைகோர்த்து தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவேண்டிய காலகட்டமிது. மாணவர்களுக்கு கல்வியைக் கற்பிக்கும் பணியை செய்யவிடாமல், மாணவர் சேர்க்கைக்காக வீடு வீடாக கல்வியை விற்பதற்கு அனுப்புகிற கல்லூரி நிர்வாகத்தை கேள்விகேட்கும்அதிகாரம் ஆசிரியர்களுக்கு கிடைக்கப்போராடவேண்டும். ஒரு கல்லூரியைத் துவங்க அனுமதி வழங்குவதோடு தன் கடமை முடிந்துவிடுகிறது என்று கைகழுவாமல்,அரசாங்கம் இதில் தலையிட்டு நிர்வாகங்களின் அராஜகப்போக்கினை தடுத்துநிறுத்தவேண்டும்.
கல்வி முற்றிலும் வியாபாரமாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் இது போன்ற சுயநிதிக் கல்லூரிநிர்வாகங்களின் எதேச்சதிகார போக்கினை தடுத்து நிறுத்துவதும், அறிவுசார் இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதும் நம் அனைவரின் கடமையே ஆகும்.




1 Comments:

  1. I am also one of the person to be relieved from Madurai KLN Management and KLNIT Principal.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive