மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6ம்
வகுப்பில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில், பிளஸ் 1 சேர்க்கையில்
கூட்டம் அலைமோதுவதால் தலைமை ஆசிரியர்கள் செய்வதறியாமல் தவித்து
வருகின்றனர்.
கடலுார் மாவட்டத்தில் மொத்தம் 2,106
பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், நர்சரி முதல் பிளஸ் 2 வரையில் கல்வி
கற்பிக்கப்பட்டு வருகிறது. உயர் மற்றும் மேல்நிலைப் பிரிவில் 235 அரசு
பள்ளிகளும், 46 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும், 136 மெட்ரிக் என மொத்தம்
417 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
கல்வியில் பின்தங்கியுள்ள கடலுார்
மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம்
படிப்படியாக உயர்ந்து வருகிறது.
கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பில் தேர்வு
எழுதிய 33 ஆயிரத்து 687 மாணவர்களும், பிளஸ் 2 தேர்வு எழுதிய 29 ஆயிரத்து
899 மாணவர்களில் 25 ஆயிரத்து 304 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய
மொத்த மாணவர்களில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் அரசு பள்ளி
மாணவர்களாவர். இதில், 10ம் வகுப்பில் மொத்த தேர்ச்சியில் அரசு பள்ளி
மாணவர்கள் 46.67 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோன்று, பிளஸ் 2
மொத்த தேர்ச்சியில் 46.57 சதவீதத்தினர் அரசு பள்ளி மாணவர்களாவர்.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் அரசு
உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை கணிசமாக
குறைந்துள்ளது. கடந்தாண்டு ஒரு அரசு பள்ளியில் 6ம் வகுப்பில் சராசரியாக 300
மாணவர்கள் சேர்ந்த நிலையில், இந்தாண்டு 200 மாணவர்கள் மட்டுமே
சேர்ந்துள்ளனர்.
அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் 6ம்
வகுப்பு சேர்க்கைக்கு கூட்டம் அலைமோதுகிறது. இதற்காக பெற்றோர்கள் அரசியல்
பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்களின் சிபாரிசு
கடிதங்களுடன் தனியார் பள்ளிகளில் தவம் கிடக்கின்றனர்.
ஆனால், பிளஸ் 1 சேர்க்கைக்கு அரசு
பள்ளிகளில் கூட்டம் அலைமோதுகிறது. பிளஸ் 1 சேர்க்கையில் கூட்டத்தை சமாளிக்க
முடியாமலும், 6ம் வகுப்பு சேர்க்கை குறைந்து வருவதாலும், உயர்
அதிகாரிகளுக்கு என்ன பதில் சொல்வது எனவும், சேர்க்கை இலக்கை எப்படி அடைவது
என புரியாமல் அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தவித்துக் கொண்டுள்ளனர்.
காரணம் என்ன?
அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பில் சேர்க்கை
குறைவாக இருப்பதும், அதே நேரத்தில் பிளஸ் 1 சேர்க்கைக்கு கூட்டம்
அலைமோதுவது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியார்
பள்ளிகளில் படிக்க வைப்பதே கவுரவம் என கருதுகின்றனர். அந்த மாணவர் 10ம்
வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் குறைந்தால், அதே பள்ளி நிர்வாகம்
அவர்களை பிளஸ் 1 வகுப்பில் சேர்த்துக் கொள்வதில்லை.
அதனால் வேறு வழியின்றி அவர்கள் அரசு
பள்ளிகளுக்கு வருகின்றனர். மேலும், அரசு பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்களுக்கு
சைக்கிள், மடிக்கணினி இலவசமாக வழங்கப்படுகிறது. கல்வி உதவித் தொகையும்
கிடைக்கிறது.
இதனாலும், பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை
10ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் படிக்க வைத்துவிட்டு, பிளஸ் 1
வகுப்பில் அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...