சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு பொறியியல் சேர்க்கை பெரும்பாலும் முடிந்து விட்ட நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையேயும், பெற்றோரிடையேயும் எழுந்துள்ளது.
2016-17 கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச்சாளர கலந்தாய்வுக்கு 1.45 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டுகளைவிடக் குறைவாகும். கடந்த 2015-16-ஆம் கல்வியாண்டில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 450 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.தேதியை இறுதி செய்வதில் இழுபறி: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆகஸ்ட் 1-ஆம் தேதி பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியாக வேண்டும். இதன் காரணமாக வழக்கமாக ஜூலை 1-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கப்பட்டுவிடும். அதற்கு முன்னதாக விளையாட்டுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் என சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுவிடும்.
அதுபோல, 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூன் 4-ஆம் வாரத்தில் நடத்த அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் உத்தேசித்துள்ளனர். ஜூன் 20-இல் தரவரிசைப் பட்டியல் வெளியிடவும், ஜூன் 27-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.ஆனால், உயர் கல்வித்துறை உயர் அதிகாரியின் ஒப்புதல் கிடைக்காததால், தேதியை இறுதி செய்வதில் இழுபறி நீடித்துவருவதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
முந்தைய ஆண்டுகளில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையிலான, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் உள்ளிட்டோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு தேதியை இறுதி செய்து அறிவித்துவிடும்.ஆனால், நிகழாண்டில் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டதால், ஒவ்வொரு முடிவுக்கும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், மாணவர் சேர்க்கை செயலர் உள்ளிட்டோர் தலைமைச் செயலகம் சென்று உயர்கல்வித் துறை அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற வேண்டியச் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவே இழுபறிக்குக் காரணம்.வருகிற புதன்கிழமை (ஜூன் 8) மீண்டும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிடும் என நம்புகிறோம் என பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...