மருத்துவக் கழிவுகள் மேலாண்மை
விதிகளின்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 48 மணி நேரத்துக்கு
மேல் கழிவுகளை சேமித்து வைத்திருக்கக் கூடாது என பயிற்சிக் கருத்தரங்கில்
அறிவுறுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து
மருத்துவமனைகளின் மருத்துவர்கள், நிர்வாகத்தினருக்கு மருத்துவக் கழிவுகள்
மேலாண்மை விதிகளை அமல்படுத்துவது குறித்த பயிற்சிக் கருத்தரங்கு
செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கருத்தரங்கை தொடங்கிவைத்து மாவட்ட வருவாய்
அலுவலர் ம.க. குழந்தைவேல் பேசியது:
இந்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை
மாறுபாடு அமைச்சகத்தால் 1998ஆம் ஆண்டே மருத்துவக் கழிவுகள் மேலாண்மை
விதிகள் கொண்டுவரப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில் இப்போதைய
சூழலுக்கு ஏற்ப பல்வேறு திருத்தங்களைக் கொண்டு மருத்துவக் கழிவுகள்
மேலாண்மை விதிகள்-2016 என வெளியிட்டுள்ளது. இதன்படி, மருத்துவக் கழிவுகளை
வெளியேற்றும் நிறுவனங்கள், பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு
நிலையங்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இதர துறைகளுக்கு
பல்வேறு நிலைகளில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை விதிமுறைகளை
மீறாமல் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். தமிழகத்திலேயே இந்த விதிகளை
அமல்படுத்துவது குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவை அமைத்து
முதலில் பயிற்சி கருத்தரங்கை நடத்துவது திருநெல்வேலி மாவட்டம் மட்டுமே.
இதேபோல, இந்த விதிகளை செயல்படுத்துவதிலும் திருநெல்வேலி மாவட்டம் பிற
மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்றார் அவர்.
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கிருபானந்த ராஜன்
பேசியது: மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகள்-2016இன் படி பல்வேறு
கட்டுப்பாடுகளை அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் பின்பற்ற
வேண்டும். மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்துக்கு மேல் சேமித்து வைக்கக்
கூடாது. அவற்றை முறையாக அகற்றி சுத்திகரிப்பு நிலையத்துக்கு ஒப்படைக்க
வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் நான்குனேரி அருகேயுள்ள பொத்தையடியில்
சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்துக்கு தனியார், அரசு மருத்துவமனைகளுக்கு
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி மருத்துவக் கழிவுகளை சுகாதார முறையில்
அப்புறப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் இருந்து சேகரமாகும் கழிவுகளை
அதன் வகைகளுக்கு ஏற்ப தனித்தனியாகப் பிரித்து பிளாஸ்டிக் பைகளில் சேகரித்து
அந்த பைகளுக்கு பார்கோடு அமைக்க வேண்டும். பின்னர், இக்கழிவுகளைக்
கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட வேண்டும்.
மாவட்டத்தில் எந்தப் பகுதியில் மருத்துவ முகாம் நடந்தாலும் மாவட்ட அளவிலான
கண்காணிப்புக் குழுவிடம் உரிய முறையில் அனுமதி பெற வேண்டும். இன்னும்
பல்வேறு வழிகாட்டுதல்களை இந்த புதிய சட்டத்தில் மத்திய அரசு வகுத்து
தந்துள்ளது என்றார்.
இக் கூட்டத்தில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பி.
எழில்மதி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்ளிட
மருத்துவ அலுவலர் இளங்கோ, மாநகராட்சியின் மாநகர நகர் நல அலுவலர் டாக்டர்
ராஜசேகர், கிரீன்விரான் டிரஸ்ட் மருத்துவர் ரா. அன்புராஜன், இந்திய
மருத்துவக் கழக திருநெல்வேலி மாவட்ட தலைவர் பிரதாப் ஞானமுத்து,
பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஜோதிமுருகன் உள்ளிட்ட பலர் பேசினர்.
இக் கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார்
மருத்துவமனை மருத்துவர்கள், நிர்வாகத்தினர், மேலாண்மைக் குழுவினர் என பலர்
கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...