ஜாதிச் சான்றிதழ் வழங்காததால் “கல்விக்கு முழுக்கு”
போட்டுவிட்டு, குடுகுடுப்பை சமுதாயத்தைச் சேர்ந்த சிறுவர்கள் குலத்தொழிலை
பார்க்க புறப்படும் அவலம் தொடர்கிறது.
திருவண்ணாமலை அருகே அய்யம் பாளையம் புதூர் கிராமத்தில்
குடுகுடுப்பை சமுதாயத்தைச் சேர்ந்த 550-க்கும் மேற்பட்டோர் வசித்து
வருகின்றனர். அவர்களில், ஒருவருக்குக் கூட ஜாதிச் சான்று கிடைக்கவில்லை.
உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி, உயர்கல்விக்கு செல்லவேண்டும் என்றால்
ஜாதிச் சான்று அவசியம். அது இல்லாத காரணத்தால் கல்வியைத் தொடர முடியாத நிலை
குடுகுடுப்பைக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எங்களோடு கஷ்டங்கள் முடியட்டும்
இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவர்
கூறும்போது, “ஜாதி சான்று இல்லாததால் படிக்க முடியவில்லை, வேலைக்குச் செல்ல
முடியவில்லை. நாங்களும் 30 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
ஆனால், எங்களுக்கு இந்து - குடு குடுப்பைக்காரர் கணிக்கர்
(பழங்குடியினர்) ஜாதிச் சான்று வழங்க அரசாங்கம் மறுக்கிறது. இதனால், எங்கள்
பிள்ளைகள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் 2 தலைமுறை மட்டும்
இல்லாமல், 3-வது தலைமுறையும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒரு சிலர், படித்துவிட்டு வேலைக்குப் போக வேண்டியதானே
என்கின்றனர். அவர்கள் கேட்பது நியாயமான கேள்வி. படிக்கவும், வேலைக்குச்
செல்லவும் ஜாதிச் சான்று அவசியமாகிறது. போலீஸ் விசாரணை என்றால்கூட ஜாதிச்
சான்று இருக்கிறதா? என்று கேட்கின்றனர். எங்கள் சமூகத்தினர் 8-ம் வகுப்பு
வரை படிப்பதே அதிகம்.
காஞ்சிபுரம், சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் வசிக்கும்
எங்கள் சமுதாய மக்களுக்கு கணிக்கர் என்று ஜாதிச் சான்று வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, எங்களுக்கும் வழங்கினால் கல்லூரி படிப்பு முடிந்து நல்ல
வேலைக்கு செல்வோம். அனைத்து கஷ்டங்களும் எங்களோடு முடிந்து போகட்டும்.
அடுத்த தலைமுறையின் நிலை மாறவேண்டும். அதற்கு, எங்களுக்கு கணிக்கர் என்று
ஜாதிச் சான்று வழங்கவேண்டும். கணிக்கர் என்று ஜாதிச் சான்று பெற்ற சிலர்
படித்து வேலைக்கு சென்றுள்ளனர். அவர்களைப் போன்று எங்கள் பிள்ளைகளும்
படித்து வேலைக்கு செல்லவேண்டும் என்பதே எங்கள் கனவு” என்றார்.
ஆய்வு செய்து நடவடிக்கை
இது குறித்து தி.மலை கோட்டாட்சியர் இரா.உமா மகேஸ்வரி
கூறும்போது, “காஞ்சிபுரம் மாவட்டத்தில் கணிக்கர் என்று குறிப்பிட்டு ஜாதிச்
சான்று வழங்கி உள்ளதாக, நகல் ஒன்றை கொடுத்தனர். கன்னியாகுமரி, செங்கோட்டை
வட்டத்தில்தான் பழங்குடியினர் பட்டியலில் கணிக்கர் சமுதாயத்தினர் வசிப்பதாக
அரசுப் பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது. திருவண்ணாமலை பற்றி குறிப்பிடவில்லை.
அவர்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றதும், உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை
எடுப்போம். அவர்களது பூர்வீகம், கலாச்சாரம், வழிபாடு முறை போன்றவை குறித்து
ஆய்வு செய்யவேண்டும். எந்த மனுக்களையும் நிராகரிக்க மாட்டோம்”
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...