Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி?

         சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்றால் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். வீட்டுக் கடனைத் தாண்டி வீடு கட்ட அங்கீகாரம், திட்டத்துக்கு ஒப்புதல் என நிறைய அனுமதி பெற வேண்டியிருக்கும். வீடுகட்ட அனுமதி வாங்க எங்கே, எப்படி அணுக வேண்டும் என்று பார்ப்போம்.


புதிதாக வீடு கட்ட வேண்டும் என்றாலும், ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டில் கூடுதலாகக் கட்டடங்களைக் கட்டுவதாக இருந்தாலும் அதற்குத் திட்ட அனுமதி பெற வேண்டும்? இந்த திட்ட அனுமதியை எங்கே வாங்குவது? இந்த அனுமதியைச் சென்னை நகர எல்லைக்குள் இருந்தால் பெரு நகர வளர்ச்சிக் குழுமத்திடமும் (சிஎம்டிஎ), சென்னை அல்லாத தமிழகத்தின் பிற பகுதிகள் என்றால் நகரத் திட்ட இயக்ககம் (டிடிசிபி) அமைப்புகளிடம் அனுமதி வாங்க வேண்டும்.



வீடு கட்டுவதற்கான அனுமதி பெறுவதில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்று தெரியுமா? வீடு அல்லது வர்த்தக் கட்டிடங்கள் எதுவாக இருந்தாலும் திட்ட வரைபடம் தேவை. இதை லே-அவுட் என்று சொல்வார்கள். இந்த லே-அவுட் சி.எம்.டி.ஏ. அல்லது டிடீசிபியால் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். வீடு கட்ட விண்ணப்பிக்கும்போது வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைப்படி லே-அவுட் இருக்கிறதா என்பதை அதிகாரிகள் நேரில் வந்து மனையை ஆய்வு செய்வார்கள்.



இந்தத் திட்ட வரைபடமானது முழுமையாக விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால்தான் திட்ட அனுமதி கிடைக்கும். அப்படி இல்லையென்றால் அந்தத் திட்ட வரைபடத்துக்கான அனுமதியை சிஎம்டிஏ அல்லது டிடிசிபி வழங்காது. சென்னையில் வீடு அல்லது கட்டடம் கட்ட வேண்டும் என்றால் சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ. அலுவலகம் செல்ல வேண்டும். அங்கு மட்டுமே திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க முடியும். மற்ற பகுதிகள் என்றால் டிடிசிபியின் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். டிடிசிபி அலுவலகம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் செயல்பட்டுவருகின்றன. .



யார் விண்ணப்பிக்க வேண்டும் என்ற சந்தேகம் இப்போது உங்களுக்கு வரலாம். நிலம் அல்லது மனையின் உரிமையாளர் அல்லது குத்தகைதாரர் ஆகியோர் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியைக் கோரி விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பம், அதற்கென வரையறுக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அலுவலகங்களில் அனுமதி கோரும் இந்த விண்ணப்பப் படிவங்கள் ஏ, பி, சி என மூன்று வகைகளில் இருக்கும்.



விண்ணப்பம் ஏ என்பது வீடு கட்டும் மனைப்பிரிவுக்கான விண்ணப்பம். இந்த விண்ணப்பத்தை வழங்கும்போது மனைக்குரிய எல்லா ஆவணங்களையும் இணைக்க வேண்டும். மனையை வாங்கும்போதே சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அமைப்பின் அங்கீகர வீட்டு மனையாக இருந்தால் பெரும்பாலும் எந்தச் சிக்கலும் வராது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.



விண்ணப்பம் பி என்பது கட்டிடம் கட்டுவதற்கும், ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டடங்களுடன் சேர்த்து புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்கு உரியது. வீட்டை விரிவாக்கம் செய்வதாக இருந்தாலும் இந்த விண்ணப்பத்தை வழங்க வேண்டும். கட்டிடத்தின் திட்ட வரைபடத்தை இணைக்க வேண்டும். வீட்டைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் விவரங்கள் ஆகியவற்றையும் முழுமையாகக் குறிப்பிட வேண்டும்.



விண்ணப்பம் சி என்பது மிகப் பெரிய அளவில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் தொகுப்புக் கட்டிடங்களுக்கு உரியது. இந்த விண்ணப்பம் சிறப்பு அந்தஸ்து உள்ளது என்பதால், இந்த வகை கட்டடங்களுக்கு சிஎம்டிஏ அமைப்பின் உறுப்பினர் செயலரின் அங்கீகாரம் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் கட்டுநர்கள் இந்த விண்ணப்பத்தைத்தான் வழங்குவார்கள்.



இந்த விண்ணப்பங்களை வழங்கினால் மட்டும் போதாது. திட்ட அனுமதி மற்றும் விண்ணப்பத்தோடு உறுதி மொழிப் படிவத்தையும் கண்டிப்பாக இணைக்கச் சொல்வார்கள். உறுதிமொழி அளிப்பதற்கான மாதிரி படிவமும் சிஎம்டிஏ அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது. பல உறுதிமொழிகள் அதில் இடம் பெற்றிருக்கும். குறிப்பாக அனுமதியை மீறிக் கட்டடம் கட்டினால் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டு கையொப்பம் கேட்கப்பட்டிருக்கும். விண்ணப்பங்கள் சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அலுவலகங்களில் கிடைக்கும். தற்போது இந்தப் படிவங்களை சிஎம்டிஏ மற்றும் டிடிசிபியின் இணையதளங்களிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் வந்துவிட்டது.



வீடு கட்டுவதற்கு அனுமதி கோரி பெரும்பாலும் விண்ணப்பம் பி-யே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த விண்ணப்பத்துடன் உரிமையாளர் கையொப்பம், குத்தகைதாரரின் கையொப்பம், அங்கீகாரம் பெற்ற நில அளவையர் கையொப்பம், வீட்டைக் கட்டும் பொறியாளரின் கையெழுத்து, கட்டடம் கட்டுவதற்கான திட்ட வரைபடம் ஆகியவற்றைக் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.

தரைத்தளத்துடன் மூன்று மாடிச் சிறப்புக் கட்டிடம், நான்கு அடுக்குக்கு மேல் உள்ள கட்டிடங்கள் என்றால் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். கட்டிடங்கள் கட்டுவதற்கு சிடிஎம்ஏ அல்லது டிடீசிபியின் அனுமதி வாங்குவதோடு வேலை முடிந்துவிடாது. கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருக்கும்போது ஒவ்வொரு நிலையிலும் விதிமுறைப்படி வீடு ஒழுங்காகக் கட்டப்படுகிறதா எனக் கண்காணிப்பார்கள். விதிமுறையை மீறாமல் வீட்டைக் கட்டுவது வீட்டு உரிமையாளரின் பொறுப்பும்கூட!





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive