பள்ளி, கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள 300
அடி சுற்றளவில் அமைந்து இருக்கும் கடைகளில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை
பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க சிறப்பு குழு ஏற்படுத்தி திடீர்
ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில்
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த டி.சி.சரத் என்பவர் தாக்கல் செய்த மனு விவரம்:
பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை உள்ளது. ஆனால் தடையை மீறி பொது இடங்களில்
புகைப்பிடிப்பது வாடிக்கையாக உள்ளது. எனவே தடை உத்தரவின் அடிப்படையில்,
எங்கள் பகுதியில் தகுந்த நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி ஆணையர், துணை
ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி என்.கிருபாகரன் முன்பு
திங்கள்கிழமை (ஜூன் 6) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தமிழக
சுகாதாரத்துறை செயலாளர், தமிழக டி.ஜி.பி. ஆகியோரை தாமாக முன் வந்து எதிர்
மனுதாரராக நீதிபதி சேர்த்தார். மேலும், இந்த மனுவுக்கு விரிவான பதில்
மனுவையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, இந்த மனு மீண்டும் நீதிபதி
கிருபாகரன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்
பிறப்பித்த உத்தரவு: கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள 300 அடி சுற்றளவில்
இருக்கும் கடைகளில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்யக்
கூடாது என்று விதிகள் உள்ளன.
இருப்பினும், விதிமுறைகளை மீறி பள்ளி, கல்வி
நிறுவனங்கள் அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருள்களை விற்பனை
செய்யப்படுகின்றன. இதனால், அவற்றை பள்ளி செல்லும் குழந்தைகள் எளிதில்
அணுகுகின்றனர்.
பொது இடங்களில், புகையிலை பயன்படுத்துவதால்
சுகாதாரச் சீர்கேட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும். கடந்த 1986, 1990-ஆம்
ஆண்டுகளில் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை கூட்டத்தில், சிகரெட் உள்ளிட்ட
புகையிலை பழக்கத்துக்கு ஆளாகியிருக்கும் குழந்தைகள், இளைஞர்களைப் பாதுகாக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தீர்மானம் இயற்றி உறுப்பு நாடுகளை
வலியுறுத்தியது.
இதைத் தொடர்ந்து, கடந்த 2004-ஆம் ஆண்டு
சிகரெட், பிற புகையிலைப் பொருள்கள் (விளம்பரத்தைத் தடை செய்வது மற்றும்
விற்பனை, வர்த்தகம், உற்பத்தி, விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது) சட்டம்
அமலுக்குக் கொண்டு வந்தது.
கல்வி நிறுவனங்கள் அருகில் சிகரெட் உள்ளிட்ட
புகையிலை பொருள்களை விற்பனை செய்யக்கூடாது, 18 வயது நிரம்பாதவர்களுக்கு
புகையிலை பொருள்களை விற்கக் கூடாது, பொது இடங்களில் சிகரெட் பிடிக்கக்
கூடாது உள்ளிட்டவை சட்டத்தில் இடம்பெற்றன.
இந்த நிலையில், சென்னையில் கடந்த ஜனவரி
முதல் மார்ச் மாதம் வரை, தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒரு ஆய்வை
மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில், பள்ளி, கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள
300 அடி சுற்றளவில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் தடையின்றி
விற்பனைக்கு கிடைக்கின்றன. மேலும்,
பொது இடங்களில் புகைப் பிடிப்பதற்கு தடை இருந்தும், 84 சதவீதம் பேர் கடைகள் முன்பே புகை பிடிக்கின்றனர்.
98.8 சதவீதம் கடைகளில், 18 வயதுக்கு கீழ்
உள்ளவர்களுக்கு புகையிலை பொருள்கள் விற்பனை செய்ய தடை என்ற எச்சரிக்கை
பலகைகள் வைக்கப்படவில்லை. 56 சதவீதம் கடைகளில் புகையிலை பொருள்கள் எளிதில்
தெரியும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 87.7 கடைகளில் குழந்தைகள்
தடையின்றி சிகரெட்டை வாங்கிச் செல்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதேபோன்று பல்வேறு அமைப்புகளும், ஆராய்ச்சி மாணவர்களும் நடத்திய ஆய்வில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எனவே, கூட்டரங்கம், மருத்துவமனை, சுகாதார
நிலையம், கல்வி நிறுவனம், நூலகம், நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகங்கள்,
ரயில் நிலையம் உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்களின் அருகே சிகரெட்
உள்ளிட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது மத்திய, மாநில
அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிகரெட் புகையினால் ஏற்படும் பாதிப்பில்
இருந்து பொது மக்களை, குறிப்பாக குழந்தைகளைக் காப்பாற்றுவது அரசின்
கடமையாகும். எனவே, தமிழக டி.ஜி.பி., சென்னை காவல்துறை ஆணையர், தமிழக
சுகாதாரத் துறை ஆகியோர் பள்ளி, கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள 300 அடி
சுற்றளவில் அமைந்து இருக்கும் கடைகளில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை
பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க சிறப்பு குழு ஏற்படுத்தி திடீர்
ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புகையிலை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளுக்கு அருகில் புகையிலை பொருள்கள் குறித்த விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்றவேண்டும்.
பொது இடங்களில் நின்று புகை பிடிக்கும்
நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதுபோன்று எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவர அறிக்கையை வரும் 20-ஆம்
தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...