நாடு முழுவதும் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய உயர்வுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்தாண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து, முன்தேதியிட்டு, இது அமலுக்கு வருகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியங்கள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கப்படுகிறது. முதல் ஊதியக் குழு, 1946ல் உருவாக்கப்பட்டது. கடைசியாக,கடந்த, 2006ல், 6வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு, 2008ல், நடைமுறைக்கு வந்தது.நீதிபதி, ஏ.கே.மாத்துார் தலைமையிலான, ஏழாவது ஊதியக் குழு,கடந்த, 2013ல் அமைக்கப்பட்டது. இந்தக் குழு, தன் பரிந்துரையை, கடந்த ஆண்டு நவம்பரில் தாக்கல் செய்தது. பல்வேறு துறைகளின் அரசு செயலர்கள் குழு, இதை பரிசீலித்து, தன் அறிக்கையை, சமீபத்தில் மத்திய அரசிடம் அளித்தது.
ஒப்புதல்
அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, 23.5 சதவீதமும், ஓய்வூதியதாரர்களுக்கு, 24 சதவீதமும் ஊதிய உயர்வும் அளிக்கப்படுகிறது. இதன் மூலம், அரசுக்கு, கூடுதலாக, 1.02 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் கிடைக்கும்...
இந்த ஊதிய உயர்வினால், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவர். ஊதிய உயர்வு, இந்தாண்டு, ஜனவரி, 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத அடிப்படை சம்பளம், 7,000 ரூபாயில் இருந்து, 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.தற்போது அமைச்சரவை செயலர் பதவியில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச சம்பளம் வழங்கப்படுகிறது. இது, 90 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2.25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படுவதால், புதிதாக சேரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான மாத அடிப்படை சம்பளம், 23 ஆயிரம் ரூபாயில் இருந்து, 56 ஆயிரம் ரூபாயாக உயரும்.ராணுவத்தில் சேரும், ஒரு சிப்பாயின் மாத அடிப்படை சம்பளம் 8,460ல் இருந்து, 21,700 ஆக உயருகிறது. 'கடந்த, 70 ஆண்டுகளில் அளிக்கப்பட்ட ஊதிய உயர்வு விகிதத்துடன் ஒப்பிடும்போது,இது மிகவும் குறைவு என்றபோதும், சர்வதேச பொருளாதார மந்தநிலை மற்றும் மத்தியஅரசின் நிதி நிலையுடன் ஒப்பிடுகையில், இந்த ஊதிய உயர்வு மிகச் சிறந்ததாக உள்ளது' என, பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தாண்டுக்குள் 'அரியர்ஸ்'
ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று கூறியதாவது:ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான, ஆறு மாதங்களுக்கான, 'அரியர்ஸ்' பணம் இந்தஆண்டுக்குள் வழங்கப்படும். ஆண்டு ஊதிய உயர்வு, 3 சதவீதமாக இருக்கும்.கிராஜுவிட்டி எனப்படும் பணிக்கொடை, 10 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. வீடு கட்ட வழங்கப்படும் முன்பணம், 7.5 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
கார், வீடு விற்பனை உயரும்
* புதிய ஊதிய உயர்வு மற்றும், 'அரியர்ஸ்' ஆகியவற்றால், கார் மற்றும் வீடு, மனைகள் விற்பனை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
* பணப் புழக்கம் அதிகரிப்பதால், மக்கள் செலவிடுவதும் உயரும், முதலீடுகளும் உயரும்; இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
* ஆறாவது ஊதியக் குழு, 2008ல் தன் அறிக்கையை தாக்கல் செய்தது. 2006 ஜனவரியில் இருந்து நடைமுறைக்கு வந்ததால், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு,27 ஆயிரம் கோடி ரூபாய் அரியர்ஸ் பணமாக கிடைத்தது.
* இதனால் கார்களின் விற்பனை, அந்த ஆண்டில், 20 சதவீதமும், அதற்கடுத்த ஆண்டில், 22 சதவீதமும் உயர்ந்தது. இதேபோல் தங்கம், வீடு, மனைகளிலான முதலீடுகளும் அதிகரித்தது.
* தற்போதும், அதுபோன்று மக்கள் முதலீடுகளை செய்வதுடன், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க முன்வருவர். இதனால், பண வீக்கம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், விலைவாசி சற்று உயர்ந்தாலும், அதனால் பெரிய பாதிப்பு இருக்காது என,நிபுணர்கள் கூறுகின்றனர்.தொழிற்சங்கங்கள் கூறிய மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை. அடிப்படை ஊழியர்களுக்குக் கூட ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளதாக மேம்போக்காக தெரியும். ஆனால், மத்திய அரசின் காப்பீட்டு திட்டம், ஓய்வூதிய திட்டங்களுக்கு பிடிக்கும் தொகையை கணக்கிட்டால், தற்போது வாங்கும் ஊதியத்தை விட, குறைவான சம்பளத்தையே பெறுவார். மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் இந்தஊதிய உயர்வை திருத்தி அமைக்க கோரி, திட்டமிட்டபடி, ஜூலை 11 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் நடக்கும்.
சுந்தரமூர்த்திபொருளாளர், மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனம்
மக்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும்
மத்திய அரசின் ஓய்வுபெற்ற வருவாய் துறை செயலர், எம்.ஆர்.சிவராமன் கூறியதாவது:கடந்த, 70 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகக் குறைந்த அளவு ஊதியத்தை உயர்த்த, ஊதியக் குழு பரிந்துரை செய்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். உண்மையில், இப்போது மத்திய அரசின் அடிமட்ட ஊழியர் ஈட்டக்கூடிய வருமானம் என்பது, நாட்டின் சராசரி தனிநபர் வருமானத்தை காட்டிலும் அதிகம்.ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்படுவதால், மத்திய அரசுக்கு, ரூ.1.02 லட்சம் கோடி வரை நிதிச்சுமை ஏற்படும்.சம்பள உயர்வு மட்டுமின்றி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வும் ஜனவரி வரையிலான காலத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. இதனை மனதில் வைத்து, மத்திய அரசின் இந்த முடிவை ஊழியர்கள் ஏற்க வேண்டும். இன்னும் அதிகமான ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், மக்களின் வெறுப்பை, அவர்கள் சம்பாதிக்க நேரிடும்.ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படியான சம்பள உயர்வு,மாநில அரசுகளின் நிர்வாகத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ம.பி., ராஜஸ்தான், மஹாராஷ்டிரா போன்ற, நிதி கையிருப்பு உள்ள மாநிலங்களுக்கு, ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பதில், பெரிய பிரச்னையில்லை. ஆனால், நிதிப்பற்றாக்குறை உள்ள தமிழகம், கேரளா, ஆந்திரா போன்ற மாநில அரசுகளுக்கு, ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிப்பது, மேலும் சுமையாகவே அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுவரை பெற்று வந்த, 52 படிகள் மற்றும் பண்டிகை முன்பணம், ரத்து செய்யப்பட்டு உள்ளது. வீட்டு வாடகைப்படி குறைக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க கடைப்பிடிக்கப்பட்டு வந்த விதிமுறைகளை முற்றிலும் சிதைத்து விட்டனர். எனவே, இந்த குறைகளை நீக்கும்படி, ஏற்கனவே அறிவித்தபடி, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நடத்த உள்ளோம்.
சூரியபிரகாசம் பொதுசெயலர்,தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம்
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையில்,வரலாறு காணாத ஊதிய உயர்வைப் பெறும் மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
அருண் ஜெட்லி, நிதி அமைச்சர், பா.ஜ.,
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...