சென்னை: ''இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' சார்பில், ஆண்டிற்கு,
18 ராக்கெட்களை விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என,
இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்து உள்ளார்.
பி.எஸ்.எல்.வி., - சி 34
ராக்கெட் மூலம், 'இஸ்ரோ'வின் கார்டோசாட்- 2; அமெரிக்காவின், -13; கனடா,
இரண்டு; ஜெர்மனி, இந்தோனேஷியா தலா ஒன்று; சத்யபாமா பல்கலை ஒன்று; புனே
பொறியியல் கல்லுாரி ஒன்று என, மொத்தம், 20 செயற்கைக்கோள்கள், வெற்றிகரமாக,
நேற்று காலை விண்ணில் செலுத்தப்பட்டன.
இந்த வெற்றி குறித்து, 'இஸ்ரோ' தலைவர் கிரண்குமார் அளித்த பேட்டி: ராக்கெட்
ஏவும் செலவை குறைக்க, செயற்கைக்கோளின் வடிவம் மற்றும் தொழில்நுட்பத்தில்
மாற்றம், எடை குறைத்தல் உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நமக்கு, பூமி ஆராய்ச்சி, தகவல் தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, பருவநிலை
கண்டறிதல் என, 70 செயற்கைக்கோள்களின் தேவை உள்ளது. நம்மிடம், 35
செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் உள்ளன. தற்போது, ஆண்டிற்கு, 12 ராக்கெட்களை
விண்ணில் செலுத்தி வருகிறோம். இதை, 18 ராக்கெட்களாக அதிகரிக்க, நடவடிக்கை
எடுத்து வருகிறோம். ராக்கெட் ஏவும் நடவடிக்கை அதிகரித்து வருவதால்,
ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு கட்டடம் ஒன்றை, புதிதாக கட்ட
திட்டமிட்டுள்ளோம். கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள்,
செயற்கைக்கோள்களை உருவாக்க வாய்ப்பளிக்கப்படும். இதற்கான அனைத்து
உதவிகளும், 'இஸ்ரோ' சார்பில் செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...