இருசக்கர வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால், சாவியை பறித்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வி
இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோடை விடுமுறைக்கு பின்
இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
குறித்து பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பள்ளிகளுக்கு சுற்றரிக்கை
அனுப்பி உள்ளார்.
அதில் இலவச பஸ் பாஸ் பெறுவதற்கான பட்டியலை 'சிடி'யாக தயார் செய்து 10ம் தேதிக்குள் போக்குவரத்து கழக வணிக மேலாளரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை விட கூடுதல் மாணவர்களை எக்காரணம் கொண்டும் ஏற்றி செல்ல அனுமதிக்க கூடாது. வாகனங்களின் மேற்கூரை, பஸ் படிக்கட்டுகளில் தொங்கி செல்ல அனுமதிக்க கூடாது. ரோட்டை கடக்கும் போது ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கூட்டாக சேர்ந்து செல்லக் கூடாது.
'டிவைடர்' குறுகே தாண்டி செல்ல கூடாது. ரோட்டில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் மட்டுமே கடந்து செல்ல வேண்டும்.அனைத்து பள்ளிகளிலும் படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் விபத்து பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவரை அழைத்து தலைமை ஆசிரியர் எச்சரிக்க வேண்டும். அம் மாணவர் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தால், பெற்றோர் முன்னிலையில் எச்சரிக்க வேண்டும். தொடர்ந்து இத் தவறை செய்யும் மாணவரிடம் இருந்து இலவச பஸ் பாஸ் பயண அட்டையை திரும்ப பெற வேண்டும்.
பள்ளி இறை வணக்கத்தின் போது சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்க வைக்க வேண்டும். 16 முதல் 18 வயது உடைய மாணவர்கள் ஓட்டுனர் உரிமம் பெறாமல் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது.
எச்சரித்தும் மாணவர் வர நேர்ந்தால் வாகனத்தின் சாவியை எடுத்து வைத்து பெற்றோரை வரவழைத்து எச்சரித்து ஓப்படைக்க வேண்டும். பள்ளிக்கு அலைபேசி கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது, என
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...