பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆங்கில வழி பாடத்
திட்டத்தில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சிலர், அண்ணா
பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்பதற்காகவே தமிழ் வழி படிப்பை தேர்வு
செய்திருக்கின்றனர்.
பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் படித்து
வரும் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேரும்போது, ஆங்கில வழியில்
பாடங்களைப் படிக்க முடியாமல் திணறினர்.
இதையடுத்து, சென்னை அண்ணா பல்கலைக்கழக
வளாகத்தில் அமைந்துள்ள கிண்டி பொறியியல் கல்லூரியிலும், பல்கலைக்கழக
உறுப்புக் கல்லூரிகளிலும் இயந்திரவியல் (மெக்கானிக்கல்), கட்டடவியல்
(சிவில்) ஆகிய இரண்டு பிரிவுகளில் மட்டும் 2010-ஆம் ஆண்டில் தமிழ் வழியில்
பொறியியல் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இதன்படி, மெக்கானிக்கல் பிரிவில் 660
இடங்களும், சிவில் பிரிவில் 718 இடங்களும் என மொத்தம் 1,378 இடங்கள் தமிழ்
வழியில் உள்ளன. தொடக்கத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு
கிடைக்காத நிலை இருந்தது. வளாகத் தேர்விலும் வாய்ப்பு சரிவர
அளிக்கப்படாமலும் இருந்தன.
இந்த நிலையில், தமிழ் வழியில்
படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கப்படும்
என்ற தமிழக அரசு ஆணையை முன்னர் பிறப்பித்தது. இதன்காரணமாக, தமிழ் வழியில்
பயின்றோருக்கு நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அண்மையில்
வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனால், தமிழ் வழி பொறியியல் படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
பொதுப் பிரிவு கலந்தாய்வின் இரண்டாம் நாள்
வரை இந்தப் படிப்புகள் ஒருவராலும் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், மூன்றாம்
நாளில் தமிழ் வழியில் கட்டடவியல் பிரிவை 6 பேரும், இயந்திரவியல் பிரிவை 5
பேரும் என 11 பேர் தேர்வு செய்துள்ளனர்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜோஸ் மான்ஃபோர்ட்
கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவை தேர்வு செய்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1128 மதிப்பெண்கள் பெற்ற இவரின் கட்-ஆஃப்
193.75.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
"எம்.ஐ.டி.-யில் பி.டெக். விமான தொழில்நுட்ப (ஏரோனாட்டிகல்) படிப்பு
கிடைக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பதற்காக, தமிழ்
வழி இயந்திரவியல் பிரிவைத் தேர்வு செய்தேன்' என்றார்.
இதுபோல, பிளஸ் 2 தேர்வில் 1117 மதிப்பெண்கள்
பெற்று பி.இ. கட்-ஆஃப் 193.25 பெற்றிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச்
சேர்ந்த அகில், தமிழ் வழி கட்டடவியல் பிரிவுதேர்வு செய்தார். இதுகுறித்து
அவர் கூறுகையில், "கிண்டி பொறியியல் கல்லூரியிலேயே படித்தாக வேண்டும்
என்பதற்காக தமிழ் வழியை தேர்வு செய்தேன்' என்றார்.
இதேபோல், மேலும் சில மாணவர்களும் பள்ளி வரை ஆங்கில வழியில் படித்து, தமிழ் வழி பொறியியல் படிப்பை தேர்வு செய்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...