ஐஐடி-க்களில் சேர வேண்டும் என்பதற்காக ஆந்திரம், தெலங்கானா சென்று பள்ளிப்
படிப்பை மாணவர்கள் மேற்கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு பிற மாநிலங்களுக்குச் சென்று பிளஸ்1, பிளஸ் 2 படித்து வரும்
மாணவர்களுக்கு தமிழகத்தில் உயர் கல்வி படிக்க மாநில ஒதுக்கீட்டில்
முன்னுரிமை அளிப்பதற்கு கல்வியாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம்
புதன்கிழமை வெளியிட்டது.இதில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களில்
இரண்டு பேர் பத்தாம் வகுப்பு வரை தமிழகத்தில் படித்துவிட்டு, பிளஸ் 1,
பிளஸ் 2-வை ஆந்திரத்திலும், தெலங்கானாவிலும் முடித்தவர்கள்.தமிழகத்தைப்
பொருத்தவரை, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மொத்தம் 6 பாடங்கள். முதல்
மொழிப் பாடம், இரண்டாம் மொழிப் பாடம், கணிதம், இயற்பியல், வேதியியல்,
உயிரியல் என ஆறு பாடங்களை தமிழக மாணவர்கள் படித்தாக வேண்டும். பிளஸ் 2
வகுப்பில் எந்தப் பிரிவை எடுத்தாலும் 6 பாடங்கள்தான்.ஆனால், ஆந்திரம்,
தெலங்கானாவில் பெரும்பாலான பள்ளிகள் ஐஐடி சேர்க்கைக்காக முன்னுரிமை
அளித்து, அதற்காக பள்ளி பாடத் திட்டத்தையே மாற்றியமைத்துள்ளன. பிளஸ் 2
வகுப்புக்கு 5 பாடங்கள் மட்டுமே. அதாவது ஆங்கிலம், சம்ஸ்கிருதம், கணிதம்,
இயற்பியல், வேதியியல் ஆகிய 5 பாடங்கள் மட்டுமே அவர்கள்
படிக்கின்றனர்.அதிலும், வகுப்பில் பெரும்பாலும் பள்ளிப் பாடங்கள் நடத்தப்பட
மாட்டாது. ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மட்டுமே
நடத்தப்படுகின்றன.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்
பட்டியலில் 3-ஆவது இடம் பிடித்த நெய்வேலியைச் சேர்ந்த மாணவர் என். பரதன்
கூறியதாவது:ஐஐடி-யில் சேர்வதே எனது லட்சியம். அதற்காக நெய்வேலியில் தனியார்
மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த நான், பின்னர் பிளஸ் 1,
பிளஸ் 2 வகுப்புகளை ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள நாராயணா ஜூனியர்
கல்லூரியில் சேர்ந்து படித்தேன்.ஆந்திர மாநில பிளஸ் 2 பொதுத் தேர்வில்
கணிதத்தில் 300-க்கு 300, இயற்பியலில் 150-க்கு 150, வேதியியலில் 150-க்கு
150, சம்ஸ்கிருதத்தில் 200-க்கு 196, ஆங்கிலத்தில் 200-க்கு 176
மதிப்பெண்கள் பெற்றேன். ஐஐடி சேர்க்கைக்கு 7,000-ஆவது ரேங்க்
கிடைத்திருக்கிறது. ஐஐடி-க்கே முன்னுரிமைகொடுப்பேன். அடுத்து திருச்சி
என்ஐடி. அதிலும் விரும்பிய பிரிவு கிடைக்க வில்லையெனில், அண்ணா
பல்கலைக்கழகத்தில் பி.இ. மெக்கானிக்கல் பிரிவைத் தேர்வு செய்வேன்.ஆந்திரப்
பள்ளிகளைப் பொருத்தவரை, வகுப்பில் பிளஸ் 2 பாடங்கள் நடத்துவது மிகவும்
குறைவு.பெரும்பாலும் ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகளே நடைபெறும்.
அதாவது, 80 சதவீதம் ஐஐடி தேர்வு பயிற்சியே நடைபெறும். வாரத்துக்கு ஒரு
தேர்வு நடத்தப்படும். இந்தப் பயிற்சியை வைத்தே வகுப்புப் பாடங்களையும்
புரிந்து கொள்வதோடு, பொதுத் தேர்வையும் எழுதிவிடுவோம்என்றார் அவர்.இதுபோல,
அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் தரவரிசைப் பட்டியலில் 5-ஆவது ரேங்க் பெற்ற
மாணவரான திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த எஸ். சிவராம்
குருத்விக்கும், பத்தாம் வகுப்பு வரை தமிழகத்தில் படித்துவிட்டு, தெலங்கானா
மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சைதன்யா ஐஐடி அகாதெமியில் பிளஸ் 1, பிளஸ் 2
படித்துள்ளார்.இவர் கணிதத்தில் 300, இயற்பியலில் 150, வேதியியலில் 150,
சம்ஸ்கிருதத்தில் 195, ஆங்கிலத்தில் 190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரும்
ஐஐடி அல்லது என்ஐடி-க்கு முன்னுரிமை அளிக்க உள்ளார். அவற்றில் இடம்
கிடைக்கவில்லையெனில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இசிஇ பிரிவை எடுக்க
உள்ளார்.பொது அறிவை வளர்க்கும் பாடங்களுக்கு முக்கியத்துவம் அல்லாமல், பொது
நுழைவுத் தேர்வு ஒன்றையே மையமாக வைத்து வகுப்புகள் நடத்தப்படும்
ஆந்திரத்துக்குச் சென்று பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் வழக்கம் கடந்த சில
ஆண்டுகளாக தமிழக மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது.இந்த மாணவர்களுக்கு
தமிழகத்தில் உயர் கல்வியில் முன்னுரிமை அளிக்கப்படுகிற போது, நமது
மாநிலத்திலும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடங்களின் எண்ணிக்கையை
5-ஆகக் குறைக்க வேண்டும். இல்லையெனில், ஆந்திரத்தில் படித்து
வருபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்
கல்வியாளர்கள்.
தவறான முன்னுதாரணம்!
பிற மாநிலங்களில் மேல்நிலைப் படிப்பை முடித்து வரும் மாணவர்களுக்கு மாநில
ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிப்பது, தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றார்
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
இது குறித்துஅவர் மேலும் கூறியதாவது:ஆந்திரம், தெலங்கானா மாநில மக்களைப்
பொருத்தவரை, அமெரிக்கா செல்வதற்கான நுழைவு வாயிலாக ஐஐடி-ஐ பார்க்கின்றனர்.
இதனால், பள்ளி பாடத் திட்டத்தையே அவர்கள் மாற்றியமைத்துவிட்டனர். முழுவதும்
வணிகமயம்.பிளஸ் 2 வகுப்பில் 5 பாடங்கள் மட்டுமே நடத்தப்படுகின்றன
என்பதோடு, முழுமையான கற்பித்தலுக்கு அவர்கள் முன்னுரிமை அளிப்பதில்லை
என்பது நன்கு தெரிகிறது. மேலும, ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம்
வரை கட்டணம் வசூலிக்கின்றனர். "நீட்' பொது நுழைவுத் தேர்வு
கட்டாயமாகியிருந்தால் தமிழகமும் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும்.எனவே,
தமிழக ஒதுக்கீட்டிலான பி.இ. இடங்களில் ஆந்திரத்தில் படித்து வரும்
மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது, தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.
முற்றிலும் தவறான நடைமுறை என்றார் அவர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியதாவது:பொறியியல்
கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க
வேண்டும். அல்லது பள்ளிப் படிப்பின் கடைசி 5 ஆண்டுகள் தமிழகத்தில்
படித்திருக்க வேண்டும்.இல்லையெனில், விண்ணப்பதாரரின் தாய், தந்தையர்
தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், பள்ளிப் படிப்பை அவர் பிற மாநிலங்களில்
மேற்கொண்டவராகவும் இருந்தால் இருப்புச் சான்றிதழை அவர் சமர்ப்பிக்க
வேண்டும். இந்தஅரசாணைப்படியே கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல்
வெளியிடப்படுகிறது என்றனர் அவர்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...