தமிழகத்தில், 2,823 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கே வராத நிலையில், விபத்துகள் நடக்கத் துவங்கி உள்ளன.
பள்ளி வாகன பாதுகாப்பு விஷயத்தில், போக்குவரத்து துறை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
திருப்பூரை அடுத்த விஜயாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனம், நேற்று, இந்திரா நகர் பகுதியில் சென்ற போது, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 20 மாணவ, மாணவியர் காயமடைந்தனர்.
தமிழகத்தில், 26 ஆயிரத்து, 400 பள்ளி வாகனங்கள் உள்ளன. இவற்றில், 2,823 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கே கொண்டு வரப்படவில்லை. இந்த சூழலில் தான், இந்த விபத்தும் நிகழ்ந்திருக்கிறது. இதனால், ஆய்வுக்கு வராத வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்படுகிறதா என்பதை, போக்குவரத்து துறை கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது.
இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது:
ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர், கல்வித் துறை அதிகாரி, மோட்டார் வாகன ஆய்வாளர், பெற்றோர் -- ஆசிரியர் சங்க பிரதிநிதி ஆகியோர் இடம் பெற்ற போக்குவரத்து குழு இருக்க வேண்டும்.
இந்த குழு, வாகனம் மற்றும் ஓட்டுனர் உடற்தகுதி நிலை குறித்து, அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகள் திறந்து, ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், இந்த குழு ஆலோசனை கூட்டம் நடத்தியிருக்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் போக்கு வரத்து குழுவே அமைக்கவில்லை என்பது தான் தற்போதைய நிலை. இனியாவது போக்குவரத்து துறை விழித்துக் கொண்டு, இவற்றை சரி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...