Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பரிசோதனை ரகசியங்கள் 28: ‘பெட்’ ஸ்கேன் யாருக்கு அவசியம்?

உடலின் உள் உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய அரை நூற்றாண்டுக்கு முன்புவரை மருத்துவர்களுக்கு அதிகம் உதவியது எக்ஸ்-ரே பரிசோதனை. அதைத் தொடர்ந்து அல்ட்ரா சவுண்ட், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என ஒன்றன் பின் ஒன்றாக வந்துசேர்ந்தன. இப்போதைய புதிய வரவு ‘பெட்' ஸ்கேன்.

‘பெட்’ ஸ்கேன் என்றால் என்ன?
எக்ஸ் கதிர்வீச்சையும் காமா கதிர்வீச்சையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி, மனித உடலில் உள்ள செல்களின் அமைப்பையும் செயல்பாடுகளையும் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டும் கருவிக்கு ‘பெட்' (PET) ஸ்கேன் என்று பெயர். ‘பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி' (Positron Emission Tomography) என்பதன் சொற்சுருக்கம் இது. என்றாலும், இதை ‘பெட் - சி.டி. ஸ்கேன்’ (PET CT Scan) என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அணுக்கதிர் வீச்சை நன்மைக்கும் பயன்படுத்தலாம் என்பதற்கு இந்தக் கருவி ஓர் உதாரணம்.
‘பெட் சி.டி.’ ஸ்கேனின் சிறப்பம்சம்
முன்பெல்லாம் உடலில் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கம். உடலின் உள்ளே கட்டி இருப்பது அவற்றில் தெரியும். ஆனால், அந்தக் கட்டி புற்றுநோய் கட்டியா, சாதாரணக் கட்டியா என்பது ஆரம்பத்தில் தெரியாது. அதற்காக ஊசிக்குழலை உடலுக்குள்ளே செலுத்தித் திசுக்களை உறிஞ்சி எடுத்து அல்லது அறுவைசிகிச்சை செய்து, பாதிக்கப்பட்ட உறுப்பிலிருந்து சிறிய அளவில் திசுவை வெளியில் எடுத்து ‘பயாப்சி' பரிசோதனையில் ஆராய்வார்கள்.
அதில் காணப்படும் செல் வகையைப் பொறுத்து அது புற்றுநோய் கட்டியா, சாதாரணக் கட்டியா எனக் கண்டறிவார்கள். இந்த அறுவைசிகிச்சையால் நோயாளிக்குச் சில நாட்களுக்கு வலி இருக்கும். இப்பரிசோதனை முடிவைத் தெரிந்துகொள்ள ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். இந்த நிலைமையை மாற்றிவிட்டது ‘பெட்' ஸ்கேன்.
சி.டி. அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் உடல் உறுப்புகளின் அளவு, வடிவம், மாறுபாடுகள் மற்றும் குறைபாடுகள் தெரியும். ஆனால், அந்த உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள முடியாது. ‘பெட் சி.டி.' ஸ்கேனில் முக்கிய உடல் உறுப்புகளின் தோற்றத்தைக் காண்பதுடன், அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதையும் காண முடியும்.
அந்த உறுப்புகளில் கட்டி உள்ளதா, ரத்த ஓட்டம் சரியாக உள்ளதா, செல்களில் ஆக்ஸிஜன் கிரகிக்கப்படுகிறதா, செல்களுக்குள் குளுகோஸ் சென்று பயனடைகிறதா என்பது போன்ற விவரங்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். செல்களுக்குள் நிகழ்கிற வேதிவினைகளை இது தெரிவிப்பதால், அங்கு ஏற்படும் மிகச் சிறிய மாற்றங்களைக்கூடத் தெளிவாகக் காண்பித்துவிடுவது இதன் சிறப்பு.
வேலை செய்யும் விதம்
‘பெட் சி.டி.' ஸ்கேன் படம் எடுப்பதற்கு, ‘ரேடியோ டிரேசர்' (Radio tracer) எனும் ‘அணுக் கதிர்வீச்சுப் பொருள்' உதவுகிறது. எஃப்.டி.ஜி. (Fluoro deoxy glucose) எனும் மருந்து ரேடியோ டிரேசராக வேலை செய்கிறது. ஸ்கேன் எடுக்கப்பட வேண்டியவரின் சிரை ரத்தக்குழாய் வழியாக உடலுக்குள் இதைச் செலுத்துவார்கள். வழக்கமாக நம் உடல் செல்கள் செயல்படுவதற்குக் குளுகோஸ் அவசியம். ஆகவே, இந்தக் குளுகோஸும் செல்களுக்குள் சென்றுவிடும். எஃப்.டி.ஜி. உடலுக்குள் செலுத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில் உடல் முழுவதும் சுற்றிவிடும். அதன்பின் ‘பெட் சி.டி.’ ஸ்கேன் எடுப்பார்கள்.
செல்களுக்குள் நுழைந்த எஃப்.டி.ஜி.யானது ‘பாசிட்ரான்' கதிர்களை வெளியிடும். பொதுவாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்கள் வேகமாகப் பிரிந்து கட்டுப்பாடின்றி வளர்ச்சி பெற்றிருக்கும். அந்த இடங்களில் குளுகோஸ் அதிக அளவில் தங்கியிருக்கும். எனவே அங்கு இந்தக் கதிர்கள் அதிக அளவில் வெளிப்படும்.
‘பெட் சி.டி.' ஸ்கேன் கருவியில் உள்ள கேமரா இதைக் கண்டறிந்து கணினிக்கு அனுப்ப, அங்கு அவை முப்பரிமாணப் படங்களாக மாற்றப்பட்டுக் கணினித் திரையில் தெரியும். புற்றுநோய் பாதிப்புள்ள இடங்களை நெருப்புபோல் காட்டும். இதற்கு `அக்னி புள்ளிகள்’ (Hot spots) என்று பெயர். புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு அதே இடங்களை மீண்டும் ஸ்கேன் எடுத்தால் சாதாரணமாகக் காட்டும். இதற்கு `குளிர் புள்ளிகள்’ (Cold spots) என்று பெயர். இப்படி, புற்றுநோயைக் கண்டுபிடிக்கவும், அதற்குத் தரப்பட்ட சிகிச்சை பலன் தருவதை உடனடியாகத் தெரிந்துகொள்ளவும் இது உதவுகிறது.
யாருக்கு அவசியம்?
# புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகச் சந்தேகம் உள்ள எல்லோருக்கும் இது தேவை. காரணம், புராஸ்டேட் புற்றுநோய் உள்ளிட்ட எல்லா வகைப் புற்றுநோய்களையும் மிகமிக ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க இந்த ஸ்கேன் பயன்படுகிறது.
# உடலில் புற்றுநோய் பரவி உள்ளதா என்பதை அறியவும் இது தேவைப்படுகிறது. மற்ற ஸ்கேன்களைவிட உடலில் புற்றுநோய் பரவியுள்ள பகுதியை மிகத் துல்லியமாக இதில் காண முடிகிறது.
# புற்றுநோய்க்குச் சிகிச்சை எடுப்பவர்களுக்கு, அது எந்த அளவுக்குப் பலன் கொடுத்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளவும் இப்பரிசோதனை செய்யப்படுகிறது.
# சிகிச்சைக்குப் பிறகு அதே இடத்தில் மீண்டும் புற்றுநோய் வந்துள்ளதா அல்லது வேறு இடத்தில் வந்துள்ளதா என்பதை மிக ஆரம்ப நிலையிலேயே தெரிந்துகொள்ளவும் இது உதவுகிறது.
# இதயத் தசைகளுக்கு ரத்தம் எப்படிச் செல்கிறது, அதில் ஏதேனும் தடை உள்ளதா, மாரடைப்புக்கு வாய்ப்புள்ளதா என்பதையும் இதில் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.
# மூளை மற்றும் நரம்புகள் எப்படி வேலை செய்கின்றன என்பதையும், மூளையில் கட்டி உள்ளதா, பக்கவாதம் வர வாய்ப்புள்ளதா என்பதையும் இது தெரிவிக்கிறது.
# வயிற்றுப் பிரச்சினைகள், ஹார்மோன் பிரச்சினைகள், வலிப்பு நோய், அல்சைமர் நோய், மன அழுத்தம், ஞாபக மறதி போன்ற சிக்கலான விஷயங்களைக்கூட ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துச் சொல்கிறது.
முன் ஏற்பாடுகள் என்ன?
# ‘பெட்' ஸ்கேன் பரிசோதனைக்கு வெறும் வயிற்றில் செல்ல வேண்டும். உணவு சாப்பிட்டு 4-6 மணி நேரத்துக்குப் பிறகு ஸ்கேன் எடுக்கலாம்.
#முடிந்தவரை ஸ்கேன் எடுக்கப்படும் மருத்துவமனையில் அல்லது ஸ்கேன் சென்டரில் கொடுக்கப்படும் ஆடைகளையே அணிந்துகொள்ள வேண்டும்.
# மோதிரம், வளையல், கழுத்து நகைகள், கைக் கடிகாரம், ஊக்கு, பொத்தான், கண்ணாடி, பல் செட், இடுப்பு பெல்ட் போன்றவற்றைக் கழற்றிவிட வேண்டும்.
# காசு, சாவி, ஏ.டி.எம். கார்டு, உலோகப் பொருட்கள் போன்றவற்றை வெளியில் எடுத்துவிட வேண்டும்.
# பயனாளிக்கு ஏதேனும் மருந்து ஒவ்வாமை இருந்தால், ஸ்கேன் எடுப்பதற்கு முன்பே சொல்லிவிட வேண்டும்.
# நீரிழிவு நோயாளிகள் ஸ்கேன் பரிசோதனைக்கு வரும்போது சாப்பிட வேண்டிய மாத்திரை மற்றும் போட வேண்டிய இன்சுலின் அளவை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆபத்து உண்டா?
# இந்தக் கதிர்வீச்சால் உடலுக்குத் தீங்கு ஏற்படும் வாய்ப்பு குறைவு. அதேநேரம் சி.டி. ஸ்கேனைவிட மூன்று மடங்கு கதிர்வீச்சு அதிகம். உடலுக்குள் செலுத்தப்பட்ட கதிர்வீச்சு ஒரு சில மணி நேரத்தில் செயலிழந்துவிடும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தப் பரிசோதனையைச் செய்வதில் கூடுதல் கவனம் தேவை.
யாருக்கு விலக்கு?
# கர்ப்பிணிகள், கர்ப்பமடைய வாய்ப்புள்ளவர்கள், தாய்ப்பால் தரும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்தப் பரிசோதனை அவசியம் தேவைப்பட்டால் மட்டுமே செய்யப்படும்.
# சிறுநீரக நோய், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசத் தடை நோயுள்ளவர்கள் இதைச் செய்துகொள்வதற்கு முன்பு டாக்டரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.
# ‘பெட் சி.டி.' ஸ்கேனில் இதயம், மூளை உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளின் தோற்றத்தைக் காண்பதுடன், அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதையும் காண முடியும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive