மதுரை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை சிண்டிகேட் உறுப்பினரின் எதிர்ப்பால் பதிவாளர் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இப்பல்கலை சிண்டிகேட் உறுப்பினரும், பாபநாசம் திருவள்ளுவர் கல்லுாரி இணைப் பேராசிரியருமான சுப்பராஜூ உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
பல்கலையின் அதிகாரம் கொண்ட சிண்டிகேட் அமைப்பு, புதிய கல்லுாரிகளுக்கு இணைவிப்பு மற்றும் புதிய படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும். இணைவிப்பு வழங்க துணை மற்றும் ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்படும்.
இந்நிலையில், 2016- 17 ம் ஆண்டில் 32 கல்லுாரிகளுக்கு தொடர் இணைவிப்பு மற்றும் புதிய படிப்புகளுக்கான அங்கீகாரம் வழங்க துணைவேந்தரால் துணை மற்றும் ஆய்வுக் குழுக்கள் அமைக்க ஒப்புதல் வழங்குமாறு 27.5.2016ல் சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பினார்.
அதில், 'பத்து நாட்களுக்குள் ஒப்புதல் வழங்காவிட்டால் ஒப்புதல் வழங்கியதாக கருதப்படும்,' என கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக சிண்டிகேட்டில் முன்கூட்டியே விவாதிக்கப்படவில்லை. கல்லுாரிகளுக்கு தொடர் இணைவிப்பு வழங்குவது மற்றும் புதிய படிப்புகள் துவங்குவது மாணவர்கள் நலன் சார்ந்தது. சிண்டிகேட்டில் முழுமையாக விவாதிக்காமல் வெறுமனே ஒப்புதல் வழங்க முடியாது.
மேலும் துணை மற்றும் ஆய்வுக் குழுக்கள் அமைக்க துணைவேந்தருக்கு அதிகாரம் இல்லை.
சிண்டிகேட் தான் முடிவு செய்யும். இதனால் குழுக்கள் அமைக்க ஒப்புதல் கோரி பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும், என மனுவில் கூறப்பட்டிருந்தது.
நீதிபதி எம்.வேணுகோபால் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஐசக்மோகன்லால், சிபிசக்கரவர்த்தி வாதிட்டனர்.
குழுக்கள் அமைப்பது தொடர்பான பதிவாளரின் சுற்றறிக்கைக்கு இடைக்கால
தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...