உயர் கல்வித்துறையில் குவிந்த புகார்களை தொடர்ந்து, செயலர் அபூர்வா மாற்றப்பட்டுள்ளார்.
உயர் கல்வித்துறை செயலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அபூர்வா, 2014 டிசம்பரில் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றது முதல், உயர் கல்வித் துறையில் தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தன.
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் மற்றும் செயலர் மீது, பேராசிரியர்களும், கல்லுாரி நிர்வாகங்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.பல்கலை துணைவேந்தர் நியமன பிரச்னை, பல்கலைகளில் துணைவேந்தர் இடங்கள் காலியான போது, அவற்றில் ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பது, ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் நியமனம் என, பல்வேறு நடவடிக்கைகளிலும், விதிமீறல் நடந்ததாக புகார்கள் எழுந்தன.சமீபத்தில், சென்னை பல்கலையில், 'செனட்' மற்றும், 'சிண்டிகேட்' கூட்டத்தில் நடந்த விவாதங்களும், தீர்மானங்களும், பேராசிரியர்கள் மத்தியில், செயலரின் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. சென்னை பல்கலைக்கு வந்த, யு.ஜி.சி., நிதியை, விதிகளை மீறி, 'சிண்டிகேட்' ஒப்புதல் இல்லாமல், வேறு உபயோகத்துக்கு பயன்படுத்தியதாக எழுந்த புகார், 'செனட்' கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், நீதி விசாரணை கேட்டு, 'செனட்' தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
சென்னை பல்கலை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் நியமனத்தில் விதி மீறல் ஏற்பட்டதால், செயலரின் முடிவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பேராசிரியர்கள் வழக்கு பதிவு செய்ததுடன், கவர்னரிடமும்மனு கொடுத்தனர்.இந்த பிரச்னைகள் குறித்த செய்தி, நமது நாளிதழில், இரு தினங்களுக்கு முன் வெளியான நிலையில், உயர் கல்வி செயலர்அபூர்வா, அந்த பொறுப்பிலிருந்து உடனடியாக மாற்றப்பட்டு,அந்த இடத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி கார்த்திக்குக்கு, கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...