தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.
படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான தரவரிசைப் பட்டியலில் கேரள
மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளியில் படித்த மாணவி எம்.வி.ஆதித்யா
மகேஷ் முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த
மாணவர்களில் 3 பேர் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.
படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல்
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்
கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர்
சி.விஜயபாஸ்கர் பட்டியலை வெளியிட்டார். சுகாதாரத் துறை சிறப்புச் செயலர்
எஸ்.செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.விமலா,
தேர்வுக் குழு செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
25,379 பேருக்கு...:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு
பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 26,017 ஆகும். அவற்றில் ஒரு முறைக்கு மேல்
விண்ணப்பித்த 203 விண்ணப்பங்கள், தகுதியில்லாத 435 விண்ணப்பங்கள் நீங்கலாக
25,379 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத
இடஒதுக்கீட்டுக்கு 92 பேர் விண்ணப்பித்துள்ளனர். விளையாட்டுப் பிரிவுக்கான 3
இடங்களுக்கு 316 பேரும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள்
ஒதுக்கீட்டுக்கு 5 எம்.பி.பி.எஸ்., ஒரு பல் மருத்துவ இடம் ஆகியவற்றுக்கு
377 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
200-க்கு 200:
தரவரிசைப் பட்டியலில் 3 மாணவர்கள் 200-க்கு
200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் வெளி
மாநிலங்களில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இருவரும்
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மருத்துவப் படிப்புகளுக்கு
விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டைச்
சேர்ந்த வி.ஆதித்யா மகேஷ் என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இவர் கேரள
மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளியில் படித்துள்ளார். தஞ்சாவூர்
மாவட்டம், திருவையாறைச் சேர்ந்த மாணவர் வி.விக்னேஷ் 2-ஆம் இடம்
பிடித்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஐடியல்
மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டைச்
சேர்ந்த மாணவர் இ.ஜெ.ஞானவேல் 3-ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
7 மாணவர்கள் 200-க்கு 199.75:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு
எஸ்.கே.வி. மேல்நிலைப்பள்ளி மாணவர் கே.கார்த்திக், கன்னியாகுமரி மாவட்டம்,
நாகர்கோவில் ஹீப்ரான் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் ஜி.சுஜின் குமார்,
ஈரோடு ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் பி.கே.அருணேஷ்,
தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி ஆர்.அக்ஷயா,
திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் ஏ.அப்துல்
ஷாரூக், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர்
மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் எஸ்.தீனேஷ்வர், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி
வி.ஆர்த்தி ஆகிய 7 பேரும் 200-க்கு 199.75 கட்-ஆஃப் மதிப்பெண்
பெற்றுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...