பள்ளி மாணவர்களுக்கு மாம்பழச்சாறு வழங்குவது என்பது உகந்த திட்டம் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தில் திமுக எம்எல்ஏ செங்குட்டுவன், "பள்ளி
மாணவர்களுக்கு மாம்பழச்சாறு வழங்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதா'
என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா, "இந்தத் திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை' என்றார்.
செங்குட்டுவன்: கிருஷ்ணகிரியில் 40 ஆயிரம் ஹெக்டரில் மா விவசாயம்
நடைபெறுகிறது. இதில் 3.5 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் கிடைக்கின்றன. 2
லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் தனியார் தொழிற்சாலைகளில்
பழக்கூழாக்கப்படுகின்றன. மீதம் ஒன்றரை லட்சம் மாம்பழங்கள்
வீணாகிவிடுகின்றன. இவற்றை அரசே கொள்முதல் செய்து, பள்ளி மாணவர்களுக்கு
சத்துணவுடன் பழச்சாறாக வழங்கப் பரிசீலிக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா: மாம்பழச்சாறும், மாம்பழக் கூழும் உபரியாக இருக்கிறது
என்றால், அதை விற்பனை செய்வது, எப்படி ஏற்றுமதி செய்வது என்பது தொடர்பாக
அரசு ஆராயும். இதற்காக மாம்பழச் சாற்றை பள்ளி குழந்தைகளுக்கு கொடுத்தால்,
அது எல்லோருக்கும் ஏற்றுக் கொள்ளாது. பல குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு
ஏற்படும். எனவே, மாம்பழச்சாறு கொடுப்பது என்பது உகந்த திட்டம் இல்லை.
செங்குட்டுவன்: 2011-ஆம் ஆண்டில் இதே முதல்வர் தலைமையில் நடந்த மாவட்ட
ஆட்சியர்கள் கூட்டத்தில்தான், பள்ளி மாணவர்களுக்கு மாம்பழச்சாறு
கொடுக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. அந்த அடிப்படையில்தான் இந்தக்
கேள்வி கேட்கிறேன்.
முதல்வர் ஜெயலலிதா: வாழ்க்கையில் பல கட்டங்களில் பலவற்றைக் கூறுகிறோம்.
அதைப் பற்றி நன்றாக புரிந்து கொண்ட பிறகு கருத்தை மாற்றிக் கொள்கிறோம்.
அன்றைய தினம் மாம்பழச்சாறு வழங்கலாம் என்று நினைத்தோம். அதன் பிறகு,
மாம்பழச்சாறு வழங்கினால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் என்று
மருத்துவர்கள் கூறியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
மு.க.ஸ்டாலின்: முதல்வர் கூறுவதை ஏற்கிறோம். சத்துணவுடன் பால் வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
முதல்வர் ஜெயலலிதா: இது தனி கேள்வியாகக் கேட்க வேண்டியது. துணைக் கேள்வியாகக் கூடாது. இதுதொடர்புடைய கேள்வி இல்லை என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...