''அரசு ஊழியர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத்
திட்டத்தை மாற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவது குறித்து,
குழு அமைத்து ஆலோசிக்கப்படுகிறது,'' என, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - ஐ.பெரியசாமி: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு,
ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் பன்னீர்செல்வம்: கடந்த, 2003 ஏப்ரல், 1ம் தேதி முதல், அரசு
பணியில் சேர்ந்த, 4.41 லட்சம் ஊழியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியத்
திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதில், அரசு ஊழியர்கள் பங்களிப்போடு, அரசின்
பங்குத் தொகையும் சேர்ந்து அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தை மாற்றி, ஏற்கனவே அமலில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை
அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இது தொடர்பாக ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, வல்லுனர் குழு
அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு அளிக்கும் பரிந்துரைப்படி, அரசு
ஊழியர்களுக்கு, எந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது என்பது குறித்து,
அரசு முடிவெடுக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...