கிணத்துக்கடவு அருகே, சிறு கிராமமான சங்கராயபுரத்தில், 'ஏ.சி ஹாலில்' ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது.
அரசுப்பள்ளிகளில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி என்றாலே, சுற்றுச்சுவர் இல்லாத பழைய கட்டடம், மரத்தை சுற்றும் மைதானம், வேலி அருகே, புதருக்குள் துருப்பிடித்த விளையாட்டு உபகரணங்கள் இவைகள் தான் ஞாபகத்துக்கு வரும்.
பெரும்பாலான கிராமங்களில் மைதானம் இல்லாமல் காம்பவுண்டுக்குள் பள்ளிகள் செயல்படுவதால், விளையாட்டு என்பதே தெரியாத மாணவர்களும் உள்ளனர். ஆசிரியர் பற்றாக்குறை, விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் வகுப்பறைக்குள் ஒரே சத்தம் தான். துாரத்தில் தன் வகுப்பை கவனித்துக்கொண்டிருக்கும் ஆசிரியர் 'டேய், டேய்' என,போடும் சத்தம், சீரியசாக பேசிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு எங்கே கேட்கப்போகிறது?
இப்படி இருக்கும் வகுப்புகளையும், பள்ளிகளையும் தான்நாம் இதுவரை தெரிந்து வைத்திருக்கிறோம்.ஆனால், கிணத்துக்கடவு ஒன்றியம், 10 நெ.முத்துார் ஊராட்சியில் உள்ள 'சங்கராயபுரம்' துவக்கப்பள்ளியில், முதல் இரண்டு வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தனியாக பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன.கடந்த, 1974ல் துவக்கப்பட்ட இப்பள்ளி வளாகத்தில் பழமையான ஒரு கட்டடமும், சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு கட்டடமும் உள்ளன. புதிய கட்டடத்தில் அறைகள் பிரிக்கப்படாமல் நீண்ட ஹாலாக உள்ளது. இதில் தான் இரண்டு குளிர்சாதன பெட்டிகள் (ஏ.சி)பொருத்தப்பட்டுள்ளன.இந்த ஸ்மார்ட் ஹாலில், வட்டவடிவ டேபிள்கள் மற்றும் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. ஆசிரியர் இருக்கைக்கு அருகே கம்ப்யூட்டர் உபகரணங்கள் மற்றும் பளபளக்கும் தரைதளம், மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பள்ளியில் மூன்று ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர். இக்கிராமம் மட்டுமின்றி, சுற்றுப்பகுதியில் உள்ள தோட்டங்களில் இருந்தும் 30 மாணவ, மாணவியர் வருகின்றனர். இதமான வகுப்பறை, சுற்றுச்சுவருடன் பள்ளிக்கூடம், விளையாட்டு உபகரணங்கள், தனித்தனி நவீன கழிப்பிடங்கள் கொண்ட இப்பள்ளி கலெக்டரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. மதிய உணவும் தரப்படுகிறது.
எதிர்காலத்தில் மாணவர் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக்கொள்வதே எங்கள் நோக்கம். அதற்காக, கடுமையாக உழைக்கிறோம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...