தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கூட்டம் அலைமோதுகிறது. ' பொறியியல் படிப்புகளைவிடவும், பி.காம் உள்ளிட்ட கலைப் பிரிவு பாடங்களை நோக்கியே மாணவர்கள் அணிவகுக்கிறார்கள்' என்கின்றனர் கல்வியாளர்கள்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்தே,கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் கூட்டம் அலைமோதியது. இன்றளவும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அறிவியல் பாடத்தை பிரதானமாக எடுத்துப் படித்த மாணவர்கள்கூட, பி.காம் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். தேர்வில் அதிகபட்ச மதிப்பெண் எடுத்த அறிவியல் மாணவர்கள் பலர், பிரபலமான கலைக் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்திருந்தனர். பல மாவட்டங்களில் பி.காம் சீட்டுகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டது. சென்னையில் உள்ள பிரபலமான கலைக் கல்லூரியில், பி.காம் சீட்டுகள் மட்டும் ஏழு லட்சம் முதல் பத்து லட்ச ரூபாய் வரையில் விலை பேசப்பட்டன.
பெற்றோர்களும் சத்தம் இல்லாமல் பணம் கொடுத்து அட்மிஷன் வாங்கிவிட்டனர். கோவையில் உள்ள சில கல்லூரிகள் ஒரு லட்சம் கேபிடேஷன் கட்டணம் என்றும், செமஸ்டருக்கு நாற்பதாயிரம் கட்டணம் என்றும் பட்டியல் போட்டு வசூல் செய்துவிட்டன. இதைவிடக் கொடுமை, கடந்தாண்டு அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் ஐம்பதாயிரம் பொறியியல் படிப்புக்கான இடங்கள் நிரப்பப்படவில்லை. சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டுவிட்டதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.
தற்போது கலைப் பிரிவு பாடங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஒற்றைச்சாளர முறையில்மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.பி.காம் படிப்புகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பது பற்றி நம்மிடம் விளக்கிய கல்வியாளர் ஒருவர், " இன்றைக்கு நேற்றல்ல. சுமார் 25 வருடங்களாகவே பி.காம் படிப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த ஒரு பட்டப் படிப்பை முடித்துவிட்டாலும் மார்கெட்டிங்பிரிவு, வர்த்தகம், ஃபைனான்ஸ், வங்கி, கணக்குப் பதிவியல், ஆடிட்டிங் உதவியாளர் என பல துறைகளிலும் மாணவர்கள் கோலோச்சலாம். அதற்குத் தகுந்தமாதிரி, பி.காம், பி.காம்(சி.ஏ), பி.காம்(பேங்கிங் அண்ட் இன்ஸ்யூரன்ஸ்) என பி.காம் படிப்பில் ஏகப்பட்ட வெரைட்டிகளைப் புகுத்திவிட்டனர்.
மாணவர்களின் மதிப்பெண்ணுக்கு ஏற்ற வகையில், ஏதாவது ஒரு பி.காம்பிரிவில் சேர்ந்து கொள்கின்றனர். தவிர, சாப்ட்வேர் நிறுவனங்களில், கணினியைக் கையாளும் திறமை உள்ளவர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கின்றனர். பி.இ பிரிவில் கணிப்பொறி அறிவியல் படித்தவர்களை விடவும், கலைப் பிரிவு மாணவர்களுக்கு வேலை எளிதாகக் கிடைத்துவிடுகிறது.பி.இ மாணவர்களுக்குக் கொடுப்பது போல், அதிக சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை. ஒரு பி.இ மாணவருக்குக் கொடுக்கப்படும் ஊதியத்தை மூன்று, நான்கு பி.காம் மாணவர்களுக்குக் கொடுத்துவிடலாம் என பல நிறுவனங்கள் கணக்குப் போடுகின்றன.
பத்தாம் வகுப்பில் இருந்தே லேப்டாப் உள்ளிட்ட கணினி உபகரணங்களை மாணவர்கள் கையாள்வதால், கணினிப் பயிற்சியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தவிர, அறிவியல் பாடப் பிரிவில் கடினமாக உழைத்தும் மாணவர்களுக்கு சரியான வேலை கிடைப்பதில்லை. அதுவே, எந்த காலத்திற்கும் கலைப் பிரிவு வகுப்புகள் மாணவர்களைக் கைவிட்டதில்லை. இதனை மிகத் தாமதமாகத்தான் பெற்றோர் உணர்ந்திருக்கிறார்கள். கலை அறிவியல் கல்லூரிகளை நோக்கிப் படையெடுப்பதற்கும் இதுதான் காரணம்" என்றார் விரிவாக.
பாடப் பிரிவுகளுக்கு டிமாண்ட் அதிகரிக்கும் போதெல்லாம், கல்விக் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்திவிடுகின்றன தனியார் கல்விக் கூடங்கள். அரசு இயந்திரங்களும் மறைமுகக் கட்டணக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றன எனக் குமுறுகின்றனர் பெற்றோர்கள்.
தமிழகத்தில் கலை அறிவியல் பாடங்களில் அதிக வேலை இல்லா பட்டதாரிகளை உருவாக்குவது B.COM பாடப்பிரிவே. இதுதான் நிதர்சனமான உண்மை.
ReplyDelete