பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க
சனிக்கிழமையோடு கால அவகாசம் முடிவடைந்த நிலையில், அன்றையதினம் மாலை 5 மணி
வரை நிலவரப்படி 1.33 லட்சம் பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச்
சமர்ப்பித்திருந்தனர்.
சனிக்கிழமை மாலை 6 மணி வரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம் என்பதாலும்,
தபால் மூலம் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் திங்கள்கிழமை வரை பெறப்படும்
என்பதாலும் இந்த எண்ணிக்கை மேலும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அதிகரிக்க
வாய்ப்பு உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருந்தபோதும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு குறைந்துள்ளது.
2016-17-ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூன் 4-ஆம் வாரத்தில்
தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகத்தை ஏப்ரல் 15-ஆம் தேதி அண்ணா
பல்கலைக்கழகம் தொடங்கியது.
நிகழாண்டில் முதல்முறையாக இணையவழி (ஆன்-லைன்) பதிவு முறையை அண்ணா
பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது. படிவத்தைப் பதிவிறக்கம் செய்து மாணவர்கள்
தங்களது விவரங்களை அதில் பூர்த்தி செய்தி விண்ணப்பிக்கும் வகையில் புதிய
நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வாறு ஆன்-லைனில் பதிவு செய்ய மே 31-ஆம்
தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரம் பேர்
பதிவு செய்தனர்.
ஜூன் 4 கடைசி: ஆன்-லைனில் இருந்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை
பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க சனிக்கிழமையோடு கால அவகாசம் முடிவடைந்தது.
சனிக்கிழமை மாலை 5 மணி வரை 1.33 லட்சம் பேர் மட்டுமே பூர்த்தி செய்த
விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.
கடந்த 2015-16-ஆம் கல்வியாண்டில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 450 பேர் பூர்த்தி
செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். கடந்த 2014-15 கல்வியாண்டில் 1.75
லட்சம் பேரும், 2013-14 கல்வியாண்டில் 1.90 லட்சம் பேரும் விண்ணப்பங்களைச்
சமர்ப்பித்திருந்தனர்.
கலந்தாய்வு எப்போது?: 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை
ஜூன் 4-ஆம் வாரத்தில் நடத்த பல்கலைக்கழகம் உத்தேசித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...