தஞ்சையைச் சேர்ந்த தனியார் பள்ளி, மாணவ - மாணவியர் அதிகளவில் சேருவதற்காக, கவர்ச்சி விளம்பரம் செய்து ஏமாற்றியது. நாமக்கல்லில் இருந்து பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களை, பள்ளியில் இடங்கள் பூர்த்தியானதும், நேற்று அடித்து விரட்டியது.
ஆசிரியர்களுக்கு ஆதரவாக களம் இறங்கிய மாணவ, மாணவியரைகேவலமாக பேசி, பள்ளியை விட்டு விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாரியம்மன் கோவில் அருகே, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாமல் இருந்தது. மாணவ - மாணவியர் அதிகளவில் வந்து சேர்வதற்காக, புது பாணியை கையாண்டது.
நாமக்கல் கல்வி முறை நாமக்கல்லில் இயங்கி வரும் பிரபல பள்ளியில் பணியாற்றிய, ஏழு ஆசிரியர்களை, பள்ளி நிர்வாகம் அழைத்து வந்தது. அவர்கள் தங்கள் பள்ளியின் இயக்குனர்கள் என்று கூறி, ஒப்பந்த அடிப்படையில், அவர்களை பணிக்கு சேர்த்துள்ளது. ஐந்து ஆண்டுகள் பணி என, அழைத்து வரப்பட்ட ஆசிரியர்களிடம் பள்ளி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆசிரியர்களின் புகைப்படத்தை வெளியிட்டு, 'நாமக்கல் கல்வி முறை' எனக் கூறி, பிரம்மாண்டமாக விளம்பரம் செய்திருந்தது. இதை பார்த்து, தஞ்சை மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவ - மாணவியர் சேர்ந்தனர்.
பெற்றோர் அனைவரும் இந்த ஏழு ஆசிரியர்களை நம்பி, தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு பெற்றோரும், ஒரு லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தி உள்ளனர். பள்ளியில் மாணவ - மாணவியர் சேர்க்கை முடிந்ததும், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் ஏழு பேரையும் பள்ளியை விட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. நேற்று காலை, ஏழு ஆசிரியர் களில் ஒருவரை, பள்ளி காவலாளி அடித்து, பள்ளியை விட்டு வெளியே தள்ளியுள்ளார். இதை பார்த்த, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ - மாணவியர், ஆசிரியருக்கு ஆதரவாக களம் இறங்கி போராட்டம் நடத்தி உள்ளனர்.
உடனடியாக பள்ளி நிர்வாகம், விடுதியில் தங்கியிருந்த மாணவ - மாணவியருக்கு காலை உணவு வழங்காமல், அவர்களது புத்தகப்பையை வெளியே துாக்கி வீசி, தரக்குறைவாக பேசி விரட்டி அடித்துள்ளது. தாங்கள் பள்ளியை விட்டு விரட்டி அடிக்கப்பட்டதை, மாணவியர் அழுதபடி பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டனர்.
பணியாளர்கள் வேதனை : இந்த தகவல் காட்டுத் தீ போல் பரவியதால், அனைத்து பெற்றோரும் பள்ளி முன் திரண்டனர். லட்சக்கணக்கில் பணத்தை கட்டணமாக பெற்றுள்ள பள்ளி நிர்வாகம், வெறும், 25 ஆயிரம் ரூபாய்க்கு தான் ரசீது தருவதாகவும், அதுவும் முறையான ரசீதாக இல்லாமல், வெள்ளை தாளில் எழுதிக் கொடுப்பதாக பெற்றோர் கண்ணீர் வடித்தனர். பள்ளி நிர்வாகி கலையரசியும், துணை முதல்வர் பானுவும் தங்களது படிப்புக்கு மரியாதை கொடுக்காமல், தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசி கேவலப்படுத்தினர்; தங்களது கல்விச் சான்றிதழை வைத்துக் கொண்டு தர மறுப்பதாக ஆசிரியர்களும், பணியாளர்களும் வேதனை தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் மற்றும் வட்டாட்சியர், பள்ளி நிர்வாகத்துடன் பேச்சு நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...