தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் உள்ள 13 பட்டப் படிப்புகளில் 2016-17ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை சுமார் 34 ஆயிரம் பேர் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்பியிருந்தனர். இதையடுத்து விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியும், தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணியும் கடந்த சில நாள்களாக நடைபெற்ற நிலையில், தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் கு.ராமசாமி பங்கேற்று தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டார். தரவரிசைப் பட்டியலில் நாமக்கல் எஸ்.தீனேஸ்வர், திருச்சி தட்சிணாமூர்த்தி, ராமநாதபுரம் ஆர்.மனோஜ்குமார் ஆகியோர் தலா 199.75 மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர். தொடர்ந்து, எஸ்.வேணுபிரீத்தா, எஸ்.தியாகராஜன், எஸ்.மீனாட்சிசுந்தரம், ஏ.கோகுலகிருஷ்ணா, வி.பிரவீண், என்.ரம்யா, ஆர்.முகுந்தன் ஆகியோர் முறையே 199.50 முதல் 199.25 மதிப்பெண்கள் வரை பெற்று 4 முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளனர்.
இதற்கிடையே, பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகள் அனைவருமே மருத்துவப் படிப்பையே தேர்வு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 27-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் 2 நாள்களில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் போன்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து ஜூலை 4-ஆம் தேதி பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. வகுப்புகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...